1.5 கோடி சம்பாதித்துக் கொடுத்த தக்காளி!

மும்பை பரபர!
1.5 கோடி சம்பாதித்துக் கொடுத்த தக்காளி!

க்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ள காரணத்தால், மக்களிடையே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விலையேற்றத்தைக் குறைக்க வழி அறியாமல் ஒன்றிய, மாநில அரசுகள் அல்லாடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள், தக்காளி விற்பனை செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். உள்ளூர், வெளியூர் மற்றும் பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இதில் ஹைலைட் என்னவென்றால், புனே ஜுனார் பகுதியைச் சேர்ந்த விவசாயி துக்காராமுக்கு சொந்தமாக 12 ஏக்கர் விவசாய நிலமிருக்கிறது. இதில் தனது மகன் மற்றும் மருமகளுடன் சேர்ந்து தக்காளி பயிரிட்ட துக்காராம், சமீபத்தில் அறுவடை செய்தார்.

தற்சமயம், மார்க்கெட்டில் 20 கிலோ எடையுள்ள 1 பெட்டி தக்காளி ரூ. 2500 வரை விற்பனை செய்யப்படுகிறது. துக்காராம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும்
13,000 பெட்டி தக்காளியை விற்பனை செய்து ரூ 1½ கோடி சம்பாதித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, துக்காராம் 900 பெட்டி தக்காளி விற்பனை செய்து ஒரு நாளில் ரூ 18 லட்சம் சம்பாதித்தோடு, கர்நாடகாவில் இருக்கும் கோலார் மார்க்கெட்டிற்கு 2,000 பெட்டி தக்காளி ஏற்றுமதி செய்து  ` 38 லட்சம் சம்பாதித்துள்ளார்.

துக்காராம் மட்டுமல்ல, ஜீனார் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் தக்காளி விற்பனை செய்து கோடீஸ்வரனாக மாறி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு வெங்காயம் பயிரிட்டு, பருவ மழை தப்பிய காரணம் உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் நஷ்டம் அடைந்ததை, இப்போது தக்காளி ஓரளவு சரிக்கட்டி விட்டதெனலாம்.

No More ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பேபி பவுடர்!

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பிரபலமாக உள்ளது. மக்னீசியம், சிலிகான் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இப்பவுடர் புற்றுநோயை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெனிக்கு எதிராக பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. பல ஆய்வுக் கூடங்களில் பரிசோதனைகள் செய்தபின்பே தயாரிக்கப்படுவதால் புற்றுநோய் வராதென கம்பெனி அறிவித்தது.

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் ஜான்சன் அண்ட ஜான்சன் கம்பெனி டால்கம் பேபி பவுடர் தயாரிப்பை 2020ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டுவிட்டது. சோளமாவில் பேபி பவுடர் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மும்பையில் உள்ள ஆலையிலும், இதன் தயாரிப்பை கம்பெனி நிறுத்திவிட்டது. சோளமாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. ஆனால், சமீபத்தில் டால்கம் பேபி பவுடர் தயாரிப்பதற்கான உரிமத்தை ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெனி மகாராஷ்டிரா அரசிடம் கொடுத்துவிட்டது. இதனை அரசு ஏற்றுக்கொண்டு விட்டதாக, மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தவிர, ஜூன் மாதம் 22ஆந் தேதி வரை தயாரிக்கப்பட்ட பேபி பவுடரை மார்க்கெட்டில் விற்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

எத்தனை ஆண்டு காலமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பேபி பவுடர் பிரபலமாக விளங்கி வந்தது. அநேகர் குழந்தைகளுக்காக அந்த ப்ராண்ட்டையே வாங்குவார்கள். புகழ் பெற்ற டால்கம் பேபி பவுடர் தயாரிப்பிலும் சர்ச்சை ஏற்பட்டு இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

நாளொன்றுக்கு  ` 3 லட்சம் செலவு! எதற்காக?

மும்பையின் கடற்கரை 34 கி.மீ. நீளம் கொண்டது. கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் கடல் அலைகள் மூலமாக ஏகப்பட்ட குப்பைகள் கரையில் வந்து ஒதுங்குவதால், அவை மாசு அடையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சில தனியார் நிறுவனங்கள் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோதிலும், குப்பைகளை முழுமையாக அகற்ற முடிவதில்லை. 250 மெட்ரிக் டன் குப்பைக் கழிவுகளை தினமும் அகற்றினால்தான், கடற்கரை சுத்தமாக இருக்கும். சில நேரங்களில் 400 மெட்ரிக் டன் குப்பைகள் கடற்கரையில் தேங்கிவிடுகிறது.

கிர்காம் கடற்கரையில் 4 டன், தாதர்-மாகிம் கடற்கரையில் 40 டன், ஜுகு கடற்கரையில் 100 டன்; வெர்சோவா கடற்கரையில் 120 டன், மட்-மார்வேயில் 7 டன், கோராயில் 5 டன் மற்றும் சிம்பாயில் 10 டன் குப்பைகள் மாநகராட்சி ஊழியர்களால் சேகரிக்கப்படுகிறது.

இதற்காக மாநகராட்சி சார்பில் ஜுகு மற்றும் வெர்சோவா போன்ற கடற்கரைகளை சுத்தமாக வைத்திருக்க 30 – 40 பேர்களை நியமித்துள்ளது. மேலும் உதவிப் பொறியாளர்கள் மற்றும் துணைப் பொறியாளர்களைக் கொண்டு இவை கண்காணிக்கப்படுகின்றன.

மும்பை கடற்கரையை சுத்தம் செய்ய மும்பை மாநகராட்சி தினமும் ரூபாய் மூன்று லட்சம் செலவிடுகிறது. அப்படியும் குப்பைகள் சேர்ந்து விடுகிறது. அப்படியும் குப்பைகள் சேர்ந்துவிடுகிறது. தவிர்க்க இயலவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com