
-தனுஜா ஜெயராமன்
லலிதாம்பிகை என்ற பெயர் வேண்டுமானால் பலருக்குப் புதியதாக இருக்கலாம். ஆனால், அவரது வசீகரமான முகமும், அதில் நிமிடத்திற்கொரு முறை தோன்றி மறையும் அழகிய இயல்பான, எளிமையான முகபாவங்களும் பலரிடையே வெகுப்பிரபலம். ப்ளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்களில் அந்தக் கால
முக ஒப்பனைகளுடனும் அலங்காரங்களுடனும் அழகாய்த் தோன்றுவார். எம்.எஸ்.வி பாடல்களுக்கு, சரோஜாதேவியின் உடல்மொழியைத் துல்லியமாகி நடித்து காண்பித்து, இவர் வெளியிட்ட காணொளிகள் காண்போர் மனதைக் கொள்ளை கொள்பவை. யார் இந்த லலிதாம்பிகை என தேடியதில் அவரின் பல ஆச்சர்யமான திறமைகளும், அவரைப் பற்றிய பல்வேறு தகவல்களும் நமக்கு கிடைத்தன. அவரே நம்மிடம் அதனைப் பகிர்ந்துகொண்டதில் பல துளிகள்...
லலிதாம்பிகை யார்?
அம்மா மாலதி செல்வம், அப்பா செல்வம். இருவரும் புதுச்சேரியில் வசித்து வருகிறார்கள். அம்மா கலைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர். பாண்டிச்சேரி லலித் கலா அக்டமியின் ரெப்ரசன்டேடிவ் உள்ளார். புகழ்பெற்ற ரங்கோலி கலைஞர். அதனால் எனக்கு இயல்பிலேயே கலைகளில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. ஆனால், புதிய துறையில் என்னை ஈடுபடுத்த வேண்டும் என்று அம்மா விரும்பியதால் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வைத்தார். சிறு வயதிலேயே அரங்கேற்றம் செய்து பல்வேறு விழா மேடைகளில் பரதம் ஆடிய அனுபவங்கள் உண்டு.
பரதநாட்டிய கலைஞரான உங்களுக்குப் பழைய திரைப்பட சாயலில் காணொளிகளை உருவாக்கம் செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?
நான் புதுச்சேரியிலேயே பரதநாட்டிய அகடமி ஒன்றை வைத்து நடத்தி வருகிறேன். கொரோனா காலகட்டத்தில் நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது. புதியதாக ஒன்றை செய்யவேண்டும் என்கிற ஆர்வம் தோன்றியது. அதனால் வீட்டில் இருந்தபடியே பழைய திரைக் கலைஞர் போல் ஒப்பனை செய்து, முகபாவங்களைக் காட்டி அபிநயம் பிடித்து சில காணொலிகளை வெளியிட்டேன். நிறைய பேர் ரசித்துப் பாராட்டியதால், அதனைத் தொடர்ந்து மேலும் சில காணொளிகளை வெளியிட்டேன்.
அந்த காணொலிகளுக்கான வரவேற்பு எப்படியிருந்தது?
நானே எதிர்பார்க்காத அளவு உலகெங்கும் நல்ல வரவேற்பு; பாராட்டு. நிறைய திரைக்கலைஞர்கள், டைரக்டர்கள், நடிக நடிகைகள் என்னை போனில் அழைத்துப் பாராட்டினார்கள்.
அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்கள் உங்களைப் பாராட்டினாராமே?
ஆமாம். சரோஜா தேவி அவர்கள் என்னை போனில் தொடர்புகொண்டு வாழ்த்தியதை என்னால் மறக்கவே முடியாது. நான் செய்த காணொளிகளில் அதிக வரவேற்பினைப் பெற்றது சரோஜாதேவியாக நடித்த காணொளிகள்தான். இயல்பிலேயே பரதநாட்டிய கலைஞரான எனக்கு அபிநய சரஸ்வதியின் அபிநயங்கள் மிக எளிதாக கைவந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததா?
என் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய காலகட்டத்தில் , நிறையத் திரைப்பட இயக்குனர்கள் தொடர்புகொண்டு என்னை நடிக்கக் கேட்டனர். ஆனால், எனக்கு நடிப்பதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. எனவே நடிப்பு வாய்ப்புகளை அன்புடன் மறுத்துவிட்டேன்.
திருப்பதி ப்ரம்மோற்சவத்தில் ஆட வாய்ப்பு கிடைத்தது எப்படி?
திருப்பதி ப்ரமோற்சவத்தில் ஆட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆடல் குழுவினர்கள் வருவார்கள். புதுவை மாநிலம் சார்பாக சென்ற குழுவினில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனது பாக்யம். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆடி வருகிறேன். ஒவ்வொரு வருடமும் எங்கள் குழுவினரின் ஆட்டம் மிகுந்த பாராட்டினைப் பெறும். இந்த வருடமும் பத்து நாட்கள் அங்கேயே தங்கியிருந்து பெருமாள் முன்பு ஆடி வந்தது பேரானந்தம்.
அந்தப் ப்ரம்மோற்சவ விழா குழுவில் உங்கள் பங்களிப்பு என்ன?
இந்த ஆண்டும் நான் காளியாட்டம் மயிலாட்டம்தான் ஆடினேன். கருடசேவையன்று பெருமாள் ஊர்வலத்தில் பெருமாள் முன்பு ஆடியதை என் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். எங்களின் ஆட்டங்கள் குறித்து ஆந்திர பத்திரிக்கைகள் பல்வேறு பாராட்டு செய்திகள் வெளியிட்டதை பெருமிதமாக நினைக்கிறேன்.
**************************************************
2009 ஆம் ஆண்டு யுத் காங்கிரஸ் ஆப் புதுச்சேரி " இளம் கலைமணி ' விருதினை வழங்கியது. 2011 சிறுவர் கலை சிகரம் விருதினை வென்றேன். சவுத் இன்டியன் கல்சுரல் அகாதமி வழங்கிய " பரத நாட்டிய சுடர் " விருதினை 2013 ல் வாங்கியிருந்தேன். அதே ஆண்டில் பாரதி யுவகேந்திரா வழங்கிய " யுவ ஶ்ரீ கலாபாரதி " விருதினை வென்றேன். 2014ல் நாட்டிய நங்கை மற்றும் 2016ல் பரதநாட்டிய சாம்ராட் விருதினையும் வென்றேன். ஜெம் ஆப் பாண்டிச்சேரி விருதினை 2017ல் பெற்றேன்.
**************************************************
உங்கள் எதிர்கால லட்சியம்?
பரதநாட்டியத்தில் மென்மேலும் பல சாதனைகள் படைக்கவேண்டும். அதைப் பலருக்கும் கற்றுத்தந்து அடுத்த தலைமுறைக்கும் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்பதே.
அவரது லட்சியமும், ஆசைகனவுகளும் கூடியவிரைவில் நிறைவேற வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.