
மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய, பயனற்ற பொருட்களை கழித்து கட்டவும், அதேபோல் பழைய துயரங்களை அழித்து போக்கும் இந்த பண்டிகை "போக்கி" என்று தான் முதலில் அழைக்கப்பட்டது. அந்த சொல் நாளடைவில் மருவி "போகி" என்றாகிவிட்டது. கடந்து சென்ற ஆண்டுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
பழைய தேவையற்ற பொருட்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துவது போல் நம் மனத்திலிருந்து மனக்கசப்புகள், காயங்கள், வேண்டாத தீய மற்றும் தவறான எண்ணங்களையும் தூர எறிந்து நம்மை தூய்மையாக்கிக் கொள்வதே இந்த போகிப் பண்டிகையின் நோக்கமாகும். அன்று போளி, வடை, பாயசத்துடன் சமையல் தடபுடலாக இருக்கும்.
அடுத்த நாள் மகர சங்கராந்தி எனப்படும் பொங்கல் பண்டிகை. அன்று சூரியனுக்கு நன்றி தெரிவிக்கவும், அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் "கும்பமேளா" மகர சங்கராந்தி அன்று தான் துவங்கும்.
அதற்கு அடுத்த நாள் நம் கூட பிறந்த சகோதரர்களின் நல்வாழ்வு வேண்டி காக்கைக்கு கனுப்பிடி வைக்கும் வழக்கம் உண்டு. அன்று கலர் கலராக சாதம் வைப்போம். சிவப்பு சாதம் செய்ய சிலர் சுண்ணாம்பு, குங்குமம் என சேர்ப்பார்கள். இது வேண்டாமே. இதை சாப்பிடும் பறவை இனங்கள் காக்கா, புறா, குருவி போன்றவற்றிற்கு நல்லதில்லையே.
காணும் பொங்கல் அன்று மறக்காமல் நம் உறவினர்களை சென்று பார்த்து வர உறவு பலப்படும். வருடத்திற்கு ஒன்று இரண்டு முறையாவது இப்படி நம் சொந்தங்களை நேரில் சென்று (போனில் அல்ல) பார்த்து பேசி மகிழ, உறவினர்களை விருந்திற்கு அழைக்க என்று இருந்தோமானால் நம் உறவு பலப்படும். அன்று ஒரு நாளாவது வீட்டு தொலைக்காட்சி பெட்டிக்கு ஓய்வு கொடுத்து, வரும் விருந்தினர்களை முகம் மலர வரவேற்று பேசி மகிழ்ந்து இருப்பது நல்லது. செய்வோமா?