உணவு பாதுகாப்புத் துறையின் 14 நெறிமுறைகள் - உங்களுக்குத் தெரியுமா? தெரியணும்!

Food Safety Department
Food Safety Department
Published on

உணவு பாதுகாப்பு துறை என்பது உணவு வணிகம் செய்வதை சுகாதாரமான முறையிலும், பாதுகாப்பான முறையிலும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும் கண்காணிக்கும் துறையாகும். இந்த தமிழக உணவு பாதுகாப்பு துறை சார்பாக 14 வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை இப்பதிவில் காண்போம்.

உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:

1. அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2. அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி, மருத்துவத் தகுதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

3. உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரைப் பகுப்பாய்வு செய்து, பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும்.

4. உணவுப் பொருட்களை ஈக்கள்/பூச்சிகள் மொய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து காட்சிப்படுத்த வேண்டும்.

5. உணவு எண்ணெயை ஒருமுறை மட்டுமே சமைக்க பயன்படுத்த வேண்டும். மீதமான பயன்படுத்திய உணவு எண்ணெயை, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அங்கீகரித்த கொள்முதலாளருக்கு மட்டும் விற்க வேண்டும்.

6. விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்திட வேண்டும்.

7. நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாகப்படும் வகையில் பரிமாறவோ/பொட்டலமிடவோ கூடாது.

8. அனுமதிக்கப்படாத நெகிழியில் (பிளாஸ்டிக்) உணவுப் பொருட்களை சூடாகவோ அல்லது இயல்பு நிலையிலோ பொட்டலமிடக் கூடாது.

9. உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர்/அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்படாத நெகிழியினை (பிளாஸ்டிக்) பயன்படுத்தக் கூடாது.

10. எவ்வகை உணவு எண்ணெய்களையும் லேபிள் விவரங்களின்றியும் பொட்டலமிடாமல் சில்லரை அடிப்படையிலும் நுகர்வோருக்கு விற்பனை செய்தல் கூடாது.

11. உணவைக் கையாளுபவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும்.

12. பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களை கொள்முதல் விற்பனை செய்யும் போது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உரிம எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விவரங்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
விருந்தினர் வரவேற்பு மற்றும் வீட்டுப் பராமரிப்பு எப்படித் தெரியுமா?
Food Safety Department

13. உணவு சமைக்க மற்றும் நொறுக்குத் தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவகங்கள்/பேக்கரி/இனிப்பகங்கள் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் அயோடின் கலக்காத உப்பு இருக்கக்கூடாது.

14. சிக்கன்-65, பஜ்ஜி, கோபி-65 போன்ற உணவுப் பொருட்களில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும் உணவு பாதுகாப்பு குறித்தான புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணுக்கு அல்லது தமிழக உணவு பாதுகாப்புத் துறை செயலியை பயன்படுத்தலாம்.
மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றாமல் விற்பனை செய்யும் உணவகங்களுக்கு உரிமம் ரத்து, உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com