

“செல்போனை பார்க்காதே!” என்று அம்மா கண்டித்தால், உடனே தூக்கு போட்டு தற்கொலை!
“ஏன் வீட்டுப்பாடம் செய்யலை?” என்று ஆசிரியர் கண்டித்தால், பூச்சி மருந்து கையில் எடுப்பது!
ஆறு மாசம் பழகிய காதலன் ‘பிரேக்-அப்’ சொன்னால், ரயில் முன்னால் பாய்வது!
இளம் பெண்களை விடுங்க! குடும்பப் பெண்களே, படித்த தாய்மார்களே, சின்ன சுடுசொல்கூட தாங்காமல் விபரீத முடிவுகளை ஒரு க்ஷணத்தில் எடுத்து விடுகிறார்கள்!
சமீபத்தில் மறைந்த பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லேயின் வாழ்க்கைக் கதையின் சில துணுக்குகள் இதோ:
இசையமைப்பாளரும் சங்கீத மேதையுமான தந்தை தீனாநாத் மங்கேஷ்கர், திடீர் என இறந்தபோது, ஆஷாவுக்கு வயது 10! அவருக்குக் கீழே தம்பி, தங்கை!
அக்கா லதாவுடன் சேர்ந்து திரைப்பட வாய்ப்புகளைத் தேடி மும்பை ஸ்டுடியோக்களில் பசியோடு அலைந்தபோது வயது 11.
ஏழாம் வகுப்போடு படிப்பு நின்றுபோனது.
லதா மங்கேஷ்கர், கதாநாயகிகளுக்காக அழகான பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தபோது, ஆஷாவுக்கு வாய்த்தது என்னவோ செக்ஸியான காபரே அல்லது இரட்டை அர்த்தமுள்ள பாடல்கள். மலிவான படங்கள்!
அதையும் மீறி குடும்பத்தைக் காக்க அவர் ஓடிக்கொண்டிருந்தபோது, பாவப்பட்ட பெண்ணுக்குக் காதல் வலை வீசப்பட்டது. வீசியவர் கண்பத்ராவ் போஸ்லே! லதாவின் உதவியாளர்.
பதினாறே வயதான ஆஷாவுக்கு 31 வயதான ஆணுடன் காதல்! மொத்த குடும்பமுமம், உறவும் இந்தக் காதலை எதிர்க்கவே, கண்பத் ராவுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார் ஆஷா.
அந்த வாழ்வாவது நிலைத்ததா? கணவன், குழந்தைகள் என இயல்பான சராசரி வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ஆஷாவுக்கு, கண்பத் ராவ் பெரும் உபத்திரவங்களையே பரிசாக அளித்தார்.
மீண்டும் ரிகார்டிங் தியேட்டர்களுக்குப் போகவேண்டிய சூழல்! மற்ற பாடகிகள் மறுத்த பாடல்களை எல்லாம் பாடி நாலு காசு சேர்க்க வேண்டிய நிலைமை. இதன் நடுவே, அந்த வருமானமும் பற்றாமல், பார்ட் டைம் சமையல் வேலையும் செய்து, குழந்தைகளின் பசியாற்றினார்.
இதற்கிடையே அக்கா – தங்கையின் உறவும் கசிந்திருந்தது. “எங்கே போனாலும் அக்கா போல பாடவில்லை என்ற அபாண்ட விமர்சனமும் அவரது காதில் விழாமல் இல்லை. ‘Sibling rivalry’ எனப்படும் ஒரு போட்டி மனப்பான்மையால் ஆஷா பல நேரங்களில் துடித்து அழுதாராம்!
ஆனால் காலம் அப்படியே இருந்துவிடாது இல்லையா? அதிர்ஷ்டக் காற்று ஒ.பி. நய்யார் என்ற தனித்துவமான இசையமைப்பாளர் மூலம் வீசத் தொடங்கியது. சொக்க வைக்கும் ஆஷாவின் குரலுக்கு ஏற்ப அரிய பாடல்களை, இசையமைத்தார். புகழ் ஏணியில் ஏறத் துவங்கினார் ஆஷா. தொட்டதெல்லாம் சூப்பர்ஹிட்!
ஆஷாவின் பாடல்கள் பிரபலமடையத் தொடங்கியதும், கணவர் ஒருவித தாழ்வு மனப்பான்மையால் மேலும் துன்புறுத்தத் தொடங்கினார். வீட்டில் வசவு, திட்டு, அடிதடிகளை சுமந்து, பாடல் பதிவு இடங்களில் சிரித்த வண்ணம் நடமாடுவது சாமான்ய காரியமா? ஆஷா அதைத்தான் செய்தார்!
ஒரு கட்டத்தில் கணவரின் சந்தேக புத்தி மேலும் குரூரமடையவே, தமது 33 வயதில் கருவில் மூன்றாவது குழந்தையை சுமந்த நிலையில், வீட்டில் இருந்து நிர்கதியாக வெளியேற்றப்பட்டார் ஆஷா.
மறுபடி ஆஷாவின் வாழ்க்கையில் வசந்தம்! தென்றலும் வீச ஆரம்பித்தது. ஆர்.டி. பர்மன் இசையமைப்பில் பெரும் பாய்ச்சல் ஏற்பட்டது. விரைவில் மெல்லிசையின் ‘முடிசூடா ராணி’ ஆனார் ஆஷா!
அடேயப்பா! எத்தனை எத்தனை பாடல்கள்! விருதுகள்! டிஸ்கோ, பாப், ஹிந்துஸ்தானி, ராப், கஜல், காவாலி, பக்தி என 20க்கும் அதிகமான மொழிகளில் அசராமல் திறமையைக் காட்டினார்.
1980களில் ஆர்.டி. பர்மனை மறுமணம் செய்துகொண்டார். இசை வெட்ஸ் இசை! இவரும் விவாகரத்து ஆனவர்தான். பதினான்கு வருடமே வாழ்ந்த இவர்களது திருமண வாழ்வு, 94ல் முடிவுக்கு வந்தது. ஆர்.டி. பர்மனின் இறப்புக்கும் அவரது தாயார் மீரா, ஆஷாவையே குற்றம் சாட்டினார். அவரது சொத்தை எல்லாம் கபளீகரம் செய்துவிட்டதாக ஊரும் நம்பியது. ஆனால் உண்மையில், இருவரும் சேர்ந்து செய்த மேடை நிகழ்ச்சிகளில் வந்த பணத்தை எல்லாம் ஆர்.டி. பர்மனின் கடன்களை அடைத்தது ஆஷாதான்!
ஆஷாவின் ஒரே மகள் வர்ஷா, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மூத்த மகன், ஹேமந்த் பைலட் மட்டுமல்ல, பாடகர், இசையமைப்பாளர்! புற்றுநோயால் இறந்தார்.
எல்லாமே அவர் தாங்கிக்கொண்ட பெரும் வலிகள்? ஆயினும் அவர் தமது கனவுகளை விடாமுயற்சியுடன் துரத்திக்கொண்டுதான் இருந்தார் மரணம் வரை!
தாதா சாகேப் பால்கே விருது, பத்மவிபூஷன் விருது, ஃபிலிம் ஃபேர் வழங்கிய ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’, சர்வதேச ‘கிராமி’ விருது’...பட்டியல் நீளுகிறதே ...
இதையெல்லாம் தாண்டி அவருக்கு இரண்டு கனவுகள் இருந்தனவாம்!
சுயசரிதை எழுதணும்! ஹோட்டல் ஆரம்பிக்கணும். சுயசரிதை எழுதும் முயற்சி, கைகூடவில்லை என்றாலும், ‘ஆஷாஸ் ரெஸ்டாரன்ட்’ என சங்கிலி உணவகங்களை துபாய், குவைத், கத்தார் போன்ற இடங்களில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ஆஷாவின் மகன் ஆனந்த்!
“ஆஷா அம்மா, அருமையாக சமைப்பார்! கஷ்டக் காலத்தில் அவரது கேட்டரிங் சர்வீஸ்தான் எங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட உதவியது. எங்கள் நண்பர்கள் மற்றும் உறவு வட்டாரத்தில் ஆஷா அம்மாவின் கைமணத்துக்கு பெரும் ரசிகர் கூட்டமே உண்டு” என்று பூரிக்கிறார் ஆனந்த்.
‘ஆஷா ஜி!’ நீங்கள் இந்தியப் பெண்களின் ஆளுமையை, வடிவமைத்த குரல் ஓவியம்.
சமூகமும், குடும்பமும் பெண்ணை அடைத்து வைக்க முயலும்போதெல்லாம் ஒவ்வொரு தடையாகத் தாண்டி, கடும் உழைப்பால், திறமையால் மட்டுமே முன்னேறி, தன்னை விடுவித்துக்கொள்ள, உங்களிடம் கற்றுக் கொள்ளாமல் வேறு யாரை இனி கேட்போம்?
Chura Liya Hai Tumne Jo Dil ko ஆம் ஆஷா ஜி! நீங்கள் எங்கள் இதயத்தை திருடிவீட்டீர்கள்! முழுமையாக.