சமீபத்தில் என் தோழியான ஒரு மனோதத்துவ மருத்துவரைச் சந்திக்க நேர்ந்தபோது, பேச்சுவாக்கில் அவள் கூறிய கருத்து என்னைச் சிந்திக்க வைத்தது.
நடுத்தர வயது பெண்மணிகள் பலர் தற்சமயம் மனநோயாளிகளாக தன்னிடம் வருவதாக என் மருத்துவ தோழி கூறுகிறாள். அதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்ததில், ரொடீன் வேலைகளையே தொடர்ந்து பார்ப்பதில் மனம் சலித்துப் போய், தனிப்பட்ட முறையில் தன்னுள் ஏற்படும் உணர்வுகளுக்கு வடிகால் கிடைக்காத நிலையில் இப்படிப்பட்ட மனக் குழப்பங்கள் ஏற்பட்டுப் பின்பு அதுவே மன நோயாக உருமாற வாய்ப்பாகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பான்மையாக மத்திய தர வர்க்கத்துப் பெண்மணிகளையே பாதிக்கிறது. ஏனென்றால் மேல்மட்ட வாசிகளுக்கு க்ளப், சங்கம், என்று பல வழிகளில் மனத்தைத் திருப்ப சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன.
வேலை பார்க்க அனுப்பப் பிடிக்காத குடும்பத்துப் பெண்களும், வேலைக்குப் போகுமளவு படிப்பு, பயிற்சி இல்லாத பெண்களும் வயதான பெரியவர்கள், கைக்குழந்தைகள், கூட்டுக் குடும்பம் போன்ற நிர்ப்பந்தங்களினால் வேலைக்குப் போக முடியாத பெண்களும் இத்தகைய சூழலில் மாட்டிக்கொண்டு அவதிப்பட நேரிடுகிறது.
அவர்கள் மன சலிப்பைத் தீர்த்துக்கொண்டு, உணர்வுகளுக்கு வடிகால் ஏற்படுத்தி, குடும்ப வாழ்வில் சந்தோஷம் காணவும், சிறிதளவு வருமானம் பெறுவதன் மூலம், தன் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதனால் ஏற்படும் மன பலத்திற்கு என் தோழியே சில வழிகளைக் கூறினாள். அதற்குக் கணவர்களும் ஒத்துழைத்தால் இது போன்ற பிரச்னைகளே ஏற்பட வழியில்லை என்கிறாள்.
1. மாதம் பிறந்து சம்பளம் வாங்கியதும் ஒரு சிறு தொகையை மனைவியின் செலவுக்கு என கணவன் தந்துவிட வேண்டும். தன்கையால் தானே செலவழிப்பதில் பெண்களுக்கு எப்போதுமே தனி உற்சாகம்தான். காலையில் டிபன், சாப்பாடு வேலை ஆனதும், குழந்தைகளும் பள்ளிக்குப் போய்விட்டால். எவ்வளவு நேரந்தான் புத்தகம் படிப்பது? ஒரு மாறுதலுக்குத் தையல் மெஷினில் போய் உட்காருங்கள். பழைய சேலைகள் ஜன்னல் கர்ட்டனாகவும், வாசல் திரையாகவும். குட்டிப் பெண்ணுக்கு நைட்டியாகவும் மாறி உபயோகப்படும் போது மனத்தில் கட்டாயம் ஏதோ ஒரு நிறைவு கிடைக்கத்தான் செய்கிறது. முறையாகத் தையல் பயின்றவர்கள் அக்கம் பக்கத்தினருக்கு துணிகள் தைத்துக் கொடுப்பதின் மூலமும், பணம் சம்பாதிக்க முடியும். அதிக நேரம் ஓய்வு கிடைப்பவர்கள், பெரிய ரெடிமேட் துணிகள் உற்பத்தி நிலையங்களிலும் அனாதை ஆசிரமங்கள், பள்ளிகள் இவற்றில் பெரிய ஆர்டர்களாகப் பிடித்து, அக்கம்பக்கத்துப் பெண்களை பட்டன் கட்டவும். ஹெம்மிங் பண்ணவும் செய்து அவர்களுக்கு ஒரு தொகையைக் கொடுப்பதன் மூலம், உங்களுக்கும் வருமானம். பொழுதும் பயனுள்ள முறையில் கழிகிறது. மற்றவர்களுக்கும் உதவினோம் என்ற திருப்தி.
2. இது போன்றே எம்பிராய்டரி தெரிந்தவர்களும் துணிகளில் வண்ணந் தீட்டத் தெரிந்தவர்களும் அனுகூலம் அடையலாம்.
3. குழந்தைகள் மீது மிகவும் ஆசையுடையவர்கள், அக்கம்பக்கத்தில் அலுவலகம் செல்லும் பெண்களின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதன் மூலம் ஓரளவு வருமானம் பெறலாம். க்ரஷ் போன்ற இடங்களில் குழந்தைகள் அதிகம் இருப்பதால் தங்கள் குழந்தைகள் சரியானபடி கவனிக்கப்படுமோ என்று தயங்கும் தாய்மார்கள் தங்களிடம் குழந்தைகளை நிம்மதியாக விடுவார்கள். ஒருவர் ஐந்து குழந்தைகளைப் பார்த்துக் கொண்டால்போதும். பேபி ஸிட்டிங் என்பது அமெரிக்காவில் ரொம்பவும் பிரசித்தி பெற்ற தொழில் நமக்கு வருவாய்க்கு வருவாய். கூடவே ஆத்ம திருப்தி.
4. கணவர் பாக்கெட்மணியாகக் கொடுக்கும் பணத்தை முதலீடாக்கி ஓயர், மணி வாங்கி பை பின்னி விற்கலாம். பொம்மை போட்டு விற்கலாம். இது போன்ற பொருட்களை விற்றுக் கொடுப்பதில் தற்சமயம் பல மாதர் சங்கங்கள். சமூக சேவை நிறுவனங்கள் உதவி வருகின்றன.
5. கற்பனை வளம் உள்ள பெண்மணிகள் கதை, கவிதை, கட்டுரை என பத்திரிகைகளுக்கு எழுதி, புகழடையலாம். தான் எழுதிய படைப்பு அச்சில் வருவதைக் கண்டு நம் உள்ளம் அடையும் ஆத்மசந்தோஷத்திற்கு ஈடு இணை ஏது? தான் பெற்ற பிள்ளையைக் கண்டு மகிழும் ஒரு தாயின் மனோநிலையல்லவோ அது? தற்போது பத்திரிகைகளும் பெருமளவு ஊக்கம் கொடுத்து இளம் எழுத்தாளர்களை வெளிக் கொணருகின்றன.
6. தட்டெழுத்து தெரிந்த பெண்மணிகள் இரண்டு மூன்று வழக்கறிஞர்களை வாடிக்கையாகப் பிடித்துக் கொண்டு அவர்கள் தரும் பத்திரங்களை ஓய்வு நேரத்தில் அடித்துக் கொடுப்பதினால் வருவாயடையலாம்.
7. படித்த பெண்மணிகள் சிறு குழந்தைகளுக்கு டீயூஷன் எடுப்பதன் மூலமும். ஸ்லோகம் தெரிந்தவர்கள் பிறருக்கு சொல்லித் தருவதின் மூலமும் தான் கற்ற கலைகளை பிறருக்கு கற்பிப்பதன் மூலமும் வருவாயுடன் கூட, பயனுள்ள முறையில் பொழுதும் கழிகிறது. ரொடீன் வேலைகளிலிருந்து ஒரு மாறுதல் நம் உணர்வுகளுக்கு மாற்று வடிகால் வேறு பல விதங்களில் இது போன்ற தொழில்களும் உள்ளன.
சரியான முறையில் மனத்தைத் திருப்பி குழப்பங்களிலிருந்து தப்பி. சுகமான வாழ்வையடைய வாழ்த்துக்கள்.