‘கடவுளின் தீவு’ பாலி 
- சுற்றுலா பயண அனுபவம்!

‘கடவுளின் தீவு’ பாலி - சுற்றுலா பயண அனுபவம்!

பாகம் - 1

மீபத்தில் நான் பாலிக்கு சென்று இருந்தேன். அருமையான இடம். வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்று. எங்கு திரும்பினாலும் பசுமை பசுமை பசுமை. மனதிற்கு அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் அமைந்துள்ளதுதான் பாலி. 'கடவுளின் தீவு'. ஐந்து நாட்கள் சுற்றுலா பயணமாக அண்மையில் பாலிக்கு சென்று வந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் கூடுதல் மகிழ்ச்சி.

பசுமையான காடுகள், பழைமையான கோயில்கள், நீர்வீழ்ச்சிகள், பனிமூட்டமான காலை, அழகழகாய் குன்றுகள், பசுமை மாறா நெல் வயல்கள், சுறுசுறுப்பான எரிமலைகள் அழகிய மணல் கலந்த வெள்ளை கடற்கரைகள், இந்து கலாசாரத்தை முழு மனதுடன் பின்பற்றும் எளிய மனிதர்கள், சூரிய அஸ்தமனம்... இப்படி எல்லாமுமாக கடவுளின் அற்புதமான படைப்புதான். இந்தோனேஷியாவில் அமைந்துள்ள பாலி. உலகின் மிக அழகிய இடங்களில் ஒன்று.

சென்னையிலிருந்து பாங்காக்... அங்கிருந்து பாலி... (Grand Ixora kuta Resort தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. 'குட்டா'பீச் ஹோட்டலில் இருந்து ஐந்து நிமிடம்.)

எங்கள் பாலி பயணம் குட்டாவில் இருந்து தொடங்கியது... (முன்பு கிராமமாக இருந்த குட்டா இப்போது பாலியின் சுற்றுலாவிற்கு பெரும் பங்களிப்பை தருகிறது என்றார்கள்) கடற்கரையில் நடை பயிற்சி, கவிதை. அதிகாலை நடை பயிற்சிக்கு ஏற்ற இடம் .

இரண்டாம் நாள் நான்கு இடங்களுக்கு சென்று வந்தோம்.

1.   Nusa Dua Beach ஒரு குட்டி படகில்  அழைத்துச் சென்றார்கள்.  அங்கு ஆமைக்குட்டி முதல் பெரிய ஆமை வரை... மற்றும் விதவிதமான அரிய வகை பறவைகள், மிகப்பெரிய ஓணான், மலைப்பாம்பு என ஏராளம். அவற்றோடு நாம் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.

2. Padang Padang Beach

பீச்சுக்கு போற வழியே பாறைகளை குடைந்து அதில் படிக்கட்டுகள் என இயற்கை அழகு கொஞ்சுகிறது. வழுக்கும் மேற்பரப்பு காரணமாக இருட்டாகவும் பாதுகாப்பற்றதாகவும் இருப்பதால் மாலை 4 மணி வரை மட்டும்தான் உள்ளே அனுமதிக்கிறார்கள். எங்குத் திரும்பினாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக வெளிநாட்டவர் சன்பாத்  எடுக்கிறார்கள். கவலையே படுவதில்லை ஜோடி ஜோடியாக மகிழ்வாக சுற்றுகிறார்கள். பீச் அதிக ஆழமில்லை.

3. GWK கல்ச்சுரல் பார்க்… புகைப்படம் எடுப்பதற்கு என்றே அழகழகாய் நிறைய இடங்களை வடிவமைத் திருக்கிறார்கள். மிகப்பெரிய கருடா statue கம்பீரமாய் இருக்கிறது. இடத்தை விட்டு வர மனசே வரவில்லை. அங்கே அமைதியாக உட்கார்ந்து விடலாம்போல் தோன்றியது. எங்கு திரும்பினாலும் பச்சை பசேலென்று ஒரு அமைதியான அழகு.

4. Uluwatu Cliff Temple இங்குள்ள கோயில்கள் எல்லாமே ஆயிரம் ஆண்டுகள் பழைமையானதாம். ஆன்மிக கலாசாரத்தை முழு மனதாக பின்பற்றுகிறார்கள் இம்மக்கள். இந்தியாவில் பார்க்கும் கோயில்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இவை இருக்கின்றன. ஆலய கட்டுப்பாடு அதிகம். உள்ளூர் மரபுகளை பின் பற்றுகிறார்கள். கோயில்கள் அனைத்துமே பாரம்பரிய நடன நிகழ்வுகளுக்கு பெயர் பெற்றவை ஆக இருக்கின்றன. பாலி கோயில்களின் ஆன்மிக அனுபவம் உலகில் வேறு எந்த பகுதிகளிலும் கிடைக்காது என்றே சொல்லலாம். பாரம்பரிய உடை அணிந்துதான் செல்ல வேண்டும்.

பெரும்பாலான  கோயில்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.  பாலி மக்களுக்கு மட்டுமே அனுமதி.  தோள்பட்டை மற்றும் மேல் கைகளை மறைக்கும் சட்டைகளை அணிய வேண்டியது அவசியம். (சரோங், செலெண்டாங்) இடுப்பை மறைக்கும் ஒரு துணி அவசியம் அணிய வேண்டும்.

இந்தக் கோயிலில் சூரிய அஸ்தமனத்தில் 'Kecak' நடன நிகழ்ச்சி நடக்கிறது. திறந்தவெளி அரைவட்ட அரங்கில் ராமாயண நாட்டிய நாடகம் (கெசக்) பார்த்தோம். மத குரு ஒருவர் தீபமேற்ற... நாடகம் துவங்குகிறது.

சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்தி செல்லும் காட்சி, அனுமன் சீதையை காணும்காட்சி, அனுமன் வாலில் தீ வைக்கும் காட்சி, (பிரமிக்க வைக்கிறது) ராமன் சீதையை மீட்பது.. என மொத்தமே நான்கு காட்சிகள்தான்.. நடு நடுவே ராவணனின் வேலையாள் பாலி மொழியில் இருந்து மாறி பார்வையாளர்களுடன் பல மொழிகளில் தொடர்புகொள்கிறார். சிரிப்பு வருகிறது. 

சீதை ராம லக்ஷ்மணன் என வேடமேற்பவர்கள் அனைவரும் பெண்கள். கண்கொள்ளாக் காட்சி அவசியம் பார்க்க வேண்டிய ஒரு நாட்டிய நிகழ்வு.

மூன்றாம் நாள் பயணம்.

West  Nusa Penida Island

போகும் வழியில் Broken Beach, Diamond Beach, Angel Beach, Keling Beach... எல்லாவற்றிலும் அழகான இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே நின்று படம் பிடித்தோம். எல்லா பீச்சிலும் ஆசை தீரக் குளிக்கலாம். வியூ பாயிண்ட்ஸ் ஒவ்வொன்றும் அழகோ அழகு.

புகழ் பெற்ற பாலி ஊஞ்சல்... எல்லாவற்றிலும் தனியாக ஆடலாம். துணையுடனும் ஆடலாம். கவலைகளை மறந்து ஆடலாம். அருமையான எக்ஸ்பீரியன்ஸ்.

இரவு.  Full Moon Villa Ubud வந்தடைந்தோம்.

அருமையான villa.. ஒவ்வொரு அறையிலும் தனிப்பட்ட முறையில் நீச்சல் குளம்.. சூரியன் மெதுவாக ஜன்னல் வழியாக நேராக வில்லாவுக்குள் எட்டிப் பார்க்கிறது... கவிதை எழுதத் தெரியாதவர்களுக்கும் கவிதை எழுத வரும்...

(பாகம் 2 தொடரும்)

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com