கருப்பா இருக்கோம்னு கவலைப்படுறீங்களா? உங்களுக்குத்தான் இந்த செய்தி

கருப்பா இருக்கோம்னு கவலைப்படுறீங்களா?
உங்களுக்குத்தான் இந்த செய்தி
Published on

‘ஆறே வாரங்களில் சிவப்பழகு பெறலாம்’ என்ற விளம்பரங்களைப் பார்த்து, எத்தனையோ யுவதிகளும், இளைஞர்களும் ட்யூப் ட்யூபாக கிரீம்களையும், லோஷன்களையும் வாங்கி பூசுகிறார்கள் வருடக் கணக்கில். ஏதாவது மாற்றம் தெரிந்ததா என்றால், நிச்சயமாக.  அவர்களின் பணம் கரைந்ததும், க்ரீம் கம்பெனிகள் செழித்ததும் தான். ஏன் சிவப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது இந்தியாவில்? ஏனெனில் பெரும்பாலான இந்தியர்கள் பிரவுன் கலந்த கருமையான சருமம் கொண்டவர்கள். அதனால் அவர்களுக்கு சிவப்பு நிறத்தின் மேல்  ஈடுபாடு அதிகம்.

ஏப்ரல்  6  - உலக தோல் சுகாதார தினத்தையொட்டி நிற முக்கியத்துவத்தை நிறுத்துவது பற்றியும், சொரியாசிஸ், வெண்புள்ளிகள், தொழுநோய் குறித்தும்  தோல் மருத்துவர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வெண்ணிறத்திற்கான கிரீம்கள் அல்லது லோஷன்களை பயன்படுத்தி சருமத்தை சேதப்படுத்துவதை நிறுத்துங்கள் என்கிறனர் தோல் மருத்துவர்கள். வணிக நோக்கத்தோடு விற்கப்படும் ஸ்டீராய்டு கலந்த கிரீமை முக அழகிற்காக பூசினால் மலட்டுதன்மை, உடல் எடை கூடுதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். நாளடைவில் தோல் சுருக்கம், முகப்பரு, எரிச்சல், தோல் சிவத்தல், நிறமாற்றம், முகரோம வளர்ச்சி, இவை மட்டுமல்லாது உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரிக்கின்றனர். மேலும் சொரியாசிஸ், வெண்புள்ளிகள் போன்ற நோய்கள் தொற்றுநோய் அல்ல எனவும், தொழுநோயை ஆரம்பநிலையில் கண்டறிந்து தகுந்த சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் எனவும், மேற்படி நோயுள்ளவர்களை புறக்கணிக்காமல், நல்லமுறையில் நடத்தவேண்டும் எனவும் கூறுகின்றனர்.

மருத்துவ ரீதியாகப் பார்க்கும்போது, சிவப்பு நிறத்தை விட கருப்பு நிறமே சிறந்தது. கருப்பு நிறத்தோலில் அதிகளவு மெலனின் இருப்பதால், சூரிய ஒளியைத் தாங்கும் இயற்கையான குடையாக அமைந்து, தீங்கு மிக்க கதிர்வீச்சு மற்றும் புற ஊதா கதிர்கள் சருமத்தில் நுழைவதைத் தடுக்கிறது. முகத்தில் தோன்றும் ஆழமான சுருக்கங்கள் அதிக வயதின் காரணமாக ஏற்படும் புள்ளிகள் கருப்பு நிறத்தவரை விட வெள்ளை நிறம் கொண்டவர்களையே அதிகம் பாதிக்கிறது.

கருப்பாய் இருப்பவர்களுக்கு சூரிய ஒளி வேகமாக உட்கிரகிக்கப்படுவதால் விரைவில் விட்டமின் டி கிடைக்கிறது. இதனால் எலும்பு பற்கள் பலமாய் இருக்கும். வெள்ளையாக இருப்பவர்களுக்கு மெலனின் அளவு மிகக் குறைவாக இருக்கும். அதனால் அவர்கள் வெயிலில் செல்லும்போது மிகுந்த கவனம் எடுத்து, குடை, கூலிங்கிளாஸ்,  சகிதம் வெளியே செல்ல வேண்டும்.
ஆக, கருப்பு நிறத்து அழகிகளே இனி, கவலையை விடுங்க!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com