தேவிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
“முட்டாளா நீங்க? தனக்காகவும் தெரியவில்லை. சொன்னாலும் புரியவில்லை. நீங்களெல்லாம் ஏன் வேலைக்கு வரீங்க வந்து எங்க உயிரை எடுக்கறீங்க” இன்றைக்கும் கண்டபடி திட்டினார் மேனேஜர் சிவா.
என் சர்வீஸ் என்ன? படிப்பென்ன? இந்த ஆபீஸில் நான் தான் மேனேஜராகி இருககனும். திடீரென சிவாவை வேறு ப்ராஞ்சிலிருந்து இங்கே மாற்றி மேனஐராக்கி ஆபீஸையே கலக்கி விட்டார்கள்
சிவாவை மேனேஜராகவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. ஆனால் தன் மிரட்டலாலும், அதிகாரத்தாலும், வசைச்சொற்களாலும் எல்லோரையும் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் ஆட்டிவைத்துக்கொண்டிருந்தான்.
அதவும் தேவியை வேலை தெரியாதவள் என்று காட்ட, தினமும் ஏதாவது தப்பை கண்டு பிடித்து வெளிப்படையாக திட்டுகிறார். றார் என்ன றான். அவன் மூஞ்சியும், முகரையும்.
“உங்களை என் போஸ்ட்டுக்கு கன்சிடர் பண்ணிணாங்களாமே! குட் ஜோக் நல்லவேளை. ஆபீஸ் பிழைச்சது” என்பான் தினம் ஒருமுறையாவது.
ஆபீஸில் அனுதாபப்பட்டார்களே தவிர, வெளிப்படையாக ஒருவர் கூட சப்போர்ட் செய்யவில்லை
தேவிக்கு எப்படியாவது சிவாவுக்கு பதிலடி கொடுக்கனும்னு வெறி!
கணவன் மாதுவைக்கேட்டதும் அடி பிச்சிடுவோமா என்று திருப்பிக்கேட்டான்
ஐயோ என் வேலை போயிடும் என்று அலறி நானே பாத்துக்கறேன் என்றாள்.
பலத்தை வைச்சு ஜெயிக்க முடியலைனா பலவீனத்தை வைத்து ஜெயிக்கலாமே!
சிவாவின் பலவீனமென்ன? பணம்.
சிவா ஒரு கேம்ப்ளர், குடிகாரன். பணம் அதிகம் தேவைப்படும் ஆள் கம்பெனிகளுக்கு விலை கம்மியாகவும், அட்வான்ஸ் டெலிவரி தருவதாகவும் ஒரு கிசுகிசு.
தன் தோழி கல்பனா கம்பெனியில் முதலில் விசாரித்தாள் தேவி.
கல்பனா வகையாய் ஆதாரத்தோடு சீக்கிரமா சப்ளை செய்ததற்கு சிவாவுக்கு லஞ்சம் கொடுத்தோம் என்றாள்.
இருக்கிற கஸ்டமர்ஸ் மொத்தம் 420. சிவா வந்ததிலிருந்து சப்ளை நடந்த கம்பெனிகள் இருநூற்றுக்கும் மேல்.
தேவி தன்னுடைய தொடர்புகளை வைத்து விசாரித்ததில் சிவா மார்க்கெட்டில் எக்கச்சக்கமாய் விளையாடியிருந்தான்.
கிட்டத்தட்ட 50 கம்பெனிகளில் சிவா பணமாகவும் பைக், மற்றும் காராகவும் லஞ்சமாக வாங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.
பிரமித்துப்போனாள் தேவி.
எல்லா ஆதாரங்களையும் திரட்ட 20 நாட்களாயின.
அவைகளை ஒரு ஃபைலாக்கி, மூன்றுநாள் லீவு போட்டு ஹெட் ஆபீஸூக்கு சென்று அட்மின் ஹெட்டிடம் கொடுக்க, மெளனமாய் வாங்கிக்கொண்டு முதலாளியிடம் பேசுவதாயும் அடுத்த நாள் காலைவரை வெய்ட் பண்ணுமாறும் கூறினார்.
சரி என்று தலையாட்டினாள் தேவி
அடுத்த நாள் வெகு சீக்கிரமே ஆபீஸூக்கு வந்துவிட்டாள் தேவி.
ரிஷப்ஷனில் முதலாளி கூப்பிடுவதாய் சொல்ல, இதுவரை முதலாளியை பார்த்ததில்லை. சரியான வெகுமானம் கிடைக்கப்போகிறது என அகமகிழ்ந்தாள்.
கனிவான பார்வையில் “சொல்லுங்கம்மா” என்று கனிவாய் பேசினார்.
தேவி, சிவாவை பற்றியும், ஆபீஸில் அவர் மற்றவர்களை நடத்தும் விதம் பற்றியும் விபரமாய் சொல்லி, சிவா வாங்கிய லஞசம் பற்றிய முழு டிடெயிலை அட்மின் ஹெட்டிடம் தந்ததாகவும் சொல்ல...
“பார்த்தேன் படித்தேன்” என்றார்.
“இவராலே நம்ம கம்பெனி பணமும் பேரும் போகுது” என்றாள்.
“என்ன செய்யலாம் சொல்லுங்க”?
“டிஸ்மிஸ் பண்ணனும் ஸார்”
“நான் சொல்வதை கேளுங்க. இந்த ஃபைலை தயார் பண்ண எத்தனை நாளாச்சு?” கனிவாய் கேட்டார்.
“கிட்டத்தட்ட ஒரு மாசமா கடுமையா உழைச்சு இதே வேலையாயிருந்தேன்” பெருமையாய் சொன்னாள்.
“அப்ப நீங்க உங்க வேலையை பாக்கலை.”
“ஸார்”
”இதெல்லாம் யாருக்காக செஞ்சீங்க?”
“கம்பெனிக்காக. அதன் நல்ல பேருக்காக”
“கிடைச்சுதா? இல்லை. நீங்க செஞ்ச வேலையில் கம்பெனி பெயர் கெட்டதுதான் மிச்சம். உங்க வேலையை பாக்காத ஒழுங்கீனம். மேலதிகாரிக்கு பணியாத திமிர் இது. மற்றவர்களுக்கும் பரவும் உங்களை தண்டிக்காம விட்டா:”
தடுமாறிப்போனாள் தேவி.
“ஸார் சிவா கெட்டவர் குரலில்” பயம்.
“தெரியும். அவர் லஞ்ச ஊழல் பேர்வழி. இங்கேயும் இப்படித்தானிருந்தார். ஒரு தண்டனையாகத்தான் அவரை டிரான்ஸ்ஃபர் செஞ்சோம். அப்படியும் அவர் திருந்தலை. அவர் மேல் ஆக் ஷன் உறுதி. அதற்காக உங்களது ஒழுங்கீனத்தை ஒத்துக்க முடியாது” கண்டிப்பாக பேசினார்.
“”ஸார்”
“உங்களுக்கு ஒரு மெமோ கொடுக்க சொல்லியிருக்கேன். ஒரு இன்கிரிமென்ட் கட் பண்ணியிருக்கேன்” என்று சொல்ல...
“ஸார் தெரியாம...”
முடிக்கு முன் “நீங்க போகலாம்” என்று எழுந்தார்.