ஒரு எல்.டி.சி.யின் காதல் கதை…

சிறுகதை
ஒரு  எல்.டி.சி.யின்  காதல்  கதை…

ஓவியம்: தமிழ்

ரு சோம்பிக் கிடந்த ஞாயிறு காலை சேஷாத்திரிபுரத்திலிருந்து ரேஸ்கோர்ஸை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். பெங்களூரின் இதமான குளிர் காற்று, சட்டைக்குள் புகுந்து வருடிவிட்டுக் கொண்டிருந்தது.  எழுபதுகளிலெல்லாம் பெங்களூர் (பெங்களூரூ?) உண்மையிலேயே கார்டன் சிட்டியா கத்தான் இருந்தது. இப்போதைய பெங்களூரு போல் போக்குவரத்து நெருக்கடியும், மாசு படிந்த‌காற்றும் அப்போதெல்லாம் இருக்கவில்லை. அந்த ஊர் மசாலா தோசையும், பசுமை மண்டிக் கிடந்த கப்பன் பார்க்கும், கண்ணாடி வீட்டைக் கொண்ட‌ லால் பாக்கும் பெங்களூர் மக்களுக்கு விடுமுறை நாட்களில் பெரும் ஆசுவாசம் கொடுக்கும் இடங்களாக இருந்தன. சேஷாத்திரிபுரத்தில் நான் இருக்கும் பேச்சிலர் லாட்ஜிலிருந்து நூறு மீட்டர் தூரத்தில் ஒரு வட்டம் வரைந்தால், அந்த வட்டத்துக்குள் நான்கு தியேட்டர்கள் அடங்கியிருக்கும்.

       லாட்ஜிலிருந்து வலதுபுறம் நடந்தால், முதலில் வருவது 'ஸ்வஸ்திக்' தியேட்டர்.  இந்தத் தியேட்டருக்குத்தான் நடிகை ஜெயந்தி சினிமா பார்க்க அடிக்கடி வருவார்.  இன்னும் ஒரு இருநூறு அடி நடந்தால் 'கினோ' தியேட்டர்.  இந்தத் தியேட்டரில்தான் ‘சிவப்பு ரோஜாக்கள்’ படம் அதிக நாட்கள் ஓடியது.  லாட்ஜிலிருந்து இடதுபுறம் திரும்பினால் முதலில் வருவது 'நடராஜ்' தியேட்டர். போனால் போகிறது என்று கன்னடப் படம் போடுவார்கள்.  இன்னும் ஒரு பத்தடி நடந்தால் 'சென்ட்ரல்' தியேட்‌டர்.  இங்குதான் கமலின் ‘மரோசரித்திரா’ என்ற தெலுங்குப் படம் நூறு நாட்கள் தாண்டி ஓடியது.  இதுதான் பின்னாளில் 'ஏக் துஜே கே லியே' என்று இந்தியில் எடுக்கப்பட்டது.  இது இல்லாமல், என் ஆபீஸ் இருக்கும் மெஜஸ்டிக் ஏரியாவில் தடுக்கி விழுந்தால் தியேட்டர் மீதிலோ அல்லது பாரின் மீதிலோதான் விழ வேண்டும்.  தாகம் எடுக்கும் போதெல்லாம், வசதியுள்ள‌ இளைஞர்கள் தண்ணீருக்குப் பதில் பீர் குடித்துக்கொண்டிருப்பார்கள்.                                 

இதையெல்லாம் இவ்வளவு விலாவாரியாகச் சொல்வது ஏனென்றால், என் போன்ற பேச்சிலர்களுக்குச் செலவு வைக்க இத்தனை வசதிகள் இருக்கும் இந்த ஊரில், நான் வாங்கும் சம்பளம் பதினைந்து தேதிக்கு மேல் தாங்குவதில்லை என்பதை நியாயப் படுத்தத்தான்.  இவையெல்லாம் போக, ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கள் ரூமில் காலையில் தொடங்கி இரவு வரை மஹாபாரத யுத்தம் போல் நீளும் ரம்மி ஆட்டமும், அதில் பறிபோகும் பணமும் அடங்கும்.

    ப்போது கூட நான் ரேஸ் கோர்ஸ் நோக்கி போய்க் கொண்டிருப்பது  ரேஸ் ஆட  என்று  தவறாக  நினைக்க வேண்டாம். ரேஸ் பற்றி  எனக்கு ஒன்றும் தெரியாது.  ரேஸ்கோர்ஸ்  மைதானத்துக்கு எதிரில் இருக்கும் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில்  Banquet Hall  மேனேஜராக இருக்கும்  என் நண்பன் கிருஷ்ணமூர்த்தி  என்ற கிருஷிடம் நூறு ரூபாய் கடன் வாங்கத்தான் போய்க்கொண்டிருக்கிறேன்.  கிருஷ்  கர்ணனைப் போல….  இல்லை  என்று எப்போதும் சொன்னதே  இல்லை.  அதே போல் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதும் இல்லை.  அதற்காக நானும் அடிக்கடி அவனிடம் பணம் கேட்பதுவுமில்லை.  எங்கும் கடன் கிடைக்காமல்  அடுத்த  வேளை சாப்பாட்டுக்குத் தட்டுப்பாடு  வரும்போது  மாத்திரம் அவனிடம் கேட்பேன்.  நேற்று  போன் செய்யும்போது  தனக்கு டூட்டி இருப்பதால்  ஹோட்டலில் வந்து வாங்கிக் கொள்ளச்  சொல்லியிருந்தான். நடைபாதையில்  என்னைக்  கடந்து சென்ற  இருவர்,    'பார்பரோதான் வரும். அது இல்லைன்னா  பிளாக் பேர்ட்'  என்று  உரத்துப் பேசிக்கொண்டே சென்றனர்.  கொஞ்ச நேரம் கழித்துத்தான்  புரிந்தது,  இருவரும்  ரேஸ் குதிரைகளைப் பற்றி  பேசுகிறார்கள் என்று.   இப்போது சிரித்துக் கொண்டிருக்கும்  இவர்களின் முகங்கள் இன்று  இரவு எப்படி  இருக்கும் என்று கற்பனை  செய்து  பார்த்தேன்.  அரை போதையுடன்  அடுத்த ஞாயிறு ஓடப்போகும் குதிரைகளைப் பற்றி கனவு கண்டுகொண்டிருப்பார்கள்.

அதற்குள்  வெஸ்ட் எண்ட் ஹோட்டல்  வந்துவிட்டது.  தங்க நிறத்தில் பளபளத்துக்கொண்டிருந்த  அந்த ஸ்டார் ஹோட்டலின்  பெயரும்,  நுழைவாயிலில் கம்பீரமாய் ராணுவ மிடுக்கோடு உயரமாய்,  சிறந்த உடையலங்காரத்தோடு  நின்றுகொண்டிருந்த  அந்த மனிதனும்  எனக்குள்  ஒரு  பயத்தை  ஏற்படுத்தினர்.  ஏனென்றால்  சத்தியமாக  இதுவரை நான்  நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்தது இல்லை.  அதிக பட்சம் அன்னபூர்ணாவிலும்,  ஹோட்டல் காமத்திலும் நுழைந்து,  
'ஒந்து  மசால் தோசை கொடிரீ'  என்று  மட்டுமே  பந்தா காண்பித்திருக்கிறேன்.

நடந்து உள்ளே போகும்போது  அந்த வாயிற்காப்பாளர்  மடக்கி,  கேள்வி  கேட்பாரோ  என்ற பயம்  இருந்தது.  பேசாமல்  ஒரு ஆட்டோவில்  வந்திருக்கலாமோ  என்று  தோன்றியது.  வறண்டு  கிடந்த பாக்கெட்  ஞாபகம் வந்து  அந்த  எண்ணத்தை  அடித்து  துரத்தியது. நல்ல வேளையாக காரில் வந்த ஒரு கனவான் காரை நிறுத்தி அவரிடம்  ஏதோ  கேட்டுக்கொண்டிருக்கும்போது  விடுவிடுவென நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு உள்ளே நுழைந்து விட்டேன்.  ரிசப்ஷன்  என்று  அம்பு  போட்டிருந்த  பகுதிக்குச்  சென்று கண்ணாடிக்  கதவைத் திறந்தபோது  சில்லென்ற ஏ.சி. காற்று  முகத்தை  அறைந்தது. மெத்தென்ற  கார்பெட்டும்,  பகல் பொழுதை மேலும் பகலாக்கிக்கொண்டிருந்த  தொங்கு  விளக்குகளும்,  ஏதோ அரண்மனைக்குள் நுழைந்த பிரம்மையை ஏற்படுத்தின.  கையில்லாத ரவிக்கை  அணிந்து, சந்தன  நிறத்தில், வழவழப்பான  வாழைத்தண்டைப் போன்ற கைகளைக் கொண்ட  அழகான  பெண்கள் இருந்த  வரவேற்புப் பகுதியை  நெருங்கினேன்.  அவர்கள் மங்களூர்ப்  பெண்களாகத்தான்  இருக்க  வேண்டும்.  அவர்களுக்குத்தான்  இயற்கையான இந்த  நிறம் அமையும்.  மனப்பாடம் செய்து கொண்டு போன  ஆங்கிலத்தில் கிருஷ்ஷைப் பற்றி  கேட்டவுடன்,  தொலைபேசியில்  யாருடனோ  தொடர்பு கொண்டு  நுனி நாக்கு  ஆங்கிலத்தில் பேசிவிட்டு,  என்னைப் பார்த்து,  'தாங்கள்  அந்த  இருக்கையில் அமர்கிறீர்களா?  அவர் வந்துகொண்டிருக்கிறார் '   என்றாள் ஆங்கிலத்தில்.

உட்கார்ந்து அங்கே கிடந்த  டெக்கான் ஹெரால்டை  புரட்டிக் கொண்டிருக்கும்போது  'ஹை'  என்று  என் தோளைத்  தட்டினான் கிருஷ்.  'கம்… வி  வில் கோ டு மை ரூம்'  என்று  என்னைக்  கூட்டிச் செல்லும்போது  ரிசப்சன்  அழகிகள்  அவனுக்கு  முறுவலுடன்  கை காட்டினர்.   ஹோட்டலின்  உடுப்பான கோட்  சூட்டில்         'சிவப்பு ரோஜாக்கள்'   கமல்  போல்  இருந்தான்  கிருஷ்.  போய்க்கொண்டிருக்கும் போதே  எதிரே  வந்த  ஒரு ஹோட்டல்  சிப்பந்தி,  'சார்,  சீனியர்  உங்களை  அவசரமாகக்  கூப்பிடுகிறார்'   என்றவுடன்,  கிருஷ்  என் கையில்  நூறு ரூபாயை  யாரும்  பார்க்காத  சமயத்தில்  சொருகிவிட்டு, ' ஓ.கே. சாரி.. மீட்  யூ லேட்டர் '  என்று  விடை பெற்றான்.  வெளியே வரும் போது  மீண்டும் மங்களூர் அழகிகளின்  அழகைப் பருகத் தவறவில்லை நான்.

 

ந்த  இடத்திலாவது  எனக்கும் கிருஷ்ஷுக்குமான நட்பின் ஆழத்தைக் கட்டாயம் சொல்ல வேண்டும். டவுனும் அல்லாத கிராமமும் அல்லாத இரண்டும்கெட்டான் ஊரான கொடுமுடி உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி. வரை நானும் கிருஷ்ஷும் ஒன்றாகப் படித்தோம்.  கிருஷ்ஷின் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை எல்லோரும் பெங்களூரில் இருந்தாலும், கிருஷ் மாத்திரம் கொடுமுடியில் பாட்டி வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்தான். எங்கள் பள்ளியின் நுழை வாசல் கிழக்கு அக்ரஹாரத்தின் முடிவில் இருந்தது. பள்ளிக் கூடத்தின் வாயிலில் இருந்து, ஒரு மூன்று வீடு தாண்டினால் கிருஷ்ஷின் பாட்டி வீடு.  நாங்கள் மூன்று கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து, வியர்வை நாற்றத்துடன் வகுப்பில் வந்து அமரும்போது, பாண்ட்ஸ் பவுடர் மணக்க‌ ஃபிரஷ்ஷாக வருவான் கிருஷ். தீண்டாமை முற்றிலும் விலக்கப்படாத எழுபதுகளில் என்னையும், பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராஜுவையும் பாட்டி இல்லாத சமயத்தில், அவன் வீட்டுக்குக் கூட்டிச் சென்ற சோசலிசவாதி அவன்.  மூன்று வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த எங்களின் அழகிய நட்பைப் பார்த்துப் பொறாமைப் படாதவர்களே இல்லை அந்தப் பள்ளியில்.

காலங்கள் கடந்து எனக்கு  மத்திய  அரசில்  வேலை  கிடைத்து  பெங்களூரில் போஸ்ட்டிங்  கிடைத்தபோது, முதலில்  நான் தேடியது  கிருஷ்ஷைத்தான்.  எப்போதோ அவன் சொன்ன  நம்பர் 1,  கிர‌சண்ட் ரோடு  என்ற முகவரி மனதில்  பதிந்திருந்தது. 

நான் போன  சமயம்  வீட்டில் இருந்த  அனைவரையும்  அறிமுகப்படுத்தி  வைத்தான்  கிருஷ்.  அவனைப் போலவே நல்ல சுபாவம்  கொண்டவர்களாக  இருந்தனர்  அவன்  குடும்பத்தினர்.  ஹோட்டல்  சம்பந்தப்பட்ட கோர்ஸ்  முடித்துவிட்டு,  வெஸ்ட்  எண்ட்  ஹோட்டலில்  வேலை  செய்துகொண்டிருப்பதாகக் கூறினான்.  அதன் பிறகு  எங்கள் நட்பு  மீண்டும்  துளிர்  விட்டது.   மாலை வேளையில் என் ரூமுக்கு  வருவான். 'கம் லெட் அஸ் கோ  ஃபார்  எ  வாக்'   என்பான்.   எங்கள் வாக்  மல்லேஸ்வரத்தில்  உள்ள  ஒரு மதுக்கூடத்தோடு முடிந்து விடும். முகம்  தெரியாமல்  எப்போதும்  மெல்லிய  இருள்  படர்ந்திருக்கும்  அந்த பாருக்கு கிருஷ்  ஒரு விஐபி.  முதலாளியிலிருந்து  அங்கு  வேலை  செய்யும்  அனைவரும்  அவனுக்குத்  தெரிந்தவர்களாக இருந்தனர். குளிர்ந்த  பீருடன்  எங்கள்  டின்னர்  முடியும்.  எப்போதும்  போல  அவனே  பில்  கொடுப்பான்.

லுவலகத்தில்  பாண்டுரங்கா  கூப்பிட்டார்.  சக ஊழியர்.   பெங்களூர்க்காரர்.   எல்லா மொழியிலும்  பேசுவார்.  எப்போதும் அவர்  பேச்சில் நகைச்சுவை  இருக்கும்.  எந்த மொழியில்  பேசினாலும்,  இடையில்  கன்னடத்தில் பேசி  தன்  தாய்  மொழிப்பற்றை  நிரூபிப்பார்.

“வேல  பாக்கற  ஒரு பொண்ணு  இருக்குது.  கல்யாணம் பண்றியா.. வயசாகுது  உனக்கு…”  என்றார்.   

எனக்கும் அந்த எண்ணம் இருந்தது.  எனக்கென்று  எந்த  உறவும்  இல்லாததால்  என்  கல்யாணத்தை  நான்தான் நடத்திக்கொள்ள வேண்டும்.

“பொண்ணு  யாருங்க  பாண்டு?” என்றேன்.

“ம்… எல்லாம்  உனக்கு  தெரிஞ்சப்  பொண்ணுதான்.  டைப்பிங்  செக்சனில் வேலை  செய்ற  சுஹாசினி.   அவ  யூ.டி.சி.  உன்னைவிடச் சம்பளம் ஜாஸ்தி. அவ  அப்பா  மலையாளி,  அம்மா  தமிழு… வீட்ல  தமிழு மாத்தாடுத்தாரே...  ஒரே பொண்ணு..  இந்திரா நகர்ல சொந்த வீடு... அது  உனக்குத்தான். ஏனு  ஏழுத்தியா?” என்றார்.   

எல்லாம் சரிதான்...சுஹாசினியோடு  காதல்  வாழ்க்கை  வாழ்வதை  நினைத்தால்தான்  பயமாக  இருந்தது.  காதல்  உணர்வு  வரவேண்டிய இடத்தில்  பரிதாபம் சுரந்து விடுமோ  என்ற  சந்தேகம் வரும்படியான உடல்வாகு.   ஒரு  குச்சிக்கு  சேலை கட்டியதைப்  போன்ற  கெச்சலான  தேகம்.  நிறம்  என்னைவிட  கருப்பு.  கடுகைப் போல  சிறுத்துப்  போன உருவம்.  உச்ச கட்டமாக,  எப்போதும் சளி  பிடித்த  மூக்கும்,  கையில் கைக்குட்டையுமாய்  இருப்பாள்.  ஆனாலும்  அவளின்  சம்பளமும்,  அவளால்  கிடைக்கும்  வசதிகளும் காந்தத்தைப் போல  இழுத்தது.   யோசனை  செய்து  முடிவு  சொல்வதாகச்  சொல்லி  அப்போதைக்கு பாண்டுவிடம்  இருந்து  தப்பித்துக்கொண்டேன்.

ரு நாள்  வழக்கம்போல்  கடுமையான பணத் தட்டுப்பாடு வந்தபோது  கிருஷ்ஷின்  வீட்டிற்குப்  போனேன்.  கிருஷ்ஷின்  செல்லத்தங்கை  பத்மினி  கதவைத்  திறந்தாள்.  வீடு  அமைதியாக இருந்தது. அண்ணன்களெல்லாம்  வேலைக்குப்  போய் விட்டதாகவும்,  அம்மா  அப்பா  ஒரு  கல்யாணத்துக்குப் போயிருப்பதாகவும் சொன்னாள்.

“நீ காலேஜ்  போகலயா?”   என்றேன்.   கல்லூரியில்  மூன்றாம்  ஆண்டு வணிகவியல் படித்துக்கொண்டிருப்பதாக  கிருஷ் கூறியிருக்கிறான்.

“ம்… காலேஜ் லீவு”   என்று  கூறி  அழகாகக் கொட்டாவி விட்டாள்.    அன்றுதான்  அவளை  அவ்வளவு நெருக்கத்தில்  பார்த்தேன்.  மாடர்ன்  டிரஸ்சில்  இளமைத்  துள்ளலுடன்  இருந்தாள்.  முழங்காலுக்குக்  கீழே தெரிந்த  அவளின்  வெளுத்த  கால்கள்  கண்களை சுண்டி இழுத்தன.  நண்பனின்  தங்கை  என்ற உணர்வு  அறிவுக்குத் தெரிந்தாலும், அவளின்  அழகும்,  இளமையும்  என்  மனக் கட்டுப்பாட்டுக்குச் சோதனை வைத்தன..  இனி இருந்தால்  ஆபத்து  என்று உள்ளுணர்வு சொல்லியதால்  கிளம்ப  முயற்சித்தேன்.

எழ  முயற்சிப்பதைப்  பார்த்ததும்,  “உட்காரு... காபி  குடிச்சுட்டுப் போ.. இல்லன்னா  கிருஷ்  என்னைத் திட்டுவான்” என்றாள். 

எனது  பதிலை  எதிர்பார்க்காமல்  சமையல்  கட்டுக்குப் போனாள்.  பின்னாலேயே  சென்று  அவள்  காபி  போடும் அழகை  ரசித்துக்கொண்டிருந்தேன்.  காபி  வாசத்தையும் மீறி  அவளிடமிருந்து மனதை மயக்கும்  ஒரு வாசனை  வீசிக்கொண்டிருந்தது. 

“நீ  ரொம்ப  நல்லவன்னு  எங்க வீட்ல  எல்லோரும்  சொல்றாங்க… அப்படியா?” என்றாள்.

“அப்படியா?  கிருஷ்  ஒருவேளை அப்படிச்சொல்லி வைத்திருப்பான்”  என்றேன்.   அத்தோடு  நிறுத்தாமல்,

“நீ அழகா இருக்கே…” என்று  உளறினேன்.  கோபப்படுவாள்  என்று  எதிர்பார்த்ததற்கு மாறாக  கூலாகச் சொன்னாள்,

“இப்படிச்  சொன்ன  ஏழாவது  ஆள்  நீ”  என்றாள்.    

அதுவரை  இனிப்பாக‌ இருந்த  காபி இப்போது கசந்தது.

ழக்கம்  போல் மாலை  ஐந்து மணிக்கு  ஆபீஸ் விட்டு  மெஜஸ்டிக்  சர்க்கிள் வழியாக  ரூமுக்கு  வந்து கொண்டிருந்தேன்.  திரிபுவன்  தியேட்டர் வாசலில் இருந்த  பேனரில் 'டான்'  படத்தில் அமிதாப்பச்சன்  பான் பராக் வாயுடன்  ஆடிக்கொண்டிருந்தார்.  தலை வலிப்பது போல்  இருந்தது.   ஒரு  காபி  குடிக்கலாம்  என்று  காமத் ஹோட்டலுக்குள்  நுழைந்தேன்.  ஒரு காபி  சொல்லிவிட்டு சுற்றிலும்  பார்த்தபோது  அவளைப்  பார்த்து விட்டேன். தன் கல்லூரித்  தோழிகளுடன்  வந்திருந்தாள் பத்மினி. என்னைப்  பார்த்துவிட்டு  'ஹாய்'  என்று  அருகில்  வந்தாள்.  நவீனமாகத் தைக்கப்பட்டிருந்த  சுடிதாரில்  மிக அழகாக  இருந்தாள். அவள்  மேல்  லேசாக  இருந்த  கோபம்  போய்  மீண்டும் காதல்  வந்தது. “போயிடாதே இரு வர்ரேன்” என்று  கூறிவிட்டு தோழிகளை அனுப்பியபின்  அருகில்  வந்தமர்ந்தாள்.   இன்று அவளிடம்  இருந்து மல்லிகை  மணம் வீசியது.  எத்தனை  வாசனை  திரவியங்கள்  வைத்திருப்பாள்  என்று யோசித்தேன்.  அவள்  அருகில்  உட்கார்ந்திருப்பதே  பெருமையாக  இருந்தது.   எங்கள் இருவரையும் பார்ப்பவர்கள்  எல்லோரும்  பொறாமையில்  பார்ப்பது  போலவே  இருந்தது.   திடீரென்று கேட்டாள்,

“உனக்கு  எவ்வளவு  சம்பளம்?”

“இருநூற்று  அறுபது  பேசிக்”   என்றேன்.

புரியாததால் முறைத்து விட்டுக்  கேட்டாள்,  "வீட்டுக்கு  எவ்வளவு  சம்பளம்  கொண்டு  போவாய்?”

“எல்லாப்  பிடித்தமும்  போக  அறுநூறு  ரூபாய்…”  என்றேன்.

“நீ  என்ன  வேலை பார்க்கிறாய்?"   என்றாள்  சுருதி  குறைந்து.

“எல்.டி.சி.”  என்றேன்  பெருமையுடன்.

“அப்படின்னா?” என்றாள்.   பேசும்போது  அசைந்த இதழ்களும்,  சற்றே  தெரிந்த  வெண் பற்களும்  எந்த இளைஞனையும்  நிலைகுலையச்  செய்யும்.

“அப்படின்னா..  லோயர் டிவிசன்  கிளர்க்..  கிளர்க்குக்கும்  கொஞ்சம் கீழே..  பியூனுக்கும்  கொஞ்சம்  மேலே” என்று  ஹரிச்சந்திரனைப்  போல  பேசி,  என்  தலையில்  நானே  மண்ணை  வாரிப்  போட்டுக்கொண்டேன்.  முக்கியமாக  பியூன்  என்ற  பதத்தை  உபயோகித்திருக்கக்  கூடாது  என்பதை  அவள்  முகம்  போன  போக்கை வைத்து  லேட்டாக  உணர்ந்தேன்.

“நான்  சொல்றதால  ஃபீல் பண்ணாத..  உன்னோட ஒரு  மாச  சம்பளம்  எனக்கு  ஒரு  சுடிதார்  வாங்கக்  கூட  கட்டி  வராது.   என்னோட  அண்ணன்கள்  எனக்கு  ஒவ்வொரு  மாசமும் பாக்கெட்  மணியா  குடுக்கற  பணம்  உன்  சம்பளத்தை  விட  அதிகம்.  எனக்கு  ரெண்டாவதா  ஐ லவ் யூ  சொன்னவன்  யார்  தெரியுமா?  என்  காலேஜ் சீனியர்.   அவன் அப்பா  கர்நாடகாவின்  ஹெல்த்  மினிஸ்டர்.   ராஜாஜி  நகர்ல  பெரிய  வீடு.   நாலு  கார் வச்சிருக்காங்க.  என்னைக்  கல்யாணம்  பண்ண  தயாரா  இருக்கான்.   ஆனா  என்ன.. ஒரு  தடவை  நந்தி  ஹில்ஸ் போனப்ப  அங்க  இங்க  கை  வச்சான்.   மற்றபடி  நல்ல  பையன்.   நீ  பேஜார்  ஆக  வேண்டாம்”   என்றாள்.

கலவையான  உணர்ச்சியில்  இருந்த  என்னிடம்,

“கிருஷ்கிட்ட  இதை...”   அவள்  முடிப்பதற்கு  முன்  நான்  கூறினேன்,

“நான்  சொல்ல  மாட்டேன்.”

“சொல்லுடா... அப்பத்தான்  சீக்கிரம் கல்யாண ஏற்பாடு செய்வாங்க…”   என்றாள்  கூலாக. 

அடுத்த நாள்  அலுவலகத்தில் பாண்டுரங்காவிடம் கூறினேன்.

“சுஹாசினியைக் கல்யாணம் செஞ்சுக்கறேன்.”

“அவ்தா?   ஒல்லது...  வர்ற  ஞாயித்துக்கிழமை  காலைல  பத்துமணிக்கு  நல்ல  நேரம்  தொடங்குது.   அப்ப அவங்க  வீட்டுக்குப்  போக‌லாம்”  என்றார்  பாண்டு.

அலுவலகக் காலண்டரில்  பார்த்தேன்.   அந்த  ஞாயிற்றுக் கிழமை  என் ராசிக்கு சந்திராஸ்டமம்  என்று போட்டிருந்தது.   கல்யாணத்துக்குப் பிறகு  பெண்கள்  உபயோகிக்கும்  அழகிய  கைக்குட்டைகளும், சளி  மருந்துகளும்  நிறைய  வாங்கி  வைத்துக்கொள்ள  வேண்டும்.   சுஹாசினிக்கு  உபயோகப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com