

நம்முடைய இந்துக்களின் முறைப்படி, முதல்முறையாகக் கருவுற்றவர்களுக்கு 5ஆம் மாதம் 7ஆம் மாதம் 9ஆம் மாதம் ஆகிய காலங்களில் அல்லது ஏதாவது ஒரு குறிப்பிட்ட மாதத்தில் அவரவர் குடும்ப வழக்கப்படி இந்த சீமந்தத்தையும், வளைகாப்பையும் செய்கிறார்கள். ஏன் அதை இன்றளவும் விடாமல் செய்கிறார்கள்?என்ன காரணம்? பார்க்கலாமா..
இந்த இரண்டு சடங்குகளுமே காலம் காலமாக கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யப்படுகின்றன. வட இந்தியாவில் இதை கோத் பராயி என்றழைக்கிறார்கள். இந்த சடங்கானது பெரியவர்கள் ஒன்றுக்கூடி, கர்ப்பிணிப் பெண் நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் செய்யும் நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. மேலும் கர்ப்பிணிப் பெண்ணை சந்தோஷமாகவும் மனநிறைவோடும் மகிழும் வகையில் வைப்பதற்காக, செய்யக் கூடிய ஒரு சடங்காகவும் இது இருக்கிறது.
சீமந்தத்தின் போது உதய சாந்தி என்ற ஒரு சடங்கை செய்வார்கள். ஒரு கலசத்திலே தண்ணீரை வைத்து பூஜை எல்லாம் செய்த பிறகு அந்த நீரால் அவளை குளிப்பாட்டுவார்கள்.
அப்போது அவள் உடல் நடுங்கும் போது உள்ளே இருக்கும் குழந்தையும் மிக ஜோராக அசைய ஆரம்பிக்கும். ஏன் தெரியுமா?வயிற்றிலிருக்கும் குழந்தையானது, ஆறு மாதமான பிறகு செயல்பட ஆரம்பிக்கும். நாம் எழுப்பும் சத்தத்தையும் மந்திரத்தையும் நன்றாக கேட்கும்.
இதைத் தவிர அன்று கர்ப்பிணிப் பெண்ணை அமர வைத்து அவளது நாபி முதல் உச்சந்தலை வரை முள்ளம்பன்றியின் முள்ளால் நேர்கோடு இடுவார்கள். அதாவது, அந்தப் பெண்ணின் தொப்புளில் துவங்கி ஒரே நேர்க்கோட்டில் நெஞ்சு, கழுத்து, நுனிமூக்கு, நெற்றியின் வழியே முள்ளம்பன்றியின் உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு முள்ளின் முனையினால் லேசான அழுத்தத்தோடு கோடிட்டு தலைமுடியில் வகிடு எடுத்து உச்சந்தலையில் வைத்து லேசாக அழுத்துவார்கள். இதன் காரணமாக கர்ப்ப பெண்ணின் நரம்பு மண்ஞலத்தில் எந்த பிரச்னை இருந்தாலும் சரியாகி, சுகமான பிரசவம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இந்த சடங்கானது கிட்டதட்ட Acupressure ஐ போன்றது. இந்தச் சடங்கிற்கும் மந்திரங்கள் உண்டு.
இந்தச் சீமந்தம் செய்யப்படுவதன் நோக்கம் யாதெனில் வயிற்றினில் வளரும் கருவானது எந்தவித இடையூறுமின்றி நல்லபடியாக வளர்ந்து சுகப்பிரசவம் ஆக வேண்டும்; மேலும் சுற்றியுள்ள தீயசக்திகளினால் எந்தவித தீங்கும் நேராமல் காப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
சீமந்த' - இந்த வடமொழி வார்த்தையின் அர்த்தம் மூளை. அதே நேரத்தில் 'உத்நயன்' என்பது வளர்ச்சி. மற்றொரு அர்த்தம் "முடியை மேல்நோக்கி பிரித்தல்". இது ஷோடஷ ஸ்மஸ்காரம் என்றழைக்கப்படுகிறது. இந்த சடங்கின் போது கணவர் தன் மனைவியின் முடியை மூன்று முறை பிரிப்பார் என்றும் சில சம்பிராயதங்கள் கூறுகின்றன. இதனால் குழந்தை ஆரோக்கியமாகவும் தாய்க்கு பாதுகாப்பான பிரசவமும் ஆகும் என்பதே நம் முன்னோர்களின் கருத்தாக இருந்தது.
கருப்பையில் இருக்கும் குழந்தை அதன் சுற்றுப்புறங்களிலிருந்தும், அதன் தாயின் நடத்தையிலிருந்தும் பதிவுகளை ஏற்றுக்கொள்கிறது என்பது பழங்காலத்திலிருந்தே அறியப்படுகிறது.
மகாபாரதத்தில் வரும் அபிமன்யுவின் பழங்காலக் கதையும் இக்கால நவீன அறிவியலால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு இசையைக் கேட்பதன் மூலமாகவும் கதைகளைக் கேட்பதன் மூலமாகவும் கருப்பையில் இருக்கும் குழந்தையின் உடல், மனம் மற்றும் ஆன்மாவின் வளர்ச்சிக்கு ஆற்றலைப் பரிமாற முடியும். பண்டைய வேதங்களும் ஆயுர்வேதமும் கூட கர்ப்ப காலத்தில் கேட்க வேண்டிய இசை மற்றும் மந்திரங்களை பரிந்துரைக்கின்றன. கர்ப்பிணிப் பெண்ணையும் உள்ளே இருக்கும் குழந்தையையும் பாதுகாக்கும் கர்பா ரக்ஷ ஸ்தோத்திரம் எனப்படும் சிறப்பு மந்திரத்தையும் இந்த நேரத்தில் யாராவது ஒருவர் உச்சரிக்க கர்ப்பிணி பெண் உட்கார்ந்து கேட்கலாம்.
வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எல்லா வகையான சத்தங்களும் கேட்கும் என்கிற காரணத்தினால் தான் வளைகாப்பு என்கிற சடங்கையும் நடத்துகிறார்கள்.
வளைகாப்பு செய்யும் நேரத்தில் அதிக வளையல்களை அணிவிப்பர். தாயினுடைய கையில் இருக்கும் வளையோசையை கேட்கும்போது அந்த குழந்தைக்கு அது இனிமையான மகிழ்ச்சியை அளிக்கும். மேலும் அக்குழந்தை நன்றாக செயல்படவும் ஆரம்பிக்கும். வளைகாப்பிற்கு பிறகும் அந்த குழந்தை தன் தாயின் வளையல் ஓசை ஒலிக்கும் போதெல்லாம் கேட்டு மகிழும். மேலும் தாய்க்கும் குழந்தையின் இந்த இனிமையான செயல்பாட்டையும் அசைவையும் நன்றாக உணரலாம்.
ஏன், முதல் குழந்தைக்கு மட்டும் தான் செய்ய வேணடுமா? என்ற கேள்வி நம் மனதில் எழலாம். முதன் முதலில் கர்ப்பமடையும் போது தான் பயமாக இருக்கும். வேண்டாத எண்ணங்களும் சந்தேகங்களும் மனதில் எழும். ஆகவே தான் முதன் முதலில் கர்ப்பமாகும் போது இதை செய்கிறார்கள். இரண்டாவது தரவை கர்ப்பமாகும் போது பெண்களுக்கு தமக்கு தானே ஒரு ஐடியா வந்து விடும். இரண்டாம் முறை கருத்தரிக்கும போதும், நீங்கள் ஆறு மாதத்திற்கு பிறகு ஸ்லோகம், பஜனை அல்லது பிடித்த மெலடியான சினிமா பாடல்களை கேட்கலாம். அப்போது தான் குழந்தை நன்றாக வளரும். கண்ணாடி வளையல்களையும் போட்டு கொண்டால் இன்னும் நல்லது.
ஆகவே நம் முன்னோர்கள் எந்த சடங்கையும் யோசித்து தான் செய்திருக்கிறார்கள். முடிந்த வரையில் அவைகளை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம்....