
முதுமைக்கேற்ற உடற்பயிற்சி
முதியவர்கள் தங்கள் உடல் நலன், பழக்க வழக்கங்கள் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவற்றை மனதிற்கொண்டு உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது, வீட்டிற்குள்ளேயே விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம். நாள்தோறும் மூன்றிலிருந்து ஐந்து கி.மீ. தூரம் வரை நடப்பது நல்லது அல்லது முப்பதிலிருந்து நாற்பத்து ஐந்து நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் சுமார் முப்பது நிமிடங்கள் உடற் பயிற்சி செய்ய முடியாதவர்கள் இடைவெளி விட்டு பத்து நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து நாளொன்றுக்கு அதுபோல் மூன்று முறை செய்தாலே தொடர்ந்து முப்பது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்த பலன் கிடைக்கும்.
நடக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் கைத்தடி, வாக்கிங் போன்றவைகளை உபயோகப்படுத்தி நடைப்பயிற்சி செய்யலாம். சமீபத்திய ஆராய்ச்சியின்படி முதியவர்களுக்கு வைட்டமின் டி அளவு ரத்தத்தில் குறைவாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. திறந்தவெளியில் காலையும், மாலையும் சூரிய ஒளியில் உடற்பயிற்சி செய்வது சாலச் சிறந்தது.