கழுகுமலை :
கழுகுமலை தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு கழுகுமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தம். அத்துடன் புகழ்பெற்ற 2 முக்கிய கோவில்களும் (கழுகுமலை வெட்டுவான் கோவில், சமணர் படுகைகள் ) உள்ளன. இது கடல் மட்டத்திலிருந்து 105 மீட்டர் (344 அடி) உயரத்தில் உள்ளது. இது கோவில்பட்டிக்கும் சங்கரன் கோவிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது.
அரைமலை என்னும் பழம் பெயரைக் கொண்ட கழுகுமலையின் கிழக்கு பக்கம் வெட்டுவான் கோயிலும், அதன் அருகில் தென்புற மலையில் சமண தீர்த்தங்கரர் உருவங்களும் உள்ளன.
கழுகுமலை முருகன் கோவில் ஒரு குடைவரை கோவிலாகும். அருணகிரிநாதர் தமது திருப்புகழில் கழுகுமலை முருகனைப் பற்றி பாடியுள்ளார். ஆக சம்பாதி என்ற கழுகு அரசன் தவம் புரிந்த இடமானதால் இத்தலம் கழுகுமலை என பெயர் பெற்றது.
வெட்டுவான் கோவில்:
ஒரே கல்லால் செதுக்கப்பட்ட கலைநயமிக்க கோவில் இது. எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. சிற்பங்கள் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இக்கோவில் முழுவதுமாக முடிக்கப்படவில்லை. பிற்காலத்தில் விநாயகர் இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுகிறார். கருங்கல்லை குடைந்து இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவிலை போன்றது. பெரிய மலைப்பாறையில் ஏறக்குறைய 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டி எடுத்து அதன் நடுப்புறத்தை கோவிலாக செதுக்கியுள்ளனர். இதில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளது. இங்கு உமா மகேஸ்வரர் தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, சிவன் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகளும் இவற்றிற்கு கீழ் பூதகணங்களின் சிலைகளும் அழகாக வடிக்கப்பட்டுள்ளன.
சமணர் படுகைகள்:
பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் சமணர் படுகைகள் அமைக்கப்பட்டது. இங்கு திகம்பர சமண துறவிகள் தங்கி சமண சமயத்தை பரப்பினர். இப்படுகைகளில் மகாவீரர், பாகுபலி, பார்சுவநாதர் போன்ற 150 தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இது தமிழக தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.