பரிசுக்கதை –6
ஓவியம்: சேகர்
நடுவர் பார்வையில்...
நல்ல நடை. பாத்திரத்தின் பதபதைப்பை படிப்பவர்களுக்கு கடத்துகிறது. ஒரு சின்ன கிராமத்தில் கூட தாக்கத்தை ஏற்படுத்தும் வேலை நிறுத்தம் வாசகனுக்கு சமூகத்தின் மீது கோபத்தப் எழுப்புகிறது.
“காலைல 10 மணிக்கு சேலம் காலேஜ்ல பரீட்சைன்னு சொன்னே. நீ எப்படி போக போற?” அவனுடைய அம்மா கேட்டதற்கு, கோபியால் பதில் சொல்ல முடியவில்லை.
“இங்க தர்மபுரி காலஜ்லேயே இதே மேத்ஸ் படிச்சிருக்கலாம். என்னமோ சேலத்துலதான் படிப்பேன்னு பிடிவாதம்” அவன் தந்தை பொறுக்க முடியாமல் சொன்னது அவனுக்குக் கோபத்தை உண்டாக்கியது
“மூணு வருஷமும் முடியப்போகுது. இதுதான் கடைசி பரீட்சை. இப்போ போய் இதை...” கோபி முணுமுணுத்தது அங்கு அனைவருது காதிலும் விழுந்தது.
“சரிப்பா இப்ப என்ன செய்யறது? திடீர்னு ஸ்ட்ரைக்ன்னு சொல்லிட்டு ஒரு பஸ்ஸும் ஓடலை. இப்பவே மணி ஏழாகப் போகுது. நீ என்ன பண்ண போறே? நான் என்ன உதவி எப்படி செய்யனும்?” அண்ணன் குறுக்கிட்டார்.
“அம்மா அவன் சாப்பிடுறதுக்கு ஏதாவது உடனே கட்டிக்கொடுக்கும்மா...”
அம்மாவிடம் சொல்லி விட்டு கோபியிடம்
“உடனே கிளம்புப்பா... டூவீலர்ல நல்லம்பள்ளியில கொண்டு போய் விட்ரதற்கு பார்க்கிறேன்” கோபியுடன் அவர் வண்டியில் போகும்போது
“சேலம் வரைக்கும் டூவீலர்ல போறது கஷ்டம். பெங்களூர் பைபாஸ் போய் பெங்களூர்லேர்ந்து ஏதாவது லாரி, வேன் ஏறி வருதான்னு பாக்கலாம்.”
“சரிண்ணே.”
அவர்கள் கூட்டு ரோட்டில் நின்றுகொண்டிருந்தனர். தர்மபுரியில் இருந்து எந்த வண்டியும் வருவதற்கான அறிகுறியே இல்லை.
“பணம் கையில வைத்திருக்கியா? வண்டியில போறதுக்கு... அப்புறம் சாப்பிடறதுக்குனு சில்லறையா வெச்சிருக்கியா?”
“சில்லறை 100 ரூபாக்கு வச்சிருக்கேன்ணே.”
“போதுமாப்பா…”
“போதுண்ணே... சாதரணாமா பஸ்ஸில போறதுன்னா ஆறுரூபாதான் ஆகும்” அங்க ஏதோ வேன் வர்றமாதிரி இருக்கு. கைய காமிச்சி நிறுத்து...”
விசாரித்ததில் வேன் நாமக்கல்லிருந்து முட்டை ஏற்றிக்கொண்டு பாலக்கோடில் இறக்கி விட்டு திரும்பிக்கொண்டிருந்தது.
“ஐயா திடீர்னு பஸ் ஸ்ட்ரைக் வந்துருச்சு. பஸ், லாரி எதுவுமே ஓடலை. நான் சேலம் காலேஜுக்கு எக்ஸாமுக்குப் போகணும். கொஞ்சம் தயவு பண்ணி என்னை உங்க வண்டில ஏத்திக்கிட்டு சேலத்துல விட்டுடறீங்களா?”
“நாங்களே யோசித்து யோசித்துதான் வண்டிய ஓட்டிட்டு வர்றோம். சரி ஏறிக்கோங்க தம்பி. இறங்கறப்போ பத்து ரூபா கொடுத்துடு.”
“ரொம்ப நன்றிங்க” வண்டியில் ஏறிக்கொண்டான்.
“கோபி ஜாக்கிரதையா போய்ட்டு வா” ஏங்க தம்பியைக் கொஞ்சம் சேலத்துல இறக்கி விட்டுடுங்க. முக்கியமான பரீட்சை திடீர்ன்னு பஸ் ஸ்ட்ரைக் வேறே...”
“நீங்க கவலைப்படாம வீட்டுக்குப் போங்க. நான் ஜாக்கிரதையா சேலத்தில் இறக்கி விட்டுடறேன். நாங்க போற வழிதானே.”
“எத்தனை மணிக்குண்ணே சேலம் போகும்?”
“இன்னும் ஒரு மணி நேரத்துல சேலம் ஐந்து ரோட்ல இருப்போம்பா.”
“சரிங்க” சொல்லிவிட்டு, கோபி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ‘ஒரு தடவை ரிவைஸ் பண்ணிக்கலாம்’ தனக்கு சொல்லிகொண்டவன், தன்னுடன் கையில் கொண்டு வந்திருந்த நோட்புக்கை புரட்டி படிக்க ஆரம்பித்தான்.
வண்டி ஓமலூரை தாண்டியபோது கூட இருந்த க்ளீனர் பையன், “அண்ணே அண்ணே வண்டியை நிறுத்துங்கண்ணே... பேக்வீல் லெஃப்ட்ல இழுக்குது. டயர் பஞ்சராட்டமிருக்கு.”
கத்தியதில் தலைநிமிர்ந்து பார்த்த கோபி வண்டி தடுமாறிக்கொண்டே நின்றதில் சேலம் இன்ஜினியரிங் கல்லூரி காம்பவுண்ட் தெரிந்தது.
“இது என்னடா கிரகச்சாரம்” முணுமுணுத்த டிரைவர்,
“டேய் டூல்ஸை சீக்கிரம் எடுடா கிடுகிடுன்னு மாட்டனும். தம்பி வேற எக்ஸாமுக்கு போகனும்...”
நேரம் எட்டேமுக்காலை நெருங்கிக்கொண்டிருந்தது. கோபியின் முகத்தில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது. வண்டியிலிருந்து நகத்தை கடித்தபடியே கீழே இறங்கினான்.
“அண்ணே ஸ்டெப்னிலேயிம் காத்து கொஞ்சம் கம்மியா இருக்கிற மாதிரி…”
“ஐயோ” கோபிதான் கூவினான்.
“ஏண்டா பாலக்கோட்ல எவ்வளவு நேரம் இருந்தது. அப்ப பார்க்க மாட்டாயா? கையை ஓங்கிபடியே டிரைவர் போகவே கிளினர் பையன்,
“அண்ணே அண்ணே காத்து போதும்ணே, சரியாத்தான் இருக்கும். அப்படியே அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிடலாம்ணே.”
டிரைவரும் அமுக்கி பார்த்துவிட்டு, “சரி... சரி சீக்கிரமா மாட்டு.”
கோபியோ செய்வதறியாது திகைத்து நின்றான். வேற ஏதாவது வண்டி வருகிறதா என்று எட்டிப் பார்த்ததில் எந்த வண்டியும் கண்ணுக்குப் படவில்லை. ஒரு மினி லாரி சேலத்தில் இருந்து பெங்களூர் நோக்கி போய்க்கொண்டிருந்தது. காலை மாற்றி மாற்றி நின்றுகொண்டிருந்த கண்களை மூடியவன் கடவுளை நினைத்துக்கொண்ட மாதிரிதான் இருந்தது.
எட்டாவது நிமிடத்தில, “தம்பி ஏறுங்க உடனே கிளம்பிடனும். பரவாயில்லை சீக்கிரமா மாட்டிட்டோம். சாதாரணமாக 15 நிமிஷம் ஆகும். இப்ப பத்து நிமிஷம் கூட ஆகலை.”
ஐயோ பத்து நிமிஷம் கூட லேட்டாயிடுச்சு. பத்து மணிக்குள்ள காலேஜ்ல இருக்கனுமே. கோபியின் மனதில் இந்த எண்ணம்தான் ஓடிக்கொண்டிருந்தது
சேலம் டவுனை நெருங்கிக் கொண்டிருந்தபோது, “தம்பி நாங்க இப்படியே பைபாஸ்ல நாமக்கல் போயிடுவோம். நீங்க இங்கிருந்து இறங்கி நடந்து போயிக்கங்க...”
“சார், நீங்க அஞ்சு ரோட்டில் இறக்கி விட்றேன்னு...”
“ஆமாம்பா இங்கிருந்து அஞ்சு ரோடு முக்கால் கிலோ மீட்டர்தான் இருக்கும். ஏதோ பரீட்சைக்குப் போறேன்னு ஏத்திட்டு வந்தா...”
“ரொம்ப நன்றிங்க” பணத்தைக் கொடுத்துவிட்டு கோபி இறங்கி ஐந்து ரோட்டை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்து, பின் ஓட ஆரம்பித்தான். ஓட்டமும் நடையுமாக அவன் ஐந்து ரோடை அடைந்தபோது மணி ஒன்பதரையை நெருங்கிக்கொண்டிருந்தது.
ஒருபுறம் நம்பிக்கை, பத்து மணிக்கு எக்ஸாம் ஆரம்பிச்சாலும் அரைமணி நேரம் க்ரேஸ் டைம் இருக்கு. எப்படியும் அதுக்குள்ள போயிடலாம். மறுபுறம் ஐயோ பத்தேகால், பத்து இருபதுகுள்ள போய்ட முடியுமா! என்ற அவநம்பிக்கை. இந்த இரண்டுக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருந்தான் கோபி.
அப்போது ஜங்ஷனிலிருந்து ஒருவர் பைக்கில் ஆர்மி யூனிஃபார்மில் வருவதைப் பார்த்ததும், அவரை நிறுத்தி லிப்ட் கேட்பதா? வேண்டாமா? என்ற போராட்டம். அதைத் தவிர வேற எந்த வண்டியும் கண்ணுக்குத் தென்படாததால் அவன் ரோடில் ஓடியபடியே வண்டியை நிறுத்துமாறு சைகை செய்து, “சார், சார்” என்று சற்று உரக்கக் கூப்பிட்டான். இருப்பினும் அவனுக்குச் சற்று தயக்கம்தான்.
மிலிட்டரி யூனிஃபார்மில் இருந்த அவர் வண்டியை நிறுத்தி, “என்னப்பா? என்ன விஷயம்?”
“சார் எனக்கு யூனிவர்சிடி எக்ஸாம். லாஸ்ட் பரீட்சை. திடீர்னு பஸ் ஸ்ட்ரைக் காலேஜுக்குப் போகணும். தர்மபுரியிலிருந்து…” திக்கித் தடுமாறி பதில் சொன்னான்.
“எந்த காலேஜ்?”
“சேலம் செவன் காலேஜ் சார்.”
“நான் ஏற்காடு அடிவாரம் ஃபயரிங் ரேஞ்சுக்குப் போறேன். அஸ்தம்பட்டியில் இறக்கிவிடட்டுமா”
“சரிங்க சார்... வண்டியில் ஏறி உட்கார்ந்து மூச்சு சீராக கோபிக்கு சிறிது நேரம் ஆயிற்று. அஸ்தம்பட்டிலேர்ந்து காலேஜ் போறதுன்னா ரொம்ப தூரம் ஆச்சே! பேசாம நடுவுலேயே இறங்கி குறுக்கு வழிலே போய்ட வேண்டியதுதான்! அவன் நினைப்பதற்குள் சாரதா காலேஜ் தாண்டி விடவே,
“சார் நான் இங்கேயே இறங்கிக்கிறேன். இந்த ஷார்ட்கட்ல போனா நான் சீக்கிரம் காலேஜுக்குப் போய்டுவேன்.”
“அப்படியா... சரி இறங்கிக்கப்பா.”
“சார் ரொம்ப தேங்க்ஸ்!”
“ஆல் த பெஸ்ட். எக்ஸாம் நல்லா எழுது” சொல்லிவிட்டு, அவன் ரோடை தாண்டி எதிர்பக்கம் போவதற்குள் அவர் பைக்கை ஓட்டிச் சென்றுவிட்டார்.
அப்போதுதான் அவனுக்குத் தோன்றியது ‘அய்யய்யோ இந்த ரோட்டுல லிஃப்டே கிடைக்காதே! சாதாரண நாள்லேயே ஆள் இருக்க மாட்டாங்களே, ஒழுங்கா பேசாம அஸ்தம்பட்டி வரைக்கும் போய் அங்கே இறங்கிண்டா அங்கே ஏதாவது டூவீலர் டவுன் பக்கம் போயிட்டு இருக்குமே ஈஸியா லிஃப்ட் கிடைக்குமே...’ தனது தலையில் ஓங்கி அடித்துக்கொண்ட கோபி மறுபடியும் அஸ்தம்பட்டி வரை யாரையாவது லிப்ட் கேட்டு போகலாமா? என்று யோசித்து திரும்ப முயற்சிக்கும்போது ஒரு ஸ்கூல் பையன் அந்தத் தெருவில் இருந்த ஒரு வீட்டில் இருந்து வருவதைப் பார்த்து “தம்பி தம்பி” கைதட்டி கூப்பிட்டுக்கொண்டே ஓடினான்.
சைக்கிளை நெருங்கி, “தம்பி எனக்கு எக்ஸாமுக்கு காலேஜுக்கு சீக்கிரமா போகணும் உன் சைக்கிள்ல...”
“என்னால டபுள்ஸ் மிதிக்க முடியாதே அண்ணே...”
“சரி, நீ உட்காரு. நான் மிதிக்கிறேன். என்னை காலேஜ் விட்டுட்டு நீ திரும்பி வந்துடுப்பா ப்ளீஸ்… பஸ் ஸ்ட்ரைக் வேற ஒரு பஸ் ரோட்ல ஓடலை.”
“சரிண்ணே.”
“இந்தப் பைய கொஞ்சம் வெச்சுக்கோப்பா.”
தன் கையில் இருந்த பையை அந்தப் பையனிடம் கொடுத்துவிட்டு சைக்கிளை வேகமாக ஓட்ட ஆரம்பித்தான். சைக்கிள் ஓட்டி ரொம்ப வருஷம் ஆகிவிட்டதால் ஓட்டுவது கஷ்டமாகத்தான் இருந்தது. மணி பத்தேகால் ஆகியிருந்தது. காலேஜ் கேட்டை நெருங்கியபோது மணி பத்து இருபதை தொட்டுக் கொண்டிருந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் தம்பி.”
வேகவேகமாக சைக்கிளில் இருந்து இறங்கி, தனது ஹாலை நோக்கி ஓடி அதை அடைந்தபோது மணி பத்து இருபத்தைந்து நெருங்கிக்கொண்டிருந்தது. ஹாலில் பலர் உட்கார்ந்து தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர்.
“சார்” அவன் பவ்யமாகவும் சற்று உரக்கவும் கூப்பிட்டதில் அந்த ஹால் சூப்பர்வைசர் வந்து,
“என்னப்பா? என்ன விஷயம்?”
“நான் இந்த ஹால்ல எக்ஸாம் எழுதனும். தேர்ட் இயர் மேத்ஸ் ஸ்டூடண்ட்.”
“டைம் ஆயிடுத்தேப்பா.”
“இல்ல சார்... இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கே…” நல்லவேளையாக ஹாலிலுள்ள கடிகாரமும் 10:25ஐ காண்பித்துக்கொண்டிருந்தது.
“இல்லேப்பா. என் டைம் பத்தேகாலோட முடிஞ்சது. என்னால முடியாது சீஃப் சூப்பர்வைசர்தான் முடிவு பண்ணனும் நீ போய்…”
“சார் அரைமணி நேரம் க்ரேஸ் டைம் இருக்கே, சார் ப்ளீஸ். கோபியின் கண்களில் கண்ணீர் தளும்பி நின்றதை அவனாலேயே உணரமுடிந்தது.
“இல்லேப்பா, என்னால… அடேடே அங்க சீஃப் வந்திட்டிருக்காரு பாரு. நீ போய் உடனே...”
கோபி ஒலிம்பிக் வேகத்தில் ஓடி, “சார், அஞ்சு நிமிஷம் முன்னாலேயே, பஸ் ஸ்ட்ரைக்… தர்மபுரிலேர்ந்து… மூச்சு வாங்கியதால்” தொடர்ந்து அவனால் பேச முடியவில்லை.
ஆனால் அவர் புரிந்துகொண்டார்.
“வா உன்னோட ஹாலுக்குப் போகலாம்.” அவருடன் ஓடினான் கோபி.
நல்லவேளையாக ஹால் கடிகாரம் 10:27ஐ காண்பித்துக் கொண்டிருந்தது
“சார் அஞ்சு நிமிஷம் முன்னாலேயே. கோபியின் வாயில் இருந்து கீறல் விழுந்த டேப்ரிகார்டர் மாதிரி இதுதான் வந்துகொண்டிருந்தது.
“சார் இந்த ஹால்லேர்ந்து யாரும் வெளியே போகலையே.” சீஃப் விசாரித்தார்.
“இல்ல சார்... இன்னும் டைம் ஆகலையே...”
“அலவ் திஸ் ஸ்டூடண்ட்” சொல்லிவிட்டு சீஃப் சூப்பர்வைசர் சென்றுவிட்டார்.
ஹால் சூப்பர்வைசரிடமிருந்து கொஸ்டின் பேப்பர், ஆன்சர் ஷீட் வாங்கிக்கொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கோபி உட்கார்ந்து, பேனாவை வேகமாகத் திறக்க, அரக்க பரக்க, முட்டை வண்டி, பைக், சைக்கிள், ஓட்டம் என்று மாறி மாறி வேர்க்க விறுவிறுக்க வந்ததில் அந்தப் பேனாவின் மூடியில் கசிந்து தேங்கியிருந்த இங்க் அப்படியே பேப்பரில்...
‘ஐய்யோ’ கோபி அலறினான்.
“அஞ்சு நிமிஷம் முன்னாலேயே” கோபி அலறிக்கொண்டே படுக்கையிலிருந்து குதித்து எழுந்தார். நல்லவேளையாக கட்டிலிருந்து கீழே விழவில்லை.
அருகில் படுத்துக்கொண்டிருந்த அவரது மனைவி,
“என்ன இன்னைக்கும் எக்ஸாம் கனவா? கடவுளே! எக்ஸாம் முடிச்சி, நல்ல வேலைல சேர்ந்து, ஜிஎம் வரைக்கும் ப்ரொமோஷன் கிடைத்து ரிடையருமாயாச்சு. இப்போ பேரனே எக்ஸாம் எழுதற அளவுக்கு வளர்ந்துட்டான். எக்ஸாம் எழுதி முடிச்சு நாப்பது வருஷத்துக்கு மேல் ஆச்சு. இன்னும் எக்ஸாம் ஃபீவர்ல “அஞ்சு நிமிஷம் முன்னாலேயே”ன்னு சொல்லிக்கிட்டு... மனைவி அலுத்துக்கொண்டே,
“இந்தாங்க, தண்ணிய குடிச்சிட்டு தூங்குங்க, உங்க கனவுல வர்ர பரீட்சைக்குத்தான் நேரமாச்சு. ஆறு மணிக்கு எழுந்தாலே பொழுத நெம்பி பிடிச்சி தள்ள வேண்டியிருக்கு.” அவரது மனைவி முணுமுணுத்துக் கொண்டே மீண்டும் படுத்துக்கொண்டார்,
‘அஞ்சு நிமிஷம் முன்னாலயே’ கோபி ஒருமுறை புன்னகையுடன் சத்தமாகச் சொல்லி பார்த்துக் கொண்டார். அவருடைய புன்னகை அவரையே கேலி செய்வதுபோல அந்த அதிகாலை இருள்கலந்த மங்கிய ஒளியில் ஒளிர்ந்தது!