ஜோடிப் பொருத்தம் படு ஜோர்!

ஜோடிப் பொருத்தம் படு ஜோர்!
Published on
– உஷா ராம்கி

பாரத் மேட்ரிமோனி நிறுவனம், இந்தியாவில் இணையதள வழி ஜோடித் தேடலில் முன்னோடி. 21 வருடங்களில் வெற்றிகரமாக பத்து லட்சத்துக்கும் மேலான ஜோடிகளை திருமணம் மூலம் இணைத்துள்ளது.

இதில் என்ன ஹைலைட் என்றால், இதன் நிறுவனர் முருகவேல் ஜானகிராமன் தன்னுடைய வாழ்க்கைத் துணையை இந்த இணையதளம் மூலம்தான் கண்டெடுத்திருக்கிறார்.

உயர்தட்டு மக்களுக்கு எலீட் மேட்ரிமோனி, சமூகங்கள் வகையிலான இணையதளங்கள், இது தவிர மண்டபம் தேடல், திருமணப் பொருட்கள் வாங்குதல் என்று தனது ஆன்லைன் சேவையை பல வகைகளில் தந்து கொண்டிருந்தவர்கள், இப்போது 'ஜோடி' என்ற சாமானிய தமிழர்களுக்கான பிரத்யேக தயாரிப்போடு வருகிறார்கள்.

முருகவேல் ஜானகிராமன்
முருகவேல் ஜானகிராமன்

''தமிழருக்காக, மத வாரியாக, ஜாதி வாரியாக எக்கச்சக்கமான அறிமுகம் இருக்கு சார். அதெல்லாம் ஓகே. ஆனா, எனக்கு தமிழ்லயே படிச்சு, தமிழ்லயே ரெஜிஸ்டர் செய்யற மாதிரி வேணுமே."

"மேல் தட்டு மக்கள் நிறைய படித்தவர்கள், சம்பாதிக்கிறவர்கள். இவங்களுக்கெல்லாம் சரி… குறைந்த சம்பளம், கம்மியான படிப்பு இருக்கிற நாங்க, திருமண ஜோடியை எப்படித் தேடுறதாம்?"

இதுபோன்ற கேள்விகளுக்குத் தீர்வுதான் இந்த தமிழ் செயலி. ஐந்தாவது வரை மட்டுமே அல்லது பட்டப்படிப்பு வரை படித்தவராக இருக்கலாம். சம்பளம் குறைவு என்று நினைக்கலாம். இதில் யாராக இருந்தாலும், 'நமக்கு தமிழ்தான்' என்பவர்கள் இங்கே வரலாம். குறிப்பாக, வண்டி ஓட்டுனர்கள், செவிலியர்கள், தொழிலாளிகள், டெலிவரி செய்பவர்கள், கடை விற்பனையாளர்கள் இவர்கள் எல்லாம் தங்களுக்கான வழித்துணையைத் தேட, டிஜிட்டல் உலகத்தில் இது ஒரு எளிதான வழி.

"கொரோனாவுக்குப் பிறகு மக்கள் இன்னும் அதிக அளவில், செல்போன் உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். 4ஜி குறைந்த செலவில் கிடைக்கிறது. அப்படியிருக்க, ஒரு சுலபமான செயலியை தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்காக ஏன் செய்யக்கூடாது என்று யோசித்ததன் விளைவுதான் இந்த அறிமுகம்" என்கிறார் முருகவேல். ஆனால் ஒன்று, அங்கீகரிக்கப்பட்ட ID ஆவணம் கட்டாயம். அதனால பதிவு செய்யறவங்களுக்குப் பாதுகாப்பு இருக்கு.

"மூன்று மாதங்களுக்கு ரூபாய் 900, ஆறு மாதங்களுக்கு ரூபாய் 1,500 என்ற வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதுதாங்க விஷயம். ஒரு தமிழ் APP, அதை சுலபமாக உங்கள் அலைபேசியில் டவுன்லோட் செய்யலாம். பதிவு செய்யும்படி கேட்கும் இடத்தில், உங்கள் பெயர், முகவரி, படிப்பு, வேலை மற்றும் சம்பள விவரம் போன்றவற்றைத் தந்து, உங்கள் விவரங்களையும், நீங்கள் தேடும் வரனிடமிருந்து தாங்கள் எதிர்பார்ப்பதையும் தர வேண்டும். கட்டணத்தை செலுத்தும் வகையும் சுலபம். உங்கள் பதிவைப் பார்த்து ஒருவர், 'லைக்' அழுத்தினால் அதன் பிறகு உங்களுக்கும் சம்மதமென்றால் நீங்கள் இருவரும் வாட்ஸாப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

"மகிழ்ச்சியான குடும்பங்கள் சேர்ந்ததுதான் சமுதாயம், தேசம். அப்படிப்பட்ட மகிழ்ச்சியான குடும்பத்துக்கு ஆதாரம், மகிழ்ச்சியான தம்பதிகள். இதை மனதில் கொண்டுதான் பாரத் மேட்ரிமோனி செயல்பட்டு வருகிறது. இப்போது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உதவி செய்வதன் மூலம், எங்கள் பயணம் முழுமை அடையும் என்று நம்புகிறேன்" என்ற நம்பிக்கையுடன் பேசினார் முருகவேல்.

'அம்மா, அப்பா பார்த்து வைத்தால் சரிப்படாது' என்று நினைக்கும் இளம் தலைமுறை தங்களுக்குப் பொருத்தமானவரை தாங்களாகவே ஆன்லைனில் தேடிக்கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் டேட்டிங் செயலிகள் போல் இல்லாமல், இந்தியாவின் ஆணி வேரான குடும்பம், கலாசாரம் ஆகியவை இதில் பாதுகாக்கப்படுகின்றன. நெடுந்தூர குடும்பப் பயணத்தின் வாசலாக அமைகிறது இச்சேவை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com