ஏப்ரல் - 1 முட்டாள் தினம்

ஏப்ரல் - 1 முட்டாள் தினம்
Published on

“ஏப்ரல் ஃபூல் என்றொரு சாதி, என்றும் ஃபூல் என்றொரு சாதி” என்பது ஒரு பழைய தமிழ் சினிமா பாடல். நம்முடைய தமிழ் சினிமா பாடலாசிரியர்கள் எல்லாவிதமான நிலைமைக்கும் ஏற்றது போல பாடல் இயற்றி இருக்கிறார்கள் என மகிழ்ச்சி அடையலாம்.

உலகமெங்கும் ஏப்ரல் மாதம் முதல் நாள் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இது ஆரம்பித்த விதம் பற்றி ஒரு கதை உண்டு. நாம் இப்போது உபயோகிக்கும் “கிரிகோரியன் காலண்டர்” என்ற நாள் காட்டி 1582ஆம் வருடம் போப் கிரிகெரி என்பவரால் அறிமுகம் செய்யப் பட்டது. இந்த நாள் காட்டியின் படி ஜனவரி முதல் தேதி புது வருடத்தின் முதல் நாளாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னால் ஏப்ரல் ஒன்றாம் தேதி புது வருட முதல் நாளாக அனுசரிக்கப்பட்டு வந்தது.

தகவல் தொழில் நுட்ப உபகரணங்கள் இல்லாத அந்த காலத்தில், இந்த மாற்றம் உலகம் முழுவதும் பரவ நிறைய நாட்கள் பிடித்தது. பரவிய சில இடங்களில் இந்த மாற்றத்தை ஒத்துக் கொள்ள மறுத்து சில நாடுகள் ஏப்ரல் ஒன்றாம் தேதியை புது வருடத்தின் முதல் நாளாகக் கொண்டாடி வந்தனர். மாற்றத்தை ஏற்காமல் ஏப்ரல் ஒன்றாம் தேதியை புது வருட முதல் நாளாகக் கொண்டாடி வந்தவர்களை, மாற்றத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஏப்ரல் முட்டாள்கள் என்று கூற ஆரம்பித்தனர். உலகில் எல்லா நாடுகளும், ஜனவரி ஒன்றாம் தேதியை வருடத்தின் முதல் நாள் என்று ஒத்துக் கொண்டப் பிறகு, ஏப்ரல் ஒன்றாம் தேதி முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. 1700ஆம் வருடம் இது உலகெங்கும் எல்லா நாடுகளுக்கும் பரவியது.

எப்ரல் ஒன்றாம் தேதி மனதைப் புண்படுத்தாத குறும்புத் தனமான சேஷ்டைகள், யதார்த்தமான நகைச்சுவை, நையாண்டி என்று ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவர். இதில் மாட்டிக் கொண்டவரை ஏப்ரல் முட்டாள்கள் என்று குறிப்பிடுவர். ஆனால் இந்த சேஷ்டைகளை மதியம் வரை மட்டுமே செய்ய வேண்டும். மதியத்திற்கு மேல் இதில் ஈடுபடுபவர்களை மற்றவர்கள் ஏப்ரல் முட்டாள் என்று அழைப்பர்.

என்னுடைய பள்ளி நாட்களில் (அறுபதுகளில்), முதுகில் பேனா மையை அடிப்பது முக்கிய விளையாட்டு. உருளைக் கிழங்கு போன்ற கறிகாய் ஒன்றை எடுத்து, அதன் ஒரு பக்கத்தை வட்டமாக வெட்டி, அதில் ஆங்கிலத்தில் ஏ.ஏஃப். என்று செதுக்குவர். இதன் மீது கறுப்பு மையைத் தடவி மற்றவர்களின் முதுகில் குத்துவர். இந்த விளையாட்டில் பெரும்பாலும் மாட்டிக் கொள்பவர்கள் அப்பாவி மாணவர்கள் (என்னைப் போல!). பிந்தைய நாட்களில் இந்த விளையாட்டு வெகுவாகக் குறைந்தது.

பத்திரிகை நிறுவனங்கள், தொலைக் காட்சி மற்றும் வானொலி நிலையங்கள், ஏப்ரல் ஒன்றாம் தேதி குறும்புகள் செய்து மக்களை ஏமாற்றி இருக்கின்றன. மாதிரிக்கு ஒரு சிலவற்றைக் கூறுகிறேன்.

1957ஆம் வருடம், ஏப்ரல் ஒன்றாம் தேதி, பிபிசி தொலைக் காட்சி, நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பு செய்தது. இத்தாலி எல்லையின் அருகிலுள்ள ஸ்விஸ் கிராமம் ஒன்றில் “ஸ்பகாட்டி” என்ற உணவுப் பொருளை மரத்திலிருந்து அறுவடை செய்து, ஒரு குடும்பம் அமர்ந்து சாப்பிடுவதாகக் காட்டியது. கோதுமை கொண்டு தயாரிக்கப்படும் இந்த உணவு பற்றி அப்போது பிரிட்டன் மக்கள் அறிந்திருக்கவில்லை. இந்த மரத்தை எங்களுடைய வீட்டுத் தோட்டத்தில் எப்படி வளர்ப்பது என்று விளக்கம் கேட்டு பிபிசிக்கு பார்வையாளர் களிடமிருந்து அழைப்புகள் வந்த வண்ணமிருந்தன.

1998ஆம் வருடம், ஏப்ரல் முதல் நாள், அமெரிக்காவில் “பர்கர் கிங்க்” என்ற உணவு தயாரிக்கும் நிறுவனம்  ஒரு அறிவிப்பை வெளியிட்டது. “பர்கர் கிங்க்” சிற்றுண்டி சாலைகளில் “இடது கை ஹாம்பர்கர்” செய்யப் படுவதாகவும், இது இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு உண்பதற்கு வசதியாக இருக்கும் என்றும் அறிவித்தது. இது முட்டாள் தினக் குறும்பு என்று உணராமல் இடது கைப் பழக்கம் உள்ளவர்களில் பலர் அருகிலுள்ள “பர்கர் கிங்க்” சிற்றுண்டி சாலைக்கு விரைந்தனர்.

2008ஆம் ஆண்டு முட்டாள்கள் தினத்தன்று, “பறக்கும் பெங்குவின்” இருப்பதாக பிபிசி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பியது. இது குறும்புத் தனமான செய்தி என்று உணராமல் “டெய்லி டெலிகிராப்”, “டெய்லி மிர்ரர்” என்ற நாளேடுகள் “முக்கியமான செய்தி” என்று இதை முதல் பக்கத்தில் வெளியிட்டன.

வாழ்க்கையை ரசிக்க எல்லை மீரா யதார்த்தமான நகைச்சுவை, சிறு சிறு குறும்புகள் தேவை. அந்த வகையில் ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினம் வரவேற்கத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com