இராமேஸ்வரத்தில் அவசியம் பார்க்க வேண்டிய பத்து இடங்கள்!

இராமேஸ்வரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தீவாகும். இத்தீவு பாம்பன் பாலம் மூலமாக தரைவழிப் போக்குவரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது. ராமன் ஈஸ்வரனை வணங்கிய இடம் என்பதால் இத்தலத்திற்கு “இராமேஸ்வரம்” என்ற பெயர் ஏற்பட்டது. இராமேஸ்வரத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான பத்து இடங்களைப் பார்ப்போம்.
இராமேஸ்வரத்தில் அவசியம் 
பார்க்க வேண்டிய பத்து இடங்கள்!

1. இராமநாதசுவாமி திருக்கோயில்

இந்தியாவில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களுள் ஒரு முக்கியமான தலமாகும்.    

2. ஸ்ரீகோதண்டராமர் கோயில்

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாக கருதப்படும் இத் திருக்கோயில் தனுஷ்கோடிக்குச் செல்லும் வழியில் வங்காளவிரிகுடா மற்றும் மன்னார் வளைகுடாவால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவில் அமைந்துள்ளது. 

3. தனுஷ்கோடி

பாம்பன் தீவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 1964 ஆம் ஆண்டு வீசிய புயலால் முற்றிலும் சேதமடைந்த ஒரு தீவாகும். இராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  இதைத் தாண்டி இன்னும் நான்கு கிலோமீட்டர் பயணித்தால் அரிச்சல்முனை என்ற பகுதியை அடையலாம்.  இங்கு வங்காளவிரிகுடாவும் இந்தியப் பெருங்கடலும் இணைகின்றன. 

4. கலாம் இல்லம்

முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் வாழ்ந்த இல்லம் தற்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது.   காலை 08.00 மணியிலிருந்து இரவு 07.00 மணி வரை இல்லத்தைப் பார்வையிடலாம். 

5. இராமர் பாதம்

கெந்த மாதன பர்வதம் என்ற இடத்தில் இராமர் பாதம் அமைந்துள்ளது.  இது ஒரு மணல் மேடாகும்.  நிலமட்டத்திலிருந்து சுமார் 60 மீட்டர் உயரமுடையது இந்த சிறிய குன்று.  இந்த இடத்தின் மீது இலங்கைக்குச் செல்ல கடலில் பாலம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.  அருள்மிகு இராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ராமர் பாதம் அமைந்துள்ளது.   

6. பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

இராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பிரதான சாலையில் சீதா தீர்த்தத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.  இங்கு அனுமன் செந்தூர நிறத்தில் காட்சி தந்து அருளுகிறார்.  சேது பந்தனம் உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட மிதக்கும் கற்களை இங்கு தரிசிக்கலாம்.  அளவிலும் எடையிலும் பெரிதாக உள்ள இத்தகைய கற்கள் தண்ணீரில் மிதக்கும் அதிசயத்தைக் காணலாம். 

7. வில்லூண்டித் தீர்த்தம்

வில்லூண்டி என்றால் அம்பினால் துளைக்கப்பட்ட இடம் என்பது பொருளாகும்.

இராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.  கடலுக்குள் அமைந்துள்ள வில்லுண்டித் தீர்த்தத்தில் தூய நீர் உருவாவது அதிசயமாகும்.       கரையிலிருந்து கடலுக்குள் 120 அடி நீளத்திற்கு ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.    பாலத்தின் இறுதியில் இந்த கிணறு போன்ற தீர்த்தம் அமைந்துள்ளது.      

8. அப்துல் கலாம் நினைவு மண்டபம்

இராமேஸ்வரம் தீவில் பேக்கரும்பு என்ற இடத்தில் அப்துல்கலாம் அவர்களுக்கு ஒரு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.   மூன்றரை ஏக்கர் பரப்பளவில் இருபது கோடி ரூபாய் மதிப்பில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.  கலாம் அவர்கள் பயன்படுத்திய உடைகள், புத்தகங்கள் மற்றும் அரிய புகைப்படங்கள் முதலானவை இந்த மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

9. லட்சுமண தீர்த்தம்

இலட்சுமணர் தனக்கு ஏற்பட்ட பாவங்களைப் போக்கிக் கொள்ளுவதற்காக இந்த தீர்த்தத்தை உருவாக்கியைாகவும், இந்த இடத்தில் ஒரு லிங்கத்தை நிறுவி சிவபெருமானிடம் பாவ நிவர்த்தி வேண்டி பிராத்தனை செய்ததாகவும் ஐதீகம்.

10. குந்துகால்

சிகாகோவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட 26.01.1897 அன்று இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் இந்த இடத்தில்தான் வந்து இறங்கினார்.  இதன் தொடர்பாக இப்பகுதியில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.   அக்காமடம் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் 4 கிலோமீட்டர் பயணித்து இந்த இடத்தை அடையலாம்.

      

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com