சமூக ஊடகங்களில் பொறுப்பற்றவராக இருப்பது, அதை பயன்படுத்துபவர்களா? பகிர்பவர்களா?

Social media
Social media
Published on

தொழிநுட்ப வளர்ச்சி கொடிகட்டி பறந்துக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் வாழும் நாம் அனைவருமே, சமூக ஊடகங்களில் கைதேர்ந்தவர்கள்தான். எதை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் உடனுக்குடன் அறிவதற்கு கையில் ஒரு கைபேசி போதுமே. அதை வைத்துக்கொண்டு நாம் செய்யும் சேட்டைகள் ஏராளமாகி வருகின்றன.

சமூக ஊடகங்களின் வளர்ச்சி தலை தூக்க தொடங்கியதில் இருந்து நாம் தலைகுனிந்துதான் இருக்கிறோம். எந்த நேரமும் போஸ்ட், லைக், ஷேர், கமென்ட் என்று நம்முடைய சிந்தனை சுழன்று சுழன்று சற்று தொலைந்துதான் நிற்கிறது. தினமும் ஒரு போஸ்ட் போட வேண்டும் என்று கேமரா முன்பு போஸ் கொடுப்பது, இடம், பொருள், ஏவல் அறியாமல் ரீல்ஸ் செய்வது, மற்றவர்களின் விருப்பம் இல்லாமல், அவர்களுக்கு தெரியமால், அவர்களை வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பகிர்வது, காமெடி என்ற பெயரில் பிராங்க் செய்வது என பல விதங்களில் சமூக ஊடகங்களில் மூழ்கி இருக்கின்றோம்.

இது முற்றிலும் தவறு என்று சுட்டவில்லை. டிஜிட்டல் உலகமாக மாறி வரும் சூழ்நிலையில், காலத்திற்கு ஏற்ப மனிதர்களும் மாறி வருகின்றனர். ஆனால் இது போன்று நாம் அன்றாடம் செய்யும் செயல்கள், மற்றவர்களை பாதிக்காமல் இருந்தால் யாருக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. அவ்வாறு இருக்கின்றதா? இருக்கிறோமா?

இதையும் படியுங்கள்:
சமூக வலைதளங்களில் அதிகரிக்கும் வெறுப்பு பதிவுகள்...
Social media

'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு மக்களுக்கு பவர் இருக்கிறது. 'பவர்' பொறுப்புடன் கையாளப்பட வேண்டுமே! இன்று பலரும் தங்கள் திறமைகளை, நல்ல அனுபவங்களை, சிந்தனைகளை வெளிப்படுத்த முற்படுகின்றனர். ஆனால் நாம் அவர்களை கண்டுக்கொள்கிறோமா?

ஒருவர் நல்ல கன்டென்ட் போட்டால் அது நம் கண்களுக்கு புலப்படாது. அப்படியே புலப்பட்டாலும், அதை முழுமையாகப் பார்க்க பொறுமை இருக்காது. பொறுமை இருந்தாலும் பகிரத் தோன்றாது.

இதே யாரோ ஒருவர் பரபரப்பாக, தன் சுயநலத்துக்காக தவறான சொற்களை பயன்படுத்தி பேசும் வீடியோக்களை பார்த்தால், உடனே கமென்ட் செய்வது, அதை ஒரு ஜாலிக்கு எடுத்துக்கொண்டு நண்பர்களுக்கு ஷேர் செய்வது என இறங்கிவிடுகிறோம். இப்படி செய்யும்போது, வீடியோ போடுபவர்களை ரீச் ஆகவைத்து அவர்களை நாமே பிரபலமாக்க வழிவகுத்து விடுகிறோம் அல்லவா?. ஒருவர் நல்ல தகவலை பகிரும்போது அதை பாராட்ட வேண்டும் என மனம் வராத நாம் ஒரு நெகடிவ் கன்டென்ட்டை ட்ரெண்ட் ஆக்கி விடுகிறோம்! இது உண்மை இல்லை என்று உங்களால் கூற முடியுமா?

சமூக ஊடகப் பகிர்வுகளால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள் பிரபலங்கள்!  பிரபலங்களுக்கு நடக்கும் சில பிரச்னைகளை பூதாகரமாக்கி, அதில் பூரித்து போவது இந்த சமூக வலைத்தள பெருச்சாளிகள். சமீபத்தில், தொடர்ந்து சில சினிமா பிரபலங்கள் தங்கள் திருமண உறவை முடித்துக்கொள்வதாக அறிவித்து வருகின்றனர். இந்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வரும் போது, தேவையற்ற அவதூறு பேச்சுக்கள், தவறான சித்தரிப்பு, போலி செய்திகள் என சம்மந்தப்பட்டவர்களை வைத்து இவை பகிரப்படுகின்றன. ஆளாளுக்கு கமென்ட் அடிப்பதும், தகவல்களை அலசுவதும், வேண்டாத விமர்சனங்களை முன் வைப்பதுமாக, வார்த்தைகளை கொட்டித் தீர்க்கின்றனர். தனிநபர் பிரச்னைகளை பொழுதுபோக்காக மாற்றி, சமூக ஊடகத்தை தவறாக பயன்படுத்தி வரும் ஒரு கூட்டமே இருக்கிறது. இது போன்ற விமர்ச்சனங்களுக்கென்றே சொந்த சேனல்களும், அது போதாதென்று பிற சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதுமாக பல வேறு வேலை இல்லா விமர்சகர்கள்!

இதற்கு பின்னால் ஒரு தனிநபரின் மனம் உள்ளது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பதால் வாய் போன போக்கில் பேசுவது தவறு. உண்மையில் அவரவர் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் அவரவர்களுக்குத்தான் தெரியும். இதை சமூக ஊடகங்களை பயன்படுத்தும் ஒவ்வொரு தனிநபரும் புரிந்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களை வதைக்கும் சிறிய சொல் கூட தவறுதான். ஒவ்வொரு தனிநபரும் சரியான முறையில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி பொறுப்புணர்வோடு செயல்படுவது சமூக நலன் பேணும்.

சமூக வலைத்தளங்களில் உலா வரும் பார்வையாளர் பெரும் மக்களே! பொறுப்பற்றவராக இருந்து, அவதூறு பேசி, தவறான சொற்களைப் பயன்படுத்தும் நபர்களை தூண்டிவிடாதீர்கள்.... அவர்கள் பதிவேற்றும் அநாகரிக செய்திகளை பகிர்ந்து, பரப்பி உங்கள் பொறுப்பிலிருந்து தவறிவிடாதீர்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com