உயர்வதற்கான உன்னத வழியை உணர்த்தும் குட்டிக்கதை!

உயர்வதற்கான உன்னத வழியை உணர்த்தும் குட்டிக்கதை!
www.pond5.com

"பலம் என்பது உடல் அளவை பொருத்தது அல்ல. அளப்பரிய மன உறுதியைப் பொறுத்ததாகும்" என்கிறார் மகாத்மா காந்தி. 

வாழ்க்கையில் எதிர்ப்படும் சவால் நிறைந்த பணிகள் மனிதனின் உள்ளத்தைப் பண்படுத்தி, சவால்களை எதிர்கொண்டு வெற்றிக் கொள்ளத் தேவையான மனபலத்தை அளிக்கின்றன. துன்பமும், தொல்லையும் தந்த நிகழ்வுகளை மறப்பதற்கு மனம் உதவுகிறது. துயரத்தை மறந்துவிடுகின்ற நிலையினை மனபலம் உருவாக்க வல்லது. நமக்கு அதிர்ச்சியும், தொல்லையும்  தந்த நினைவுகள் நமக்கு நல்ல பாடம் அளிக்கின்றன. 

நமது ஆழ்மனம் நம்மை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லாது நமது தவறுகளை சீர்செய்து நம்மை முன்னேற்றும் திறன்கொண்டது. இதை உணர்ந்தால் நாம் ஒவ்வொருவரும் நம்மை முன்னேற்றிக்கொள்ள இயலும். நம்மை முன்னேற்றிக்கொள்ள, நம்மை நாம் மேம்படுத்திக்கொள்ள, சாதிக்க, நம் இலக்கை விரைவில் அடைய செய்யவேண்டியது என்ன என்பதை  இக்கதையின் மூலம் காண்போம்:

ரு முதலாளி தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்தார். மரக்கன்றுகள் நடுவதற்கு பள்ளம்  வெட்ட வேண்டிய வேலையை ரங்கன் என்பவனிடம் ஒப்படைத்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நன்றாக உழைத்து, நிறைய சம்பாதித்து விடவேண்டும் என்று நினைத்தான் ரங்கன். ஏனென்றால் அவன் தன் மகளின் திருமணத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வருகிறான். இன்னும் போதுமான அளவு பணம் சேரவில்லை. 

ரங்கன் முதல் நாளில் 20 புது மரக்கன்றுகளை நடுவதற்கு 20 பள்ளங்கள் தோண்டினான்.  அவன் உழைப்பைக் கண்டு முதலாளி அவனை மிகவும் பாராட்டினார். பிறகு ஒவ்வொரு நாளும் அவன் தோண்டுகிற பள்ளத்தின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 40ஆம் நாளில் அவன் காலையிலிருந்து மாலை வரை எவ்வளவோ முயன்றும் இரண்டு பள்ளங்கள்தான் தோண்ட முடிந்தது. ரங்கன் மிகவும் ஏமாற்றமடைந்தான் .

முதல் நாளின்போது 20 பள்ளங்கள் தோண்டியவன் நாற்பதாம் நாளில் 2 பள்ளம் தோண்டுகிறானே, இவனுக்கு என்ன ஆயிற்று? என்று முதலாளியும் குழம்பினார். அவர் ரங்கனின் மண்வெட்டியை வாங்கி பரிசோதித்துப் பார்த்தார். மண்வெட்டியின் முனை கூர் மழுங்கி இருந்தது. அவர் ரங்கனிடம் கேட்டார்,

"நீ உன் பணி ஆயுதத்தைக் கூர் தீட்டி நன்றாக வைத்துக்கொண்டால் என்ன? 

ரங்கன் சொன்னான். "இதற்கெல்லாம் எனக்கு கொஞ்சம்கூட நேரமே இல்லை ஐயா. நான் நாள் முழுவதும் சிறிதும் ஓய்வெடுக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறைய வேலை செய்து நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமே."

இதையும் படியுங்கள்:
நமது இதயம் பற்றி இதெல்லாம் தெரியுமா?
உயர்வதற்கான உன்னத வழியை உணர்த்தும் குட்டிக்கதை!

முதலாளி சொன்னார்: "ரங்கா இந்த மண்வெட்டி போலத்தான் நாமும். நம் அறிவுத் திறனும், உடல் பலமும் மழுங்கிவிட்டால் நம்மால் எதுவுமே செய்யமுடியாது. நமக்கு எவ்வளவோ கடமைகள் இருக்கலாம். நிறைய உழைக்க வேண்டி வரலாம். ஆயினும் உடலையும், மனதையும், அறிவையும் எப்போதும் பேணி கூர்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் நிறைய சாதிக்க முடியும். நம் இலக்கை விரைவில் அடைய முடியும்.”

அன்பர்களே! வெற்றி பெற வேண்டும் என்ற தணியா தாகம் கொள்ளுங்கள்; கடுமையாக உழைக்க வேண்டும் என்ற போர் குணத்தை கொண்டிருங்கள்; தொடர்ந்து முயற்சிக்கும் வேட்கையை கடைபிடியுங்கள். ஆனால், அதை எப்படி செய்ய வேண்டும்? அதற்கான ஆயுதங்களை எப்படி தயாரித்து வைத்திருக்க வேண்டும்? என்பதை முன்கூட்டியே தீர்மானித்து செயல்பட கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உயர்வதற்கான உன்னத வழி கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com