
முதுமைக் காலத்தில் ஏற்படும் நோய்களையும், அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகளையும் பற்றி இப்போது பார்க்கலாம்.
இதயம் காக்க
பிரதிபலனை எதிர்பார்க்காமல் ஓய்வின்றி உழைக்கும் இதயத்தை பாதுகாப்பது நமது தலையாய கடமை. அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றலாம்.
காலமுறைப்படி மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியம். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் பல தொல்லைகளின் நண்பன். இதில் அதிகம் பாதிப்பது இதயம்தான். இந்நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்வது மிக அவசியம். எடையை சரியான அளவில் பராமரிக்க வேண்டும்.
உணவிலும் கவனம் தேவை. அரிசி, சர்க்கரை, கிழங்கு மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பண்டங்களை நாடாதீர்கள். தினமும் கீரை, கோதுமை, கேழ்வரகு, கம்பு, தினை, கொள்ளு, முட்டையின் வெள்ளைக் கரு, மீன், ஓட்ஸ், சோயா, காளான் மற்றும் பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.