பிரமிப்பூட்டும் 6 உலகத் தலங்கள் பத்மினி பட்டாபிராமனின் அனுபவங்கள்!

செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினம்!
பிரமிப்பூட்டும் 6 உலகத் தலங்கள்
பத்மினி பட்டாபிராமனின் அனுபவங்கள்!

க்கிய நாடுகளின் உலக சுற்றுலா மையம் என்னும் அமைப்பு (United Nations World Tourism Organization (UNWTO) அறிவித்துள்ளபடி,1980ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27ம் தேதி உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்படுகிறது.

இதன் தலைமையகம், ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் நகரில் இயங்கி வருகிறது. நம் நாடும் இதன் Executive Council உறுப்பினர்.

சுற்றுலா தினம் கொண்டாட வேண்டியதன் அவசியம் என்ன?

லகில் பத்தில் ஒருவர் சுற்றுலாத் துறையில் பணி புரிகிறார் என்கிறது ஒரு புள்ளி விபரம். தவிர, உலகம் முழுவதுமே கிராமப் புறங்களில் பாரம்பரியப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு, குறிப்பாக மகளிருக்கு சுற்றுலாத்துறை மூலம்  நிறைய வேலை வாய்ப்புக் கிடைத்து வருகிறது. சுமார் 54 சதவீதம் பெண்கள் சுற்றுலாத்துறை சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதால், பல இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதோடு பல விதமான மக்களை, அவர்களது கலாசாரத்தை, பாரம்பரியத்தை அறிந்துகொள்வதோடு, பலரின் வருமானத்துக்கும் காரணமாக இருக்கிறோம் அல்லவா? நாலு இடம் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியையும், சரிவர எல்லாம் நடக்க வேண்டுமே என்ற டென்ஷனையும் ஒரே நேரத்தில் தருவது பயணம்.

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன்

இந்தியாவில் பல ஊர்களும் அனேகம் பேர் பார்த்தவைதான் என்பதால், வெளிநாடுகளில் இருக்கும் சுவாரசியமான இடங்கள் சில பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.

துவரை எத்தனையோ  நாடுகளுக்குச்  சென்று வந்த எனக்கு விதவிதமான அனுபவங்கள் உண்டு. அதிலும் முட்டை கூட தொடாத சைவ வாசியாக இருந்து விட்டால் போச்சு...

என்னுடைய பல பயணக்கட்டுரைகள் மங்கையர் மலரில் வெளிவந்துள்ளன. பல நாடுகளில் என்னை கவர்ந்த அம்சங்களும் உண்டு. சங்கடமான அனுபவங்களும் உண்டு. சங்கடங்கைள மறந்து விட்டு என்னை மிகவும் கவர்ந்த, பிரமிக்க வைத்த, சிந்திக்கத் தூண்டிய 6 இடங்களைப் பற்றி இக்கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன.

1. ஹாலந்தின் படகு வீடுகள்

ரோப்பிய நகரங்கள் அனேகமாக ஏதாவது ஜீவ நதிக் கரையில், கடல் சூழ  அமைந்திருக்கும். நெதர்லாந்தின் ஒரு பகுதியான ஹாலந்து, North Sea என்னும்
வட கடலால் சூழப்பட்டு, ரைன் நதியின் முகத்துவாரத்தில் இருக்கும் அழகிய நகரம். நகரைச் சுற்றி ஓடும் கால்வாய்கள், அவற்றை இணைக்கும் வளைவுப் பாலங்கள் என்று  நீருக்கு நடுவே நகரம்.

சுற்றுலாப் பயணிகளுக்காகவே காத்திருக்கும் படகுகள் மெல்ல ஊரை வலம் வர, படகோட்டிகள், டச்சு கலந்த ஆங்கிலத்தில் சுற்றுப்புறக் காட்சிகளை விளக்கு கின்றனர். திரும்பிய இடங்களில் எல்லாம் டியூலிப் பூக்களின் ஆரவாரம்.

ஏகப்பட்ட கொடிகள் பறக்க, மாபெரும் கட்டடம் ஒன்று, கரையில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள், மறைந்த இளவரசி டயானா ஆகியோர் தங்கும் கார்ல்டன் ஹோட்டல் அது.

ஊருக்கு குறுக்கே ஓடும் சில கேபிள்கள், நெருக்கமான வீடுகளின், கம்பியில்லாத ஜன்னல்களுக்குள் மறைகிற காட்சி புதுமையாக இருந்தது. கேட்டால், வீடுகளின் வாசல் மிக குறுகலாக இருப்பதால், பெரிய ஃபர்னிச்சர், ஃப்ரிட்ஜ் போன்றவற்றை, ஜன்னல் வழியே உள்ளே தள்ளுவார்களாம் !

வைரத் தொழிற்சாலை இங்கே அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. வைரமானது, வெட்டி எடுக்கப் படுவதிலிருந்து எப்படி நகையாக மாறுகிறது என்பது வரை அறிவு பூர்வமான டெமோ உண்டு. பர்ஸ் கனமாக இருந்தால் நகை வாங்கலாம்!

2. இதயம் கவரும் ஈஃபில் டவர்

ஃப்ரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸின் அடையாளச் சின்னம்.  1889ல் நடைபெற்ற ஒரு பொருட்காட்சிக்காக கட்டப்பட்டது இந்த துருப்பிடிக்காத இரும்பு கோபுரம். குஸ்தாவே ஈஃபில் என்னும் ஐரோப்பியக் கட்டிடக் கலைஞர் உருவாக்கியது. 984 அடி உயரம் கொண்ட இந்த டவர், 60 மைல் சுற்றுவட்டாரத்தில் எங்கிருந்து பார்த்தாலும்

தெரியும் அதிசய கோபுரம். கேபிள் கார் போன்ற லிஃப்ட் மேலே கோபுரத்தின் உச்சிக்கு நம்மை தூக்கிச் செல்ல, கொஞ்சம்  கொஞ்சமாக பறவைப் பார்வையில் , சுறுசுறுப்பான பாரீஸ் நகரின் அழகும் சுற்றிச் செல்லும் நதியின் அழகும்  பார்க்க கண்கள் இரண்டு போதவே போதாது.

கருத்தைக் கவரும் லூவ்ரே மியூசியம். (Louvre Museum)

லியர்னாடோ டாவின்சியின் உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் மட்டுமா,அவரது மற்ற ஓவியங்களான, ‘Virgin of the Rocks’, ‘The Virgin and Child with Saint Anne’ உட்பட, பல ஐரோப்பிய ஆர்டிஸ்ட்களின் பல ஓவியங்கள்  கருத்தை கவர்கின்றன. ஒவ்வொன்றும் நாள் முழுவதும் பார்க்கலாம். எல்லாமே சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றன.

3. ஹாலிவுட்டின்யூனிவர்சல் ஸ்டூடியோ

லக சினிமாத் துறையின் உயிர் நாடி ஹாலிவுட். அதன் பிரபல யூனிவர்சல் ஸ்டூடியோ ஒரு தனி உலகம். 420 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இதில்தான் 1915லிருந்து சரித்திரம் படைத்த திரைப்படங்கள் உருவாகின. ஜாஸ், ஜுராசிக் பார்க், ஈ.டி., பேக் டு தி ஃப்யூச்சர், உள்ளிட்ட பல அதிரடி திரைப்படங்கள் உருவான திருத்தலம். உள்ளே நுழைந்து செல்லும்போது இங்கே தயாரான திரைப் படங்களின் போஸ்டர்கள், வரலாற்றைச் சொல்கின்றன.

ஒரு ட்ராமில் ஏறி உட்கார்ந்தால், பல ஆங்கிலப் படங்களில் நாம் கண்டு வியந்த காட்சிகளின் செட்காட்சிகள் நம்மைச் சுற்றி விரிகின்றன.

“மழைக்கு தயாராகுங்கள்...” ஸ்பீக்கர் குரல் எதிரொலிக்க, எங்கிருந்தோ பெருமழை ட்ராமுக்குள் கொட்டுகிறது. பெரு வெள்ளம் வந்து வண்டிக்குள் கொட்டுகிறது. பேயாட்டம் ஆடுகிறது. திகில் நம்மை ஆட்டுகிறது. சற்று நேரத்தில் நீர் எல்லாம் வடிந்து போய், வண்டி பழைய நிலைக்கு வருகிறது. என்ன ஆச்சர்யம்? நாம் துளிக்கூட நனையவில்லை.

இருட்டு குகைக்குள் நாம் நுழைய, திடீரென்று நம் முகத்துக்கு அருகே வந்து கிங்காங்கின் பிரம்மாண்ட உருவம் ஹூங்காரம் செய்கிறது. அலறுகிறோம்.

மீண்டும் இருட்டுக்குள் நுழைய, நம் டிராம் மீது சடாரென்று ஒரு ரயில் மோதி நொறுங்க, நம் மீது விழும் ரயில் பெட்டிகள், நிலச்சரிவில் பூமி பிளக்க, அய்யோ தீர்ந்தோம்.. என்று நினைத்தால்… சற்று நேரத்தில் ஒன்றுமே இல்லை.

மற்றொரு இடத்தில் எரிமலை வெடித்து நம்மை நோக்கி லாவா ஓடி வருகிறது.

ஜுராசிக் பார்க் என்ற பார்க் வழிப் பாதையில் செல்லும்போது அருகே வந்து முகம் நீட்டி கர்ஜிக்கும் டயனோசர்கள் அலற வைக்கின்றன. எல்லாமே எலக்ட்ரானிக் மாயங்கள்..

பாலத்தில் நம் வண்டி செல்லும்போது பாலம் அப்படியே பாதியில் கீழே உடைந்து நம் வயிற்றைக் கலக்கி விட்டு நிமிர்கிறது. ஹைட்ராலிக் அழுத்தத்தில் இதை நிகழ்த்துகிறார்கள்.

4. பாங்காக்கில் நதிக்கரை ஷாப்பிங்

விலை உயர்ந்த ரத்தினக்கற்களின் பெட்டகம் என்றழைக்கப்படும் நகரம் தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக். அங்கே ரொம்ப புகழ் பெற்றது ராயல் பேலஸ் என்ற, பல கட்டிடங்களை உள்ளடக்கிய  மிகப் பிரம்மாண்டமான  அரண்மனை வளாகம்.

புத்தம் சரணம் முழங்கும் பாங்காக்கில் ராமாயணம் பெரிதும் கொண்டாடப்படுகிறது. புத்தரின் கோயில்களில் எல்லாம் சுவர்களில் ராமாயணக் காட்சிகள் வண்ண மயமான சித்திரங்களாக எங்கும் நிறைந்திருக்கின்றன. என்ன, ராமர் சீதை மற்ற கதாபாத்திரங்கள் எல்லோரும் கொஞ்சம் சயாமீஸ் ஜாடையில் இருக்கிறார்கள்.  

ஆதி காலத்தில் பாங்காக்கின் தலைநகரப் பெயர் ‘அயுத்யா’ (அயோத்தி என்பதிலிருந்து வந்திருக்குமோ?) நதிக் கரைகளில் செழித்து வளர்ந்த நீர் வழி போக்குவரத்து வணிகத்தின் சொச்சமாக ‘மிதக்கும் சந்தைகள்’ (Floating Market) இங்கே உலகப் பிரபலம்.

மிதக்கும் சிறு மரப் படகுகளில் பழங்கள், காய்கறிகள், பூக்கள், பொம்மைகள், சாவனீர்கள், கடல் உணவு... என்று நிறைத்து (அனேகமாக) பெண்கள் படகை மெல்ல செலுத்தியபடி வருகிறார்கள். நடுவே ஆடும் பாலத்தின் மீது நின்றபடி நாம் பேரம் பேசலாம். வாங்கலாம். சுடச் சுட பொரித்துத் தரப்படும் கடல் நண்டுகளும் மீன்களும் இரால்களும் காற்றில் பரப்பும் வாசம், சைவர்களை சங்கடப் படுத்துவது என்னவோ உண்மை. இருந்தாலும் இங்கு குவியும் கூட்டமும், வண்ணப் படகுகளும், டூரிஸ்ட்டுகளின் சுறுசுறுப்பும், பேரம் பேசும் இரைச்சலும் முற்றிலும் புதிய உலகம்.

சுற்றுலாத்துறைக்கு வருமானம் தரும் இந்த மிதக்கும் மார்க்கெட்களினால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

ஆனாலும், இன்று  பாங்காக் நகரம் நவீன மயமாகி, பல நீர் வழி போக்குவரத்துக்கள், சாலைகளாக மாறியதால் மிதக்கும் சந்தைகள் குறைந்து விட்டதாகவும், இங்கிருந்த பலர், நகருக்குள் சென்று விட்டதாகவும்  கூறுகிறார்கள்.

5. வானிலிருந்து கீழே எவரெஸ்ட்

நேபாள தலை நகர் காட்மாண்டு திரிபுவன் விமான நிலையத்தில்,  இளம் காலைப் பொழுதில்,  பல ஏர் வேஸின்  குட்டி விமானங்கள் அணிவகுத்து  நிற்கின்றன.

எதற்கு? உலகின் மிக உயர்ந்த இமாலயத் தொடரை வான் வலம் வருவதற்குத்தான்.

நாங்கள் பயணித்த, 16 சீட்கள் மட்டுமே கொண்ட புத்தா ஏர்வேஸ் குட்டி விமானம் கிழக்கு வானில் பாய்கிறது. சில நோடிகளில் மேகக் கூட்டம் நமக்குக் கீழே போய் விடுகிறது.

நீல சூன்யத்தில் சில நிமிடங்கள் கரைந்த பின்… அதோ மேகக் கூட்டத்துக்கு மேலே… மேலே… நிமிர்ந்து வான் தொடும் உயரத்தில், பனி வழியும் இமாலய மலைத் தொடர்கள்..

பிரமித்துப் போகிறோம்! அந்த பிரமிப்பு இன்று வரை மனதிலிருந்து மறையவில்லை.

தலையைச்  சுற்றி மாட்டிய சிறு ஸ்பீக்கரில்  நாம் கடக்கும் ஒவ்வொரு சிகரம் பற்றிய குறிப்பு, ஆங்கிலத்தில்  (தேவைப்பட்டோருக்கு ஹிந்தி, ஸ்பானிஷ் மொழிகளில்) சொல்லப்படுகிறது.

மெலங்க்ஸ்டே, நும்புர், நப்ட்சே  இப்படி சில சிகரங்களைக் கடந்த பின்,  நாம் கண் படைத்த பயனாக, காணத் துடிக்கும், எவரெஸ்ட். பனி மூடிய உலக உச்சி.

முப்பதாயிரம் அடிக்கும் மேலே, மேகங்களைக் கிழித்து மேலெழுந்த எவரெஸ்ட்.. என்றோ ஆசியாவின் இரு நிலப்பரப்புக்கள் மோதிக் கொண்டதின் விளைவாக உயர்ந்த எவரெஸ்ட்.

மௌனமே அங்கே அரசாட்சி. சுற்றிலும் சூன்ய வெளி. பனிவழிவுகளுக்கு நடுவே தென்படும் பழுப்புப் பாறைகள். சற்றே பள்ளம் கிடைத்த இடத்தில் பச்சை மரகத நீர்ப்பரப்புக்கள்.  நான் என்ற அகங்காரம் எல்லாம் மறைந்து எங்கோ இறையோடு ஒன்றிய உணர்வு..

மேலிருந்து  எவரெஸ்டின் உச்சியைக் கீழே பார்ப்பேன் என்று நினக்கவே இல்லையே நான்.. கையால் தொட மாட்டோமா, இறங்க மாட்டோமா என்ற தவிப்பு. அந்த இளம் காலையில், பனி வெண்மையும் பழுப்பு பாறைகளும் தந்த லைட் அண்ட் ஷேட் காட்சி. விமானம் நகர்ந்து… அதோ சிவன் பார்வதி உறையும் கௌரிசங்கர் சிகரம். கைகள் கூப்ப, கண்களில் ஆனந்த நீரோட்டம்.

(இறங்கி மண்ணில் காலடி வைத்தபோது எவரெஸ்ட் பார்த்ததன் நினைவாக ஒரு பெரிய சான்றிதழ், பின்னணியில் ஹிமாலயாஸ் படத்துடன் தருகிறார்கள்).

6. ஜப்பானில் ஹிரோஷிமா மியூசியம்

70 ஆண்டுகளுக்கு முன் 1945 ஆகஸ்ட் மாதம் 6ம் நாள் காலை, இரண்டாம் உலகப் போரின் முடிவில், அமெரிக்கரின் நியூக்லியர் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளாகி, உடனேயே 80,000 பேரும், தொடர்ந்து சில நாட்களில் லட்சக் கணக்கானோரும், பின் வந்த 50 ஆண்டுகள் வரை காற்றில் கதிர்வீச்சும், தலைமுறை தலைமுறையாக தொடர்ந்த அதன் பாதிப்பும் கொண்ட நகரம். அப்புறம் பிறந்த குழந்தைகள் எல்லாம் அணு ஆயுதத்தின் கதிர்வீச்சால் பயங்கர தோற்றத்தோடு பிறவிக் குறைபாடுகளோடு பிறந்து அதிக நாள் உயிர் வாழவில்லை.

காற்றில் கதிர் வீச்சின் துகள் இன்றும் இருக்கிறதா என்று அவ்வப்போது சோதனைகள் நடந்தாலும், உலகின் தலைசிறந்த முன்னணி தொழில் நுட்ப வளர்ச்சி கொண்ட நகரங்களில் ஒன்றாக பெருமிதத்துடன் எழுந்து நிற்கும் நகரம்.

அந்த அருங்காட்சியகத்தில்  அழகான புராதன கலைப் பொருட்கள் இல்லை.

போரின் துயரங்களைக் காட்டும் சிதைவுகள், புகைப் படங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. தினம் நூற்றுக்கணக்கான குழந்தைகளை பள்ளிக் கூடங்களிலிருந்து அழைத்து வருகிறார்கள். போரின் விளைவுகளை குறிப்பெடுக்க வைக்கிறர்கள். அந்த பிஞ்சு மனங்களில் எதிர் காலத்தில் போரே வேண்டாம், அணு ஆயுதங்கள் வேண்டாம் என்று விதைக்கப்படுகிறது.

அணு வீச்சில் சிறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து குழந்தைகளை பயமுறுத்தவோ அருவருப்பு ஊட்டவோ செய்யவில்லை ஜப்பானியர்கள்.

பைகள், தண்ணீர் பாட்டில்கள், டிபன் டப்பாக்கள் போன்ற கருகிப் போன உடைமைகளை வைத்து, இவற்றோடு அவர்களது ஃபோட்டோக்களும் வைக்கப்பட்டுள்ளன.

தவிர கட்டிட சிதைவுகள், குண்டு விழுந்தவுடன் வீடு இடிந்து அலைமோதும் மக்கள், சிதைந்த பெரிய மருத்துவமனைகள், அலுவலகங்கள், இவற்றின் புகைப்படங்கள், சில நிஜ இடிபாடுகள், இவற்றோடு, கதிர்வீச்சுக்கு ஆளாகி உடல் சிதைந்தவர்களின் புகைப் படங்கள் மிகக் குறைந்த அளவில் இருக்கின்றன.

சிறுவர்கள் பிரமிப்புடன் பார்க்கிறார்கள். ஒரு மௌனமான சோகம் எங்கும் கவிகிறது.  போரே வேண்டாம், அணு ஆயுதங்கள் வேண்டாம் என்று உறுதி மொழி எடுக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு போரில்லா உலகம் மட்டுமல்ல, குழந்தை எழுந்து நிற்க ஆரம்பிக்கும் போதே ஒழுக்கமும் பணிவும், சுத்தமும், சுய மரியாதையும்  சொல்லித்தரப் படுகிறது.

இன்று ஜப்பான் அமைதியாக தொழில் நுட்பத்தில் உயர்ந்து  நிற்பதன் அடிப்படைக் காரணங்களில் ஒன்று குழந்தைப் பருவத்திலேயே சொல்லித்தரப்படும் டிசிப்ளின் தான். இன்னும் பல நாட்டு அனுபவங்களுமே சுவாரசியமானவை, படிப்பினை தருபவைதாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com