கல் உப்புக்கு இப்போதெல்லாம் ரொம்ப வருத்தம். அதற்குரிய மரியாதையை யாரும் தருவதேயில்லை. டேபிள் சால்ட் அதனுடைய புகழையெல்லாம் ஈர்த்துக் கொண்டு விட்டது. இருக்கட்டும். ஆனாலும் கல் உப்பு தன் சேவையை, குறிப்பாக, நெய்க்குத் தொடர்ந்து அளித்துக் கொண்டுதான் இருக்கிறது. நெய்க்கும் உப்புக்கும் சம்பந்தம் இல்லைதான். ஆனாலும், நெய்யின் சுவையைக் குறைக்காமல், அதன் வாழ்நாளை நீட்டிக்கும் வல்லமை உப்புக்கு உண்டு. அதை நெய் பாத்திரத்தில் போட்டால், நெய்யுடன் கரைந்துவிடாமல், கல்லாகவே அடியில் தங்கி, தன் ருசியையும் நெய்க்குக் கொஞ்சம் கொடுத்து அதை வாழ வைக்கும் பரோபகாரி உப்பு!
‘எங்கே இன்றைய காலை சுடுதண்ணியைக் காணோம்?‘ என்று கேட்டு கிண்டல் பண்ணும் பேர்வழியா உங்கள் கணவர்? கவலைப்படாதீர்கள். அவருக்குக் கொடுக்குமுன் தேனீருக்குக் கொஞ்சம் சிகிச்சை கொடுங்கள். அதாவது தேயிலையை குளிர்ந்த நீரில் பத்து நிமிடம் ஊறவையுங்கள். அப்புறம் அதை எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு டீ தயாரியுங்கள். அதன் சுகந்தம் முன்னறையில் அமர்ந்திருக்கும் கணவரை அப்படியே சமையலறைக்கு இழுத்து வந்துவிடும். இவ்வளவு அற்புதமாக டீ தயாரித்த உங்கள் கைக்கு கணவர் தம் வசதிக்கேற்ப தங்க வளையல், மோதிரம், கைக்கடிகாரம் அல்லது ஒரு நகப்பூச்சாவது வாங்கிக் கொடுப்பார்!
வெங்காயம் நறுக்கினால் அதன் வலியை தாம் பொறுத்துக் கொள்ளாமல் நம் கண்கள் நீர் பெருக்கும். கைகள் விடாமல் நறுக்க, ஆனால் கண்கள் அழுவதாகிய நம் குள்ளநரித் தனத்தை வெங்காயம் புரிந்து கொண்டாலும், நம் அவசரத் தேவைக்கு உதவ அது தயங்குவதே இல்லை. ஆமாம், நீங்கள் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருக்கும்போது உங்கள் தவழ் குழந்தையை எறும்பு கடித்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள், உடனே கண்ணீரும், கம்பலையுமாக ஓடிப்போய் பாதி நறுக்கிய வெங்காயத்தைக் குழந்தையின் கடிபட்ட இடத்தில் மெல்லத் தடவுங்கள். எறும்புக் கடியால் அழுத குழந்தை இப்போது சிரிக்கும். நம்மை அழ வைத்த வெங்காயத்தால் குழந்தையை சிரிக்கவும் வைக்க முடிகிறதே என்று ஆச்சரியப்படுவீர்கள்.
‘என்ன சார், இவ்ளோ சின்னதா குருவி வளர்க்கறீங்க?’ என்றுவீட்டுக்கு வரும் நண்பர் வியக்க, நீங்களோ, ‘ஹி, ஹி, அது குருவி இல்லீங்க, கொசு,‘ என்று அசடு வழிந்து மனசுக்குள் பட் பட்டென்று கொசுவை அடித்துக் கொள்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். நிஜமாகவே அழிக்கலாம். ஒரு கோப்பை நீர் எடுத்துக் கொள்ளுங்கள், இரண்டு டீஸ்பூன் கடுகு எண்ணெயை அதில் விடுங்கள். அறையின் மூலையில் வைத்து விடுங்கள். உங்கள் கண்ணெதிரிலேயே கொசுக்கள் பறந்து சென்று அந்தக் கோப்பைக்குள் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும். புகையில்லை, நாற்றமில்லை, ரசாயனப் பொசுங்கலும் ஒவ்வாமை வேதனையும் இல்லை. பட்ஜட்டும் உதைக்காது. அறைக்குள் புத்தர், காந்தி படங்கள் இருந்தால், சுவரைப் பார்த்து திருப்பி மாட்டி வைத்து விடுங்கள்!
ஒரே சமயத்தில் ஏழெட்டு முட்டைகளை ‘அவிக்க‘ வேண்டும். என்ன செய்ய? அதுக்காக அண்டான், குண்டானைத் தேடிப் போகாதீங்க. இட்லி குக்கர் இருக்கிறதா? போதும். உள்ளே இட்லி வேகவைக்க எந்த அளவு தண்ணீர் விடுவீர்களோ அதே அளவு விட்டுக் கொள்ளுங்கள். முட்டைகளை நன்றாகக் கழுவி, இட்லி தட்டுகளில் ஒரு கிண்ணத்துக்கு இரண்டு அல்லது மூன்று என்று வைத்து விடுங்கள். பிறகு குக்கரை மூடி சுமார் ஐந்து நிமிடம் ஸிம்மில் வேகவிடுங்கள். மூடியைத் திறந்து பாருங்கள், அத்தனை முட்டைகளும் வெந்திருக்கும். சைவ இட்லி அவித்த குக்கர், அசைவ முட்டைகளையும் வேக வைக்கும் என்ற உண்மையும் புரியும். (ஒருவேளை சிலர் சொல்வதுபோல முட்டையும் சைவம்தானோ?)
அடுப்படியில் வேகும் அம்மையாரா நீங்கள்? அல்லது அப்பையாரா? அடுப்பின் நேரடிச் சூடு அல்லது ஜ்வாலை உங்களுடைய புறங்கையை ஆவலுடன் தீண்டியிருக்குமே! உடனே கையை உதறிக் கொள்வதோடு, கொஞ்சம் அலமாரியைத் திரும்பிப் பாருங்கள். அங்கே, தேன் பாட்டில், ‘மே ஐ ஹெல்ப் யூ?’ என்று கேட்கும். அதன் உதவியை நாடுங்கள், பாதிக்கப்பட்ட பகுதியில் தேனைத் தடவுங்கள். அப்புறம் என்ன, தடபுடலாக சமையலில் ஈடுபடலாம். ஆனால் தேன் இருக்கும் தைரியத்தில் ரொம்பவும் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அப்புறம் எந்தக் கொம்புத் தேன் இருந்தாலும் பயனில்லை!