பெண்ணைப் பெற்றவர்களுக்கு ஒரு விண்ணப்பம்...

திருமணம் என்பது ...
திருமணம் என்பது ...Image credit - tamil.latestly.com

-சுடர்லெட்சுமி மாரியப்பன்

பெண் வயதிற்கு வந்துவிட்டாலே போதும்... அவள் கல்யாணத்திற்குத் தயாராக தொடங்கிவிட்டாள் என்ற எண்ணம் அனைத்து பெற்றோர் மனதிலும் வேகமாக எழுந்துவிடுகிறது. பொதுவாகவே பெண் பிள்ளை பிறந்தால் அவளை வளர்த்து, நல்ல முறையில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதுதான் அனைத்து பெற்றோர்களின் தலையாயக் கடமையாக எண்ணப்படுகிறது. ஏனெனில், பெண் என்றாலே பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்குச் செல்லவேண்டும். அனைத்து வீட்டு வேலைகளையும் செய்யவேண்டும் என்ற விதிமுறைகளை இந்தச் சமூகம் ஏற்கனவே உருவாக்கி, திணித்து வைத்திருக்கிறதல்லவா. அதுமட்டுமா இதில் பெண்ணின் ஆடை முதல் அங்கம் வரை குறைக் கூறும் பழிகள் வேறு ஏராளம்.

பெண்களை மதிக்கவேண்டும், பெண்கள் ஆணிற்குச் சமமானவர்கள் என்று பலவித சட்டங்கள் எழுந்தாலும் மகளிர் தினம் அன்று மட்டும் அதை நினைவுகூர்ந்து பேசுகின்றனர். கலாசாரம் மற்றும் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்துகொண்டே போனாலும் பெண்கள் இன்றும் கட்டாயப்படுத்தப் படுகின்றனர் என்பது உண்மையே.

alone girl...
alone girl...

தற்போது அனைத்துத் துறைகளிலும் பெண்கள், என பல கட்டுரைகள், செய்திகள் எழுந்தாலும் அந்த ‘அனைத்து’ என்ற வார்த்தை துறைகளுக்கு மட்டும்தான் உள்ளதே தவிர பெண்களுக்கு என்றில்லை. புரியும்படி கூற வேண்டும் என்றால், அனைத்துப் பெண்களும் இங்கு சுதந்திரமாகத் தனக்குப் பிடித்தவற்றைச் செய்ய முடியவில்லை. அவ்வாறு சாதித்தப் பெண்களும் அவர்கள் வாழ்வில் பல தியாகங்கள், எதிர்ப்புகளைக் கடந்து ஒரு போராட்டத்தை நிகழ்த்திதான் சாதித்துள்ளனர்.

பெண்களைப் புரிந்துக்கொண்டு சுதந்திரமாக பிடித்தவற்றைச் செய்ய  ஆதரவளிக்கும் ஆண்கள் மற்றும் பெற்றோர்கள் இங்கு குறைவே... பல பெண்கள் தங்களுடைய எதிர்ப்புகள் மூலமாகத்தான் சுதந்திரத்தைப் பெறுகின்றனர். முன் உள்ள காலத்தில் பெண்கள் தனது பள்ளி படிப்பைப் பெறுவதே மிகச் சிரமமாக இருந்தது. தற்போது பள்ளி படிப்பு அனைவருக்கும் கட்டாயம் என்றாலும், தனக்கான கல்லூரி படிப்பைப் பெறுவதும் தனக்குப் பிடித்த பணியில் அமர்வதும் பெண்களுக்குச் சிரமமாகத்தான் இருக்கின்றது. 

சில பெண்களின் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகள் படித்து முன்னேறுவதைப் பெருமையாக எண்ணி அவர்களுக்குத் துணையாக இருப்பதை நாம் பார்ப்பதுண்டு. ஆனால், இதற்கு மாற்றாக பல பெற்றோர்கள் பெண் பருவமடைந்ததிலிருந்து அவளை ஒரு சுமையாக பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர். அதாவது பெண்ணுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்று பள்ளி படிப்பை முடித்து திருமண வாழ்க்கையில் தள்ளி விடுகின்றனர். இன்னும் சிலர் பெயருக்கு ஒரு பட்டம் என வாங்க வைத்து படித்ததற்கான பணியைக் கண்ணால்கூட பார்க்கவிடாமல் மணவாழ்க்கையில் மூழ்கடிகின்றனர். இவ்வாறு நடக்கும் திருமண வாழ்க்கையில்தான் பலவிதப் பிரச்னைகளையும் எதிர்கொள்கின்றனர். பெற்றோர்கள் வெற்றி என நினைத்து தங்கள் குழந்தைகளுக்குச் செய்யும் இதுபோன்ற கட்டாயத் திருமணங்கள், உண்மையில், அவர்களுக்குத் தோல்வியே.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கான சுருக்கம் இல்லாத 8 கோடைக்கால பயண ஆடைகள்!
திருமணம் என்பது ...

திருமணம் என்பது வாழ்க்கையின் மிகப் பெரிய அத்தியாயம்! அதில் ஈடுபட இரண்டு மனங்கள் ஒத்துப்போக வேண்டும். முக்கியமாக பெற்றோர்களும் சற்று சிந்திக்கவேண்டும். தங்கள் குழந்தை நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் தங்கள் குழந்தை மனதளவில் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறாளா என்று பார்க்கவேண்டும். ஆண்கள் மட்டும் வாழ்க்கையில் சிறந்த முறையில் முன்னேறி இருந்தால் போதாது, பெண்களும் தங்களுக்குப் பிடித்த பணியில் சாதித்து அவர்கள் மனதளவில் தயாராகும்போது திருமணம் செய்துவைப்பதே பெற்றோர்களின் வெற்றியாக இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

திருமணத்திற்கு மணவயது மட்டும் போதாது;
மனவயதும் முக்கியம்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com