காலை நேர பரபரப்பை சமாளிக்க 3 யோசனைகள்!

காலை நேர பரபரப்பை சமாளிக்க 3 யோசனைகள்!

காலை நேரப் பரபரப்பு இல்லாத இல்லம் எது? சிறிய குடும்பமோ, பெரிய குடும்பமோ, உணர்ச்சிகள் ஒன்றோடொன்று மோத, குடும்பத்தினர் அனைவரும் அழகான காலை நேரத்தை, அடுக்கடுக்கான பிரச்னைகள் கூடிய நேரமாக மாற்றி விடுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் குடும்பத் தலைவியின் பரபரப்பும், உணர்ச்சிக் கொந்தளிப்பும் அன்றைய காலை நிகழ்ச்சியின் உச்சகட்டமாக அமைந்து விடுகிறது.

இந்தப் பரபரப்பு தேவைதானா? மன உளைச்சல், உதிரும் காரமான சொற்கள், படபடப்பான செய்கைகள், இவற்றைக் கட்டுப்படுத்த முடியாதா? கண்டிப்பாக முடியும். எப்படி? சமைக்க, பெருக்க, துவைக்க ஆட்கள் நியமனம் செய்து விட்டால் இந்தப் பிரச்னை தீர்ந்து விடுமா என்ன? இல்லவே இல்லை. இன்னும் அது கூடுதலான பிரச்னையையே குடும்பத் தலைவிக்கு உண்டாக்கும். அப்போ என்ன செய்யலாம்? இந்த மூன்று வழிகளை கடைபிடிக்கலாம் .

1. காலை எழுந்தவுடன் உற்சாகம்:

டுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போதே, ஒவ்வொருவரும், ஒரு உற்சாகமான, அன்றைய தினத்திற்குரிய நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்துக்கொண்டே எழுந்திருப்பது, மனத்திற்குப் புத்துணர்ச்சியை அளித்து, அன்றைய தினத்தில் எதிர்கொள்ள வேண்டிய, வேலைப்பளுவைக் குறைத்து எதிர்நோக்கும் மனோபாவம் உண்டாகும். உதாரணமாக, அன்று தான் அணியப் போகும் புது உடைகள், புது நிகழ்ச்சிகள்,  தயாரிக்கப் போகும் புது சமையல் வகை, அன்று சந்திக்கவிருக்கும் நண்பர்கள், புது அறிமுகங்கள் இவர்களைப் பற்றிய சிந்தனை - இவைகள் மனத்திற்குச் சிறந்த உரமாகும்.

காலை காப்பி, டீ அனுபவித்துக் குடிப்பதற்குக் கண்டிப்பாக ஐந்து முதல் பத்து நிமிடங்களை ஒதுக்கலாம்.

2. முழுமையான காலை மௌன விரதம்:

காலை நேரத்தில், குடும்பத்தினர் ஒருவருடன் ஒருவர் அதிகமாகப் பேசுவதையும், விவாதத்திற்கு உரிய விஷயங்களை அலசுவதும், ஆராய்வதும், முடிவு எடுப்பதும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். இரவு உணவு நேரத்திற்குப் பின்பே, உரையாடுதல் நேரம் ஒதுக்கப்பட வேண்டும். குடும்பத்தலைவி காலை நேரத்தில் தன் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, ஹோம்வொர்க் செய்ய உதவ முன் வருவது, குழந்தைகளை 'அதைச் செய்தாயா? இதைச் செய்தாயா?' என்று ஆயிரம் கேள்விகள் கேட்பது, 'அதைப் பண்ணு' என்று கட்டளை மேல் கட்டளையாகப் பிறப்பிப்பது அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

3. முன்னேற்பாடு:

முதல் நாள் இரவு, அடுத்த நாள் தாங்கள் அணிய வேண்டிய உடைகளையும், பள்ளிக்கும், அலுவலகத் திற்கும் எடுத்துச் செல்ல வேண்டியவற்றையும் தயாராக எடுத்து வைத்துவிட்டு, படுக்கைக்குச் செல்லும் வழக்கம், குடும்பத்தினரிடையே காலை நேர எரிச்சலைப் பெருமள விற்குக் குறைத்துவிடும். முடிந்தால் காய்கறிகளையும் நறுக்கி, அடுத்த நாள் காலை சப்பாத்தி சமையல் பட்டியலில் இருந்தால், கோதுமை மாவையும் பிசைந்து, மாவு தோசையானால், மைதா, கோதுமை, அரிசி மாவு கரைத்து, இவைகளை பிரிட்ஜில் வைத்து விடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com