

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை மகாராஷ்டிராவை சேர்ந்த இந்த வயது முதிர்ந்த தாய்மார்கள் நிரூபித்து இருக்கிறார்கள். 'ஆஜிபைச்சி' என்றால் மராட்டியில் 'வயது முதிர்ந்த தாய்மார்கள்' என்று பொருள்.
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறிய கிராமமான பங்கானேவில் (Phangane village), பொதுவாக வயதானவர்கள் ஓய்வெடுப்பதற்கான மதிய வெயில் நேரத்தில், பிரகாசமான இளஞ்சிவப்பு நிற புடவைகளை அணிந்த வயதான பெண்களின் குழுக்கள், ஒவ்வொரு நாளும் ஒரு மாமரத்தின் கீழ் வண்ணமயமான குடிசையில் கூடி, கல்வி கற்கிறார்கள். இவர்கள் சிறிய மாணவிகளைப் போலவே school bagஐ மாட்டிக் கொண்டு செல்கிறார்கள். இவர்கள் எல்லோரும் 60 வயது முதல் 80 வயதை கடந்தவர்களாக இருக்கிறார்கள்.
ஆஜிபைச்சி ஷாலா அல்லது முதியோர் பெண்கள் பள்ளி என்று அழைக்கப்படும் இந்த தனித்துவமான பள்ளி, இளமைப் பருவத்தில் முறையான கல்வியைத் தவறவிட்ட பெண்களுக்கு எழுத்தறிவு மற்றும் அடிப்படை எண் கணிதத்தைக் கற்பிப்பதற்காக அந்த கிராமத்தின் தொடக்கப்பள்ளியின் ஆசிரியரான யோகேந்திர பங்கர் என்பவரால் நிறுவப்பட்டது.
இந்தப் பள்ளி, பெண்கள் பருத்தி கம்பளங்களில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு, மராத்தி எழுத்துக்கள் மற்றும் எண்களைப் எழுத பயிற்சி செய்கிறார்கள். தங்களுடைய பெயர்களை எழுதவும் கற்று கொள்கிறார்கள்.
இந்தப் பள்ளி 2016 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று தொடங்கப்பட்டது. இது 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், உள்ளூர் இளம் ஆசிரியரின் வீட்டில் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால், கல்வி கற்க முன்வரும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தில், ஒரு பெரிய மாமரத்தின் நிழலில் ஒரு பிரத்யேக இடம் உருவாக்கப்பட்டது. இன்று, சுமார் 30 பெண்கள் வாரத்தில் ஆறு நாட்கள் மதியம் இரண்டு மணி நேரம் வந்து கலந்து கொள்கிறார்கள்.
பங்கானேவில் வாழ்பவர்கள் கிராமப்புற கலாசாரங்களை பின்பற்றுகிறார்கள். பெண்கள் வீட்டு வேலைகளை நிர்வகிக்கிறார்கள்; பேரக்குழந்தைகளைப் பராமரிக்கிறார்கள்; சமைக்கிறார்கள் மற்றும் கால்நடைகளைப் பராமரிக்கிறார்கள்; இருப்பினும் அவர்கள் வகுப்புகளில் கலந்துகொள்ள நேரத்தை ஒதுக்குகிறார்கள். அன்றாட பொறுப்புகள் இருந்தபோதிலும் கற்பதற்காக சிறிது நேரத்தை ஒதுக்கிறார்கள். இது அவர்களுடைய கல்வி கற்பதற்கான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. மேலும் இது சமூக உணர்வையும் உருவாக்குகிறது. இந்த வயதான பெண்கள் ஒரு ஆதரவான சூழலில் சகாக்களுடன் சேர்ந்து கற்றுக்கொள்ளும் போது அவர்களுக்கு ஒரு விதமான அமைதியும் சந்தோஷமும் கிடைக்கிறது.
இளமை பருவத்தில் கிடைக்காத மற்றும் பெறாத கல்வியை வயது முதிர்ந்த போதிலும் கற்போம் என்கிற உறுதி இவர்களிடம் இருக்கிறது.