-மரிய சாரா
காதலிக்கும் அனைவருமே வாழ்க்கையில் சேர்ந்து விடுவது இல்லை. சில காதல் உண்மையாக தெய்வீகமாவே இருந்தாலும், ஏதோ ஒரு காரணங்களோ, இல்லை சில காரணமோ, தவிர்க்க இயலாமல் பிரிந்து விடுகின்றனர். அப்படி பிரிந்துபோனவர்கள், பின்னர் தன் வாழ்க்கையில் தவறவிட்டவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள விரும்புவதுண்டு.
ஒருகட்டத்தில், அவர்கள் அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லை என்பதை தெரிந்து கொள்ளும்போது நாம் நொறுங்கி போய்விடுவோம். நமது வாழ்க்கையும் tragedy ஆகி, நாமும் நமது வாழ்வில் நிம்மதியாக இல்லை என்றால் அது நரக வேதனை. அய்யோ என் வாழ்க்கைக்கு ஒரு rewind button இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து நினைத்து அழத் தோன்றும்.
அவர்களுடன் நாம் மகிழ்ச்சியாக செலவழித்த அந்த sweet memories நம்மை வேட்டையாடும். தவறு செய்துவிட்டோம் என நமது மனமே நம்மைப் பழி சொல்லும். ஏன் இப்படிச் சுயநலமாக முடிவு எடுத்துப் பிரிந்தோம் என நம்மைத் தீர்ப்பிடும். மனதிற்குள் புழுங்கி அனுதினமும் செத்து பிழைப்போம். ஒவ்வொரு நொடியிலும் நாம் அவர்களைத் தவறவிட்டதை நினைக்க வைக்கும்.
அவர்கள் வாழ்க்கை இப்படி ஆனதற்கு நாம்தான் காரணம் என ஒவ்வொரு நொடியும் குற்றவுணர்ச்சி நம்மைப் பழித்துக்கொண்டே இருக்கும். யாரிடமும் சொல்லவும் முடியாது, சொன்னாலும் புரிந்துகொள்ளும் அளவிற்கு நல்லவர்கள் நம்முடன் நிச்சயம் இருக்கமாட்டார்கள்.
மன பாரம் குறையுமே என்று இதை அப்படியே யாரிடமாவது சொல்லிவிட்டால் அவ்வளவுதான். நமக்குப் பட்டம் கட்டிவிடுவார்கள், இல்லையென்றால் பின்னாடி பேசுவார்கள். உடலின் தேவைதான் காதல் என வாழும் இந்தச் சமூகத்தில் உண்மையான காதலைப் பற்றி தெரியவோ, புரியவோ வாய்ப்பில்லைதானே?.
வாழ்க்கை வீணாய் போய்விட்டது என தெரிந்தாலும், நிச்சயம் இந்த வாழ்வை விட்டுவிட்டு மீண்டும் அவர்களுடன் சேர நினைக்கமாட்டோம். இதுதான் தூய காதலின் தெய்வீகம். ஏனென்றால், நமக்கும் குடும்பம் இருக்குமே, பிள்ளைகள் இருப்பார்களே? ஆணாக இருந்தால்கூட பரவாயில்லை, "மச்சா, நா லவ் பண்ண பொண்ணு இப்போ ஹாப்பியா இல்லடா, ரொம்ப கஷ்டபட்ரா. தெரிஞ்சதுல இருந்து என்னால தாங்கவே முடியலடா. என் வாழ்க்கைத்தான் இப்படி, அவ நல்ல இருப்பான்னு நெனச்சேனே" என தனது நண்பர்களிடமோ அல்லது நெருங்கியவர்களிடமோ சொல்லி அழக்கூட செய்யலாம்.
அதே பெண் என்றால்? யாரிடம் சொல்ல முடியும்? என்னவென்று சொல்ல முடியும்? சாகிற வரை அவள் மட்டும்தான் அந்தப் பாரத்தைச் சுமக்க வேண்டும்.
யார் சொன்னது? பிரிந்த காதல் எல்லாம் உண்மை இல்லை என்று? சேர்ந்த காதலைவிட பிரிந்துப்போன காதலுக்கு வலியும் அதிகம், வலிமையும் அதிகம். சேர்ந்த காதலை விட பிரிந்த காதலுக்கு ஆயுளும் அதிகம்தான். இங்கு சேராமல் போன காதல் இன்னும் பலரின் உள்ளங்களில் உயிர்ப்புடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இப்படி பல வலிகளைத் தாங்கிய உண்மைக் காதல் இங்கு ஓராயிரம் கோடிகள்.