பாராட்டினால் என்ன குறைந்தா விடும்?

பாராட்டினால் என்ன குறைந்தா விடும்?

ரு காய்கறிக் கடை. லட்சுமியம்மாள் காய் வாங்க வந்திருக்கிறார்கள்.

'கத்திரிக்காய் என்ன விலைய்யா?”

"நீங்களாம்மா! மகாலட்சுமி யாட்டம் வந்திருக்கீங்க காலங்கார்த்தால. எடுத்துக்கங்கம்மா."

"விலை என்ன சொல்லு.''

"விலை என்னாம்மா பொல்லாத விலை. நீங்கதாம்மா காலையில முதல் போணி பண்ணுறீங்க. உங்க ராசியான கையால எடுத்துக்கோங்கம்மா..."

“நல்லதாப் பார்த்து அரை கிலோ போடு..." மூன்று ரூபாயைக் கொடுத்துவிட்டு மலர்ந்த முகத்தோடு வீடு திரும்புகிறார்கள். வீட்டில்...

'என்ன? கிலோ ஆறு ரூபாயா?"

"ஏன் இருக்காதா?"

"பாரீஸ் கார்னர்ல... நாலு ரூபாய்தான்..."

"கிடைக்கும் மூணு நாலு ரூபாய்க்கு. சொத்தையும் அழுகலும், அதுவும் அங்க எடையே சரியா இருக்காதாம்.”

டுத்து ஒரு வீட்டுக்குள் போவோம். ‘அப்கோர்ஸ்' அவர்கள் அனுமதியோடுதான். வேலைக்காரி காயாம்பூவிடம் வீட்டுக்கார அம்மாள் மரகதம் பேசிக்கொண்டிருக்கிறாள். சிறிது கவனிப்போம்.

"ஏம்மா...காயாம்பூ நீ கழுவின பாத்திரமா இது ஆச்சரியமாயிருக்கே?"

"ஏன்ம்மா... என்ன விஷயம்? இப்படி காட்டு..."

"இல்லை, நீ கழுவின பாத்திரம்னா அப்படியே கண்ணை மூடிக்கிட்டு பாலைக் காய்ச்சலாமே,  ஆனா இது உள்ள பாரு எப்படி 'பிசுக்... பிசுக்'குன்னு இருக்கு..."

"அதை கொண்டா இப்படி... அதான் சொல்றது... இந்த காயாம்பூ வேலை செய்யறச்ச யாரும் தொந்திரவு பண்ணாதீங்கன்னு..."

கையில் வாங்கிச் சென்று மீண்டும் நன்கு துலக்கி 'பளபளா' (உலகமெல்லாம் சுற்றுவேன். சக்திக்கு... என்று சொல்லவில்லை. நீங்க வேற.. மேல படியுங்க...) என்று துலக்கிக்கொண்டு வருகிறாள்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஒரு ஒற்றுமையை கவனித்திருக்கலாம். பிரச்னை அதிகமின்றி மனமுவந்து சிறப்பாக வேலை நடந்ததைப் பார்த்தோம்.

மாறாக, “முதல்ல கத்திரிக்காயில் இருந்து கையை எடும்மா... காலங்கார்த்தால வந்துட்டாங்க... சே!" என்று காய்கறிகாரரும் சொல்லியிருந்தாலோ,

“உனக்கு எதுக்குச் சம்பளம் குடுக்கறமுன்னே தெரியலை... எல்லாப் பாத்திரத்தையும் நாங்க ஒரு வாட்டி கழுவுறதுக்கு, இதப்பாரு ‘பிசுக் பிசுக்'ன்னு" என்று மரகதம்மாள் சொல்லியிருந்தாலோ வேலை நடந்திருக்குமா?

பாராட்டு என்பது மிகச் சிறந்த ஊட்டச்சத்து,  நீர், உணவு, காற்று போல மனிதர்களுக்குப் பாராட்டும்,  தன்னை மதிக்கிறார்கள் என்ற எண்ணமும் தேவை.

அவ்வளவு ஏன்? கடவுளையே நாம் நூற்றியெட்டு, ஆயிரத்தெட்டு 'போற்றி'  என்று சொல்லவில்லையா?

அந்தப் பாராட்டு மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது. பாராட்ட வேண்டும் என்பதற்காக சம்மந்தா சம்பந்தம் இல்லாமல் பேசக்கூடாது. ஒல்லியாய் கருப்பாய் இருக்கும் ஒரு நண்பனை, 'நீ கமல்ஹாசன் மாதிரி இருக்கேடா' என்று சொல்லி பிரச்னையை அதிகமாக்கிக் கொள்ளக்கூடாது.

யாரிடம் இப்படி எல்லாம் பேச வேண்டும் என்கிறீர்களா? உங்களுக்கா தெரியாது? சும்மா தெரியாததுபோல் கேட்கிறீர்கள் (எப்படி என் பேச்சு கவனித்தீர்களா?) என்பேன்.

எல்லோரிடமும்தான். பேப்பர் போடும் பையனிலிருந்து கோயில் குருக்கள் வரை, நம்ம வீட்டுப் பெரியவர்கள் முதல் ஆபீஸ் நண்பர் வரை எல்லோரிடமுமேதான்.

பலன். வேண்டுமே நமக்கு எதிலும். இருக்கு இதிலும். நம்மைப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார்கள். புன்னகைப்பார்கள். நம்மை விரும்புவார்கள். நம்மை ஒதுக்க மாட்டார்கள்.

நாலு பேர் பையைத் தூக்கிக்கொண்டு கடையில நிற்கும்பொழுது, 'சாருக்கு என்ன வேணுமின்னு கேட்டு முதல்ல போடு," என்று கடைக்காரர் சொல்லலாம்.

“எங்கே  உங்களை ரொம்ப நாளாக் காணோம்" என்று ஓரிரண்டு நாட்களானாலே நண்பர்கள் கேட்பார்கள். எல்லாம் எதனால்,  இன்முகத்துடன் மற்றவர்களின் நல்ல குணங்களை வெளிப்படையாகச் சொல்வதனாலேதான்.

மாறாக, நம்மில் பலர், நம்மைப் பற்றியே அதிகமாக நினைப்பதனால், மற்றவர்களிடம் உள்ள குறைகளை பெரிது படுத்தி பேசி விடுகிறோம்.

“நீங்க அப்படி செஞ்சது நல்லால்ல..."

"உங்களுக்கு ஏன் சார் 'டார்க் கலர்' சட்டை?''

"விலை கூடக் குடுத்துட்டடி.. ஏமாந்திட்ட..." தேவையா...? ஏன் மற்றவர்களை நல்லவற்றைச் சொல்லி மகிழ்விக்க சந்தர்ப்பங்கள் இருக்கையில், தவறுகளைத் தேடிச் சொல்லி.. வேண்டாமே.

ஆக, முடிந்த அளவு மற்றவர்களைப் பாராட்டுங்கள். கொஞ்சம் உண்மையாக, யோசித்து,  யதார்த்தமாக பாராட்டுங்கள். சந்தோஷமாக காரியத்தைச் சாதித்துக்கொள்ளுங்கள்.

எஸ்.எம்.வி.

பின்குறிப்பு:-

மங்கையர் மலர் மே 1998 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com