மூன்று தலைமுறையாக தொடரும் பந்தம்!

அமரர் கல்கி பிறந்த தினம் இன்று!
மூன்று தலைமுறையாக தொடரும் பந்தம்!

தமிழ் எழுத்துலகின் எவர் கிரீன் ஹீரோ கல்கி அவர்கள்!

மரர் கல்கி அவர்களைப்பற்றி என் சிறு வயதிலேயே என் தந்தையார் மூலம் அறிந்து கொண்டேன். கல்கி அவர்களின் அதிதீவிர வாசகர் என் தந்தை. ‘பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற நூல்களை எத்தனை முறை வாசித்திருப்பேன்’ என எனக்கே தெரியாது என்று கூறுவார். சிற்றூரில் வசித்த என் தந்தை ஒவ்வொரு வாரமும் நடந்தே அருகில் இருந்த பழனி டவுனுக்கு சென்று கல்கி இதழை வாங்கிக்கொண்டு, ஆறு கிலோமீட்டர் தூரம் ரயில்வே லைன் ஓரமாக நடந்தபடியே கல்கியில் வெளிவந்த தொடர்கதையைப் படித்தபடியே (வீட்டில் வந்து படிக்கக் கூட பொறுமை இல்லாத ஆர்வம்) வீடு வந்து சேர்வாராம். என் அக்காவிற்கு சிவகாமி என்று பெயர் வைத்தது கூட அமரர் கல்கி அவர்களின் மீதிருந்த அபிமானத்தால் தான்.

எங்கள் வீட்டில் கல்கி மற்றும் மங்கையர் மலர், தவறாமல் வாங்குவது வழக்கம். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது கோகுலம் இதழ் வாங்கி கொடுத்தார் என் அப்பா. நான் கோகுலம் சிறுவர் சங்க உறுப்பினராக சேர்ந்து ஆசிரியர் திரு. அழ வள்ளியப்பா அவர்களின் கையெழுத்திட்டு வந்த உறுப்பினர் அட்டை அத்தனை ஆனந்தம் தந்தது எனக்கு. கோகுலத்தை வரி விடாமல் வாசித்து, பிருந்தாவனக் கவியரங்கம், கதையரங்கம், கதைகளை அதன் வண்ணப் படங்களுடன் ரசித்துப் படிப்பேன்.

வளர்ந்த பின் கல்கியும் மங்கையர் மலரும் வாசிக்க ஆரம்பித்தேன். கல்கி அவர்களின் ‘’சாரதையின் தந்திரம்’’ என்கிற சிறுகதையை தான் நான் முதன் முதலில் வாசித்தேன். ஒரு பெண் தன்னுடைய கணவனை எப்படித் திருத்தி தன் வழிக்கு கொண்டு வருகிறாள் தன் புத்திசாலித்தனத்தால் என்ற கதை என்னைக் கவர்ந்தது. அவருடைய சிறுகதைகளை விரும்பி வாசித்தேன்.

பின்பே சரித்திரக் கதைகள் வாசித்தேன். கதைகளில் பெண்களுக்கு உயர்ந்த மரியாதையும் உயரிய இடத்தையும் கல்கி அப்போதே கொடுத்திருந்தார்.

எனக்கு திருமணம் ஆன பின்பு நானும் கல்கியும் மங்கையர் மலரும் வாங்க ஆரம்பித்தேன். எங்களுடைய இரண்டாவது திருமண நாளில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ ஐந்து பாகங்களையும் வாங்கிக் கொடுத்தார் என் கணவர். அதைப் பொக்கிஷம் போல பிரவுன் அட்டை போட்டு வைத்துப் படித்தேன். அதை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன். தன் பிசியான மருத்துவப் பணிகளுக்கு இடையேயும் ஐந்து பாகங்களையும் விடாமல் வாசித்து முடித்தார் என் கணவர். என் குழந்தைகளுக்கு எப்போதும் கதைகள் சொல்வது என் வழக்கம். கோகுலத்தில் நான் சிறுவயதில் படித்த கதைகளை சொல்லுவேன். ஒரு முறை ‘பார்த்திபன் கனவு’ கதையை சொல்ல ஆரம்பித்தேன். தினமும் ஒவ்வொரு அத்தியாயமும் சொல்லும் போது மிக மிக ஆர்வமாக கேட்பார்கள். ‘’அம்மா அடுத்து என்ன ஆச்சு?’’ என்று துளைத்தெடுப்பார்கள் இதனாலே அவர்களுக்கும் புத்தகம் படிக்கும் ஆர்வம் வந்தது. கோகுலம் வாசிக்கத் தொடங்கி அதில் ஓவியம், துணுக்குகள் எழுதுவார்கள்.

பத்தாவது பரீட்சைகள் முடிந்து லீவில் ’அம்மா ரொம்ப போர் அடிக்குது; என்றாள் என் மூத்த மகள் ஐஸ்வர்யா. அப்போது கல்கியின் சிறுகதைகள் தொகுப்பை கொடுத்து படிக்க சொன்னேன். பொன்னியின் செல்வன் புத்தகத்தை பிளஸ் டூ லீவில் ஐந்து பாகங்களையும் படித்து முடித்து கல்கியின் தீவிர ரசிகையாக மாறிவிட்டாள் ஐஸ்வர்யா. பின் சிவகாமியின் சபதம், சமூக நாவல்கள் சிறுகதைகள் என தேடி, தன் பாக்கெட் மணியில் வாங்கிப் படித்தாள்.

இப்படி மூன்று தலைமுறைகளாக அமரர் கல்கியுடன் ஆன எங்கள் பந்தம் தொடர்கிறது. வரும் தலை முறையினரும் கல்கியின் எழுத்துக்களை மிகவும் விரும்பி வாசிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. எங்கள் வீட்டில் மட்டுமில்லை சமுதாயமே போற்றி புகழ் கூடி எழுத்துக்கள் அவருடையவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com