உலக தேங்காய் தினமான இன்று தேங்காயைப்பற்றி நினைக்கும்போது, எங்கள் வீட்டில் நடந்த ஒருசுப நிகழ்வு தான் நினைவுக்கு வருது. எங்க மக திருமணத்தின்போது சாப்பாட்டுக்கு கேட்டரிங் புக் பண்ணும் பொழுது அவர்களிடமே தாம்பூலப்பையையும் போட்டு தரச்சொல்லிவிடுவோம் என தீர்மானித்தோம். ஆனால் எனது மாமனாருக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை .
நம் வீட்டுத் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் நம் கையாலேயே மட்டைத் தேங்காய் போட்டு தாம்பூலம் கொடுப்பது தான் காலம் காலமாக நாம் பின்பற்றி வரும் நம்ம வீட்டுப்பழக்கம். பண்பாடு என்றெல்லாம் சொல்ல மாமா பேச்சை மீற முடியவில்லை. ஆனாலும் மொத்தமாய் தேங்காய் எப்படி வாங்குவது? எங்கே வாங்குவது? என்று யோசனையாய் இருந்தது. வடபழனி முருகன் கோயிலுக்கு எதிரில் சைதாப்பேட்டை ரோடு என்று ஒன்று உள்ளதாகவும் அங்குதான் மொத்தமாக திருமணத்திற்கு மட்டைத் தேங்காய் கிடைக்கும் என்றும் கேள்விப்பட்டோம். நானும் எனது கணவரும் சென்றோம். அங்கு வரிசையாக பல கடைகள் இருக்க 'டக்'கென்று ஒரு கடைக்குள் நுழைய கடையின் உரிமையாளர்வரவேற்ற விதம் மிகவும் பிடித்திருந்தது (அவர் பெயர் செல்வம் சுந்தரம்)
'மட்டை தேங்காயை தாம்பூலத்தில் கொடுப்பதால் பூரண பலன் ஏற்படும். தேக ஆரோக்கியம் நிலைக்கும். உங்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும்...'
'மனிதனுக்காக பிரத்தியேகமாக படைக்கப்பட்ட இயற்கை அமிர்தம் தேங்காய்...'
'பசிக்கு உணவும், தாகத்திற்கு தண்ணீரும் கொண்டுள்ள ஒரே உணவுப் பொருள் தேங்காய்" தான் என்று மட்டை தேங்காய்க்கு வாழ்த்துரை வாசிக்க...அவரிடமே முகூர்த்தத்திற்கு 'முகூர்த்த தேங்காய் 'கேட்க அவர் உள்ளே சென்று முகூர்த்த தேங்காயை அவர் கையாலேயே எடுத்து வந்து கடையில் உள்ள சுவாமியின் முன்வைத்து அதை ஒரு அழகான பையில் இட்டு வெற்றிலை பாக்கு, பூ ,பழம் மஞ்சள் குங்குமம், வளையல் இப்படி எல்லாம் வைத்து என்னிடம் கொடுத்தார். விசாரித்ததில் அவர் கடையில் முகூர்த்த தேங்காய் வாங்குபவர்களுக்கு அப்படி கொடுப்பதுதான் வழக்கம் என்றார். நன்றி கூறி வாங்கி வந்தோம். மாமாவின் விருப்பப்படி தாம்பூலப் பையில் மட்டைத் தேங்காய் போட்டு தாம்பூலப் பை தயாரானதில் மாமாவிற்கு மகிழ்ச்சி. திருமணம் நன்முறையில் நடந்தேறியது. திருமணத்திற்கு வந்து சென்றவர்கள் எல்லாம் தேங்காய் மிகவும் நன்றாக இருந்தது என்று கூற மனதிற்குள் சந்தோஷமாக இருந்தது. திருமணம் முடிந்த பிறகு.கொஞ்சம் தேங்காய் மீதமிருந்தது. அதையெல்லாம் உரித்து தேங்காய் பருப்புகளை எடுத்து... (கருப்புத் தோல் சீவி) வெள்ளையாக இருக்கும் தேங்காய் பருப்புகளை துண்டுகளாக்கி நன்கு அலசி துடைத்து மிக்ஸியில் போட்டு நைஸாகவும் இல்லாமல், கொறகொறவென்று மில்லாமல் அரைத்து வாணலியில் வதக்கி (அடுப்பை மிதமான தீயில் எரியவிட்டு) (கை விடாமல் கிளறி) அதில் தேங்காய் பொடி தயார்செய்தேன். இந்தப் பொடியை அழகாக பேக் செய்து எனது உறவுகளுக்கும் நட்புகளுக்கும் கொடுத்தேன். (அதில் அவர்கள் விதவிதமாய் இனிப்பு செய்து அசத்தியது தனி கதை)
நான் தேங்காய் பர்பி செய்து மீண்டும் அந்த கடைக்குச் சென்று அவரிடம் கொடுத்து கூடவே அவருக்கும் ஒரு தாம்பூலம் கொடுக்க, அவர் இப்படி யாருமே எனக்கு திரும்ப வந்து 'நன்றி 'சொன்னதில்லை அம்மா என்று கூறி நெகிழ்ந்தார்.
தாம்பூலம் என்று சுலபமாக கூறி விடுகிறோம். ஆனால் அந்த தாம்பூலத்தில் மட்டை தேங்காய் போடுவதால் எவ்வளவு ஒரு சந்தோஷம் என்பதை நான் மனதார உணர்ந்த தருணமிது.
நீங்களும் உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு மட்டை தேங்காயை வாங்கி மகிழ்வுடன் தாம்பூலம் கொடுங்கள். மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.