ஆடியில் சுடும் தேங்காயில் இத்தனை விஷயமா? -இது சேலம் ஸ்பெஷல்!

ஆடியில் சுடும் தேங்காயில் இத்தனை விஷயமா? -இது சேலம் ஸ்பெஷல்!
Published on

டி மாதத்தின் சிறப்புகள் ஏராளம். அதில் ஒன்றுதான் தேங்காய் சுடும் கொண்டாட்டம். ஆடி மாதம் முதல் தேதியில் தேங்காய் சுடும் பண்டிகை தமிழ்நாட்டிலேயே சேலம் மற்றும் ஈரோடு, தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் அதிகம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்தப் பண்டிகை காவிரி, அமராவதி போன்ற ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களிடம் கொண்டாடப்படுகிறது. இதன் காரணம் என்ன என்பதைப் பற்றிய முழுமையான வரலாற்றுத் தகவல்கள் இல்லை.

நல்ல இளம் காய்கள் அல்லது ஓரளவு முற்றிய புதுத் தேங்காய்களை எடுத்து (அவரவர் விருப்பம்) மேல் முடிகள் நீங்க காரைக்கல்லில் உரசி அதன் கண் ஒன்றில் துளை இட்டு அதற்குள் உள்ள இளநீரை எடுத்துவிட்டு ஊறவைத்த பச்சரிசி, பாசிபருப்பு, வெல்லம் அவல் பொட்டுக்கடலை, எள்ளு கலந்த கலவையை சிறிது சிறிதாக அதற்குள் போட்டு எடுத்து வைத்த இளநீரை அது நிரம்பும் வரை ஊற்றிய பின் மஞ்சள் தடவிய அழிஞ்சில் குச்சியில் சொருகி  அடுப்புத் தீயில் சுட வைப்பது நம் தமிழரின் பழக்கம். சுட வைத்த தேங்காய்களை பிள்ளையார் கோவிலுக்கு எடுத்துச்சென்று வணங்கிவிட்டு பின் உள்ளே இருக்கும் கலவையை வெந்த தேங்காயின் மணத்துடன் பகிர்ந்து உண்பது வழக்கம்.

தேங்காய் சுடுவதன் நோக்கமாக மகாபாரதப் போர் அமைந்துள்ளது. ஆம். மகாபாரதப் போர் துவங்கியது ஆடி ஒன்றில்தான். அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் இடையிலான போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்ற அடிப்படையில், தேங்காய் தீயில் கருகி அதன் ஓடு வெடித்துச்சிதறுவது போல் எதிரிகளின் தலைகளும் தரையில் உருள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவே தேங்காய்களை சுட்டு பிள்ளையாரை வணங்கி போரைத் துவங்கியுள்ளனர் பஞ்சபாண்டவர்கள் என்கிறது முன்னோரின் தகவல்கள். அவர்களின் வழியில் மக்களும் தர்மத்தைக் காக்க கடவுளை வேண்டி  அதர்ம நோக்கங்களை ஆன்மீகத்  தீயிலிட்டு பொசுக்கி சுட்ட தேங்காய்களை  படைக்கின்றனர்.

இதற்கு ஏன் தேங்காய் பயன்படுத்த வேண்டும்? இந்து மதத்தில் கடவுளின் பூஜையில்  தேங்காய் உடைத்தல் இருந்தாலே முழுமை பெறுகிறது. தேங்காயின் மேலுள்ள மட்டை நார் கடினமான ஓடு இவைகளை நீக்கி உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தையே இறைவனுக்குப் படைக்கிறோம். அது போல நம் மனதில் உள்ள ஆணவம் அகங்காரம் கோபம் போன்ற தீய குணங்களை விலக்கி தூய்மையான மனதுடன் இறைவனிடம் நம்மை ஒப்படைக்க வேண்டும் என்பதையே தேங்காய் உணர்த்தும் தத்துவம்.   

புதுமணத்தம்பதிகள் உள்ள வீடு என்றால் நிச்சயம் தேங்காய் சுடும் நிகழ்வு உண்டு. திருமணமான பின் முதலில் வரும் ஆடியை  தலை ஆடி என்று அழைத்து அவர்களை பெண் வீட்டிற்கு சீர் வரிசைகளுடன் அழைத்து தேங்காய் சுட்டு கோவிலுக்கு சென்று வணங்குவதுடன் பெரியோரின் ஆசிகளையும் பெற்று மகிழ்வர். ஆடியில் கருத்தரித்தால் கடும் வெயில் காலமான சித்திரையில் பிள்ளைப்பேறு நிகழ்ந்து ஆரோக்கியம் குன்றும் என்பதால் தம்பதிகள் ஆடியில் பிரிந்திருப்பது வழக்கம். ஆடி ஒன்றில் மனைவியை அவர் தாய் வீட்டில் விட்டுச் செல்லும் புது மாப்பிள்ளை போர்க்காலம் எனப்படும் ஆடி பதினெட்டு முடிந்த பின் மனைவியை அழைத்துச் செல்வர்.  

இந்தத் தேங்காயின் உள்ளே இருக்கும் பொருள்கள் புரதம் நிறைந்து உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. வயிற்றுப்புண்களை ஆற்றும் குணம் கொண்ட இந்த தேங்காய் உணவை செய்யப் பயன்படுத்தும் அழிஞ்சில் குச்சிகளும் பல்வேறு மருத்துவ சிறப்பு மிக்கவை. இந்தப் பண்டிகை குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் மிகவும் பிடித்த பண்டிகையாக உள்ளது. காரணம் இந்த அழிஞ்சில் குச்சிகளை வைத்து வருடம் முழுவதும் விளையாடி மகிழ்வார்கள் கிராமப்புற சிறுவர்கள்

எல்லாமே நவீனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நகர்ப்புறங்களில் இது போன்ற பண்டிகைகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள மனமின்றி உள்ளனர். பெரும்பாலோர் இந்தப் பண்டிகைகள் எதற்காக என்பதை பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி பாரம்பரியம் கலாச்சாரம் காக்க வேண்டியது நம் கடமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com