
ஒரு குடும்பத்தில் பெண் மகள் பிறந்துவிட்டால் மகாலட்சுமி பிறந்து விட்டாள் என்று கொண்டாடுகிறோம். சிறுவயதில் அவளுக்கு என்னென்ன பிடிக்குமோ அனைத்தையும் நாம் பார்த்து பார்த்து செய்து கொடுத்து வளர்ந்து வருகிறோம். வயதுக்கு வரும் பருவம் வரை நாம் சொல்வதை அப்படியே கேட்டு வளரும் பெண் டீன் ஏஜ் பருவம் வந்தவுடன் அவளுக்கென்று சில ஐடியாக்களை உருவாக்கிக் கொள்கிறாள்.
சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறாள். அதற்கு தடையாக பெற்றோர்கள் ஏதாவது சொன்னால் அதை கோபப்பார்வையுடன் எதிர்கொள்கிறாள். அப்படி இல்லாது இயல்பாக இருப்பதற்கு பெற்றோர்கள் செய்யவேண்டிய, நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
சாப்பாடு:
டீன் ஏஜ் வந்தவுடன் பள்ளியில் படிக்கும் காலத்தில் மற்ற தோழிமார்கள் கொண்டுவரும் உணவுகளை பார்க்கின்றனர். நிறைய வெரைட்டியும் வித்தியாசமான ருசியும் இருந்தால் தினசரி இட்லி, தோசை என்று கொடுக்கும் அம்மாவை பெண் பிள்ளைகள் பாடாய்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். முதலில் உங்கள் சமையல் முறையை மாற்றுங்கள். நிறைய வெரைட்டியாக சமைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் விருப்பம் அறிந்து சமைத்துக் கொடுத்தால் பிரச்னை தீர்ந்தது. அது சத்து நிறைந்ததாகவும் மாறிவிடும்.
அழகு சாதனப்பொருட்கள்:
அவர்கள் எப்பொழுதும் கண்ணாடி முன் நிற்பவர்களாக ஆகிவிடுவார்கள். அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் பிடித்தமான ஆடை, அழகு சாதனப்பொருட்களை வாங்கி குவிப்பதற்கு ஆர்வம் காட்டி அதற்கு நிறைய பணத்தையும் செலவழிக்க ஆசைப்படுவார்கள். அதனை தாய், தந்தை இருவரும் கண்டிக்கும் மனோபாவத்துடன் செயல்படுவதை காணலாம்.
அதை விடுத்து பெண்ணின் மனம் கோணாதவாறு சருமத்துக்கு பிரச்சனை ஏற்படுத்தாத அழகுசாதனப் பொருட்களை அவளை அழைத்துச் சென்று தரமானதாக பார்த்து வாங்கி கொடுக்கலாம். வாங்கிக் கொடுக்கும்பொழுது நல்ல மனோபாவத்துடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். இவ்வளவு காசு, பணம் செலவு பண்ண வேண்டி இருக்கிறதே என்ற கடுவெடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டவே வேண்டாம்.
கண்டிப்பு:
பள்ளி கல்லூரிகளில் இருந்து சில சமயங்களில் காலதாமதத்துடன் வீட்டிற்கு வந்தால், அதன் காரணம் என்னவென்று கேட்டு நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். அதேபோல் படிப்பு விஷயத்தில் அளவுக்கு அதிகமாக கண்டிப்பு காட்டி மதிப்பெண் குறைந்திருந்தால் திட்டுவதை தவிர்க்க வேண்டும்.
அதுவும் அவளை மற்றவர்கள் முன்னிலையில் வைத்து இப்படி வரக்கூடாது, செய்யக்கூடாது, படிக்கக்கூடாது என்று குற்றம் சாட்டி பேசுவதை தவிர்ப்பது நல்லது. இதனால் பெண்ணிற்கு தாழ்வும் மனப்பான்மையும், அவமானமும் ஏற்படாமல் இருக்கும். பின்னர் அன்றன்று அங்கு நடக்கும் எல்லா விஷயங்களையும் உங்களுடன் தாராளமாக பகிர்ந்துகொள்வாள். பெற்றோர்களிடம் கூறினால் நமக்கு நல்ல மதிப்பு மரியாதை உற்சாகம் கிடைக்கும் என்று நம்புவாள்.
திருமணம்:
திருமணம் என்று வந்துவிட்டால் பெற்றோர்கள் தவித்து தடுமாறி போவதைக் காணலாம். தான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்று குதிப்பார்கள். மீறினால் விரட்டுவார்கள். அதை தவிர்த்து அவளின் விருப்பம், நோக்கம் என்ன என்பதை நிதானமாக கேட்டு தகுந்த ஆலோசனையை கொடுத்து, அவள் விருப்பத்தோடு சேர்த்து உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். காதல் திருமணம் என்றால் உறவினர் என்ன நினைப்பார்களோ என்று தடுமாறாதீர்கள். மகள் சொல்வதில் கூறும் உண்மையை கவனிங்கள். பையனைப் பார்த்து பேசுங்கள். பின்னர் முடிவெடுங்கள். "யாருக்கோ வாழ்ந்து காட்ட வாழ்க்கை ஒன்றும் பரீட்சை இல்லை. உங்களுக்காக வாழுங்கள்".
குணம்:
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்று மட்டும் இல்லாமல் அதனுடன் அன்பு, தியாகம், பணிவு, இரக்கம், உதவும் மனப்பான்மை உள்ளிட்ட அனைத்து குணாதிசயங்களையும் கொண்டவளாக மகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பு தாய், தந்தையருக்கு உண்டு. அதே சமயத்தில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு குணாதிஷயங்களை வெளிப்படுத்தும் பக்குவம் கொண்டவராகவும் மகளை வளர்த்தெடுக்க வேண்டியது பெற்றோர்களாகிய நம் கையில்தான் இருக்கிறது.