மாறு வேடத்தில் ஒரு போதி மரம்!

சிறுகதை
மாறு வேடத்தில் ஒரு போதி மரம்!
Published on

ஓவியம்: வேதா

“ஸ்கூல் ஆண்டு விழாவில், மாறுவேடப் போட்டி.. .ஃப்ரண்ட்ஸ் எல்லோரும், காந்தி, பாரதியார், காமராஜர் மாதிரி வேஷம் போட்டு, கலந்துக்குறாங்க. டீச்சர் என்னையும் கலந்துக்கச் சொல்றாங்க. ஆசையா இருக்கும்மா. ப்ளீஸ்...” எட்டாம் வகுப்பு படிக்கும் மணிமேகலை, தன் அம்மா கண்ணகியிடம் கெஞ்சினாள்.

“சேர்ந்துக்கோயேன்… என்னை எதுக்குக் கேக்கறே?” சமையலுக்கு ஏதாவது தேறுமா என்று சமையல் அறையில், ஒவ்வொரு காலி டப்பாவாகக் கவிழ்த்து பார்த்துக்கொண்டே பதில் சொன்னாள் கண்ணகி.

“அதுக்குப் பணம் க…ட்…ட…ணும்...”  குடும்பக் கஷ்டம் தெரிந்து மென்று விழுங்கினாள் மணிமேகலை.

“எவ்வளவு பணம்?”

“டிரெஸ், மேக்கப்புக்கு… நா…னூ…று ரூபா...”

“என்ன விளையாடறியா? வீட்டு வேலைகள் செய்து, அம்மா எவ்வளவு கஷ்டபடறேன்னு பார்த்துக்கிட்டுதானே இருக்கே… வேலை செய்யற எல்லா இடங்களிலும் அட்வான்ஸ் வாங்கியாச்சு… அவ்வளவு பணத்துக்கு நான் இப்ப எங்கே போவேன்?”

ணவன் கோவலனுக்கு, மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில், ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை. வீட்டு செலவுக்கு, ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தது போக, பாக்கி தொகை, அவனுடைய குடி செலவுக்குப் போனது.

"குடிப் பழக்கம் நல்லது இல்லை. அது குடலையும், குடும்பத்தையும் அழிச்சுடும்..." என்று கணவனிடம் அவள் பல முறை சொல்லிப் பார்த்தாள். ஆனால், அவன் அதற்கெல்லாம் செவி சாய்க்க மறுத்தான்.

“என்னடி பெரிசா புத்தி சொல்றே. குடிப் பழக்கம் இருக்கறது தெரிஞ்சுதானே என்னைக் கட்டிக்கிட்டே. இந்த ஊர்லே குடிக்காதவங்க யாராவது இருக்காங்களான்னு சொல்லு பார்க்கலாம்...”

“நிறையப் பேர் இருக்காங்க. ஆனா, உங்களுக்குக் குடிப்உள்ளவங்க மட்டும்தான் கண்ணுக்குத் தெரியறாங்க...”

“அவங்களெல்லாம் உன்னை மாதிரி முட்டாளுங்க. வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவங்க...” விதண்டாவாதமாக உளறுவான் கோவலன்.

“கல்யாணத்துக்கு அப்புறம், உங்களை எப்படியாவது திருத்திடலாம்னு நினைச்சேன். இதுவரைக்கும் அது முடியலைங்கறதை நினைச்சு, அழுகைதான் வருது.”

“அட, இதோ பார்றா… திருத்திடுவாளாம்ல. உங்க பாட்டன் வந்தாகூட அது நடக்காது. கடைசி வரை குடிச்சுக்கிட்டேதான் இருப்பான் இந்தக் கோவலன். இஷ்டம் இருந்தா இரு. இல்லைன்னா போ...” மகளை கூடவே வைத்துக்கொண்டு, நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுவான்.

“சின்னப் பொண்ணு எதிரில் இப்படிக் கேவலமா பேசாதீங்க…” என்று அவனை அடக்க முயற்சிப்பாள்.

“அந்த சின்னப் பொண்ணுக்காகத்தான் குடிக்கறேன். அவள் எதிர் காலம் எப்படி அமையப் போவுதோங்கற கவலையை மறக்கத்தான் இந்தக் கோவலன் குடிக்கிறான்” என்று போதையில், விதம் விதமாக தத்துவம் பேசுவதைக் கேட்டு, கேட்டு, அவளுக்கு அலுத்து, சலித்துவிட்டது.

மாதக் கடைசியில், குடிக்க கையில் பணம் இல்லாதபோது, பணம் கொடுக்கும்படி, மனைவியைக் கண்டபடி திட்டி, கை நீட்டி அடிப்பான். அதற்குப் பயந்து, கையில் இருப்பு இருந்தால், கடும் எதிர்ப்புக்குப் பிறகு, வீட்டு செலவுக்கு வைத்திருக்கும் பணத்தை கொடுப்பாள். இல்லை யென்றால், அவன் கடன் வாங்கி குடிப்பான். கொடுத்தக் கடனை, வட்டியோடு திருப்பிக் கேட்டு, கடன்காரர்கள், அவளிடம்தான் வரிசையாக அணிவகுத்து நிற்பார்கள்.

குடித்துவிட்டு, வீட்டுக்குத் தினமும் லேட்டாகத்தான் வருவான். அளவுக்கு அதிகமாக குடித்து, தெருவில் விழுந்து கிடக்கும் நாட்களில், தெரிந்தவர்கள் அவனை குண்டுகட்டாகத் தூக்கி, வீட்டு வாயிலில் போட்டுவிட்டு போவார்கள். அவமானத்தில் கூனிக் குறுகி, கைத்தாங்கலாக பிடித்து, அவனை உள்ளே அழைத்துப் போவாள். அவன் எடுக்கும் வாந்தியை, பொறுமையாக அள்ளிப் போடுவாள். இந்த அவலங்களை மகள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக, கோவலன் வீட்டுக்கு வருவதற்கு முன்பாகவே, அவளை தூங்க வைத்து விடுவாள். கணவன் வெறியாட்டம் போடும்போது, மகள் விழித்துக்கொள்ளாமல் இருக்க, அருகில் போய், லேசாக தட்டி, போர்வையை இழுத்து போர்த்தி விட்டு வருவாள்.

ணிமேகலைக்கு வயதுக்கு மீறிய மன வளர்ச்சி. வகுப்பில் முதல் மாணவி. அம்மா படும் கஷ்டங்களும், அனுபவிக்கும் வேதனைகளும், அந்த பிஞ்சு மனதை பாதித்துக்கொண்டிருந்தது என்பது, அவள் முகத்தில் படர்ந்திருக்கும் கவலை ரேகைகள் காட்டிக் கொடுத்தன.

அம்மாவின் தற்போதைய இயலாமையைப் புரிந்துகொண்டவளாய், ஸ்கூலுக்குக் கிளம்பினாள்.

“வீட்டில் அரிசி, பருப்பு இல்லாததினால், சமையல் ஒன்னும் செய்ய முடியலை. வேலை செய்யும் வீட்டில் கொடுத்த இரண்டு சப்பாத்திகளை டிபன் பாக்ஸில் வச்சுருக்கேன். மதியம் சாப்பிட்டுக்கோ...” கண்களில் வழியும் கண்ணீரைப் புடைவைத் தலைப்பால் மறைத்து, மகளிடம் பாசத்துடன் சொன்னாள்.

டிபன் பாக்ஸை திறந்த மணிமேகலை. இரண்டில் ஒரு சப்பாத்தியை வெளியில் எடுத்து, “உனக்கு சாப்பிட வேறு ஒன்னும் இல்லைன்னு தெரியும். இந்த ஒரு சப்பாத்தி உனக்கு” என்று அம்மாவின் வாயில் ஊட்டி விட்டபோது, பீரிட்டு வந்த அழுகையைக் கண்ணகியால் அடக்க முடியவில்லை.

ன்று ஸ்கூலிலிருந்து சற்று தாமதமாக வீடு வந்த மகளிடம் “ஏன் லேட்டு...?” என்று கேட்டாள்.

“ஃபிரண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து, எனக்குப் பணம் கட்டறதா சொல்லிட்டாங்க. நானும் போட்டியில் கலந்துக்கிறேன். இன்னும் மூன்று நாள் ஒத்திகை இருக்கு.” போட்டியில் தனக்கும் ஒரு இடம் கிடைத்த சந்தோஷத்தை அம்மாவிடம் பகிர்ந்தாள் மணிமேகலை.

“என்ன வேஷம் போடப்போற..”

“அது சஸ்பென்ஸ்… நேரில் வந்து பாரும்மா!”

ண்டு விழாவுக்காக, பள்ளி அலங்கார விளக்குகளுடன் மின்னியது.

விழா தொடங்குவதற்கு முன்பே,  அந்த ஹால் நிரம்பி வழிய ஆரம்பித்தது.

சற்று முன்னதாகச் சென்றுவிட்டதால், கண்ணகிக்கு முன் வரிசையில் இடம் கிடைத்தது.

மேடை திரையை விலக்கி, தங்கள் முகத்தைக் காட்டி, வேஷம் போட்ட சிறுவர்களும், சிறுமிகளும் வெளியில் எட்டி பார்த்து, தங்கள் பெற்றோரின் வருகையை உறுதி செய்துகொண்டிருந்தனர்.

சில பெற்றோர், தாங்கள் கொண்டு வந்திருந்த நொறுக்கு தீனிகளை தங்கள் பிள்ளைகளுக்கு கொடுப்பதற்கு, மேடைக்கு பின்புறமாக சென்று வந்து கொண்டிருந்தனர். ஒரே கலரில் புடவை உடுத்தி, மல்லிகை பூ சுற்றிய தலை கொண்டையுடன், ஆசிரியைகள் மாணவர்களை ஒழுங்குபடுத்துவதில் ஈடு பட்டிருந்தனர்.

திரைச் சீலை வழியாக மணிமேகலையின் முகம் தெரிகிறதா என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்த கண்ணகிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. மேடைக்குப் பின்புறமாகச் சென்று பார்க்கவும் அவளுக்குக் கூச்சமாக இருந்தது. பின்புறம் திரும்பிப் பார்த்தாள். கூட்டம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலும், குழந்தைகளின், பெற்றோர்கள், ஜோடியாக விழாவுக்கு வந்திருந்ததை, அவளால் ஓரளவு ஊகிக்க முடிந்தது.

மாலையில் குடிக்கவில்லையென்றால், கைகால்கள் உதறல் எடுப்பதாகப் பிதற்றும் தன் கணவன், வருந்தி அழைத்தாலும், இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு வரப்போவதில்லை  என்று மனதை தேற்றிக்கொண்டாள்.

குத்து விளக்கு ஏற்றி, அறிமுக உரையுடன் விழா தொடங்கியது. சிறப்பு விருந்தினரின் பேச்சு முடிந்த பிறகு, கலை நிகழ்ச்சிகள் தொடங்கின.

பாட்டு, நடனம் ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, மாறு வேட போட்டி அறிவிக்கப்பட்டது.

காந்தி, பாரதியார், காமராஜர், சுபாஷ் சந்திர போஸ் வேடங்களில் சிறுவர்கள் வந்து போனார்கள்.

போலீஸ் வேடத்தில் வந்த சிறுவன் அம்மாவை நினைத்து, கண்களை கசக்கி, அழுதுகொண்டே வந்து,  சிரிப்பலைகளை அள்ளினான்.

திருவள்ளுவர் போல் வேடம் அணிந்து வந்த சிறுமி, ‘துப்பார்க்கு துப்பாய'.. குறள் சொல்ல ஆரம்பித்ததும், முகத்தில் ஒட்ட வைத்த தாடி கீழே விழுந்தது. கீழே விழுந்த தாடியைப் பார்த்து பயந்து கூச்சலிட்ட சிறுமியை சமாதானப்படுத்தி, ஆசிரியை தூக்கிக்கொண்டு போனார்.

அதற்கு பிறகு, சிறிது நேரம் திரை மூடப்பட்டது. தன் மகளை மேடையில் பார்க்க காத்திருந்த கண்ணகிக்கு ஏமாற்றம் அதிகரித்தது.

றுபடியும் திரை விலகியதும், மேடையில் நான்கைந்து சிறுவர், சிறுமியர், சுய அடையாளம் வெளிப்படாமல், ஒப்பனை செய்யப்பட்ட வேடங்களில் நின்றிருந்தனர். ரோடு ஓவியம் வரைந்த பலகைக்கு அருகில், கட்டவிழ்ந்த லுங்கி, பனியனோடு சாக்கடைக்குப் பக்கத்தில், மல்லாக்காக படுத்திருந்த ஒருவரை, போவோர், வருவோர் வேடிக்கை பார்த்து சென்றுகொண்டிருந்தனர்.

அடுத்த சீன், வீட்டு செட்டுக்கு அருகே நகர்ந்தது.

கைத்தாங்கலாக ஒருவரை பிடித்துக்கொண்டு, சிலர் வீட்டுக்குள்ளே நுழைந்து, அவரை கீழே கிடத்திவிட்டு சென்றனர்.

அதுவரை சுய நினைவு இல்லாமல் கிடந்தவர்,  ‘ழய்..எங்கேழி இருக்கே… சாப்பாழு கொண்ழா...” என்று குழறி கத்தினார்.

உள்ளேயிருந்து வெளியே வந்த, பெண் அவருக்குச் சாப்பாட்டை ஊட்டி விட்டாள். கூந்தலைப் பிடித்து இழுத்து, அவளை அடித்து ரகளை செய்ய ஆரம்பித்தார் குடிகாரர். அவ்வளவு கொடுமைகளையும் அவள் பொறுமையாகத் தாங்கிக்கொண்டிருந்தாள்.

“ஏங்க… பக்கத்து வீடுகளிலிருந்து பார்க்கறாங்க. அவமானமா இருக்கு. இப்படி கத்தாதீங்க. பொண்ணு தூங்கறா… முழிச்சுக்கிட போறா… அவ பார்த்தா, இன்னும் அவமானம்...” கெஞ்சினாள் மனைவி.

“அவ முழுச்சுக்கிட்டா எனக்கு என்ன அவமாழம்..வழச் சொல்லு..அவளுக்கும் ஊழ்தி கொடுக்கறேன்..”

“போதையில் என்ன பேசுறீங்கன்னு புரியாம பேசாதீங்க. தூங்குங்க...” என்று சமாதானப் படுத்தினாள்.

“என்னையே அழிகாரம் பண்றயா?  என்றவர், அவள் கன்னத்தில் ஓங்கி அறை விட்டார். அதில் அவள் காதில் போட்டிருந்த கம்மல் தெரித்து விழுந்தது.

கீழே விழுந்த கம்மல் மட்டும் அவருடைய கண்களுக்குத் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.

“கம்மழை அழகு வச்சு, பணத்தை ரெடி பண்ணு. நாழைக்கு சரக்குக்கு கையில் துட்டு இல்ல..” என்று பாதி தெளிவுடன் கட்டளை இட்டார்.

இந்தத் தத்ரூப காட்சிகளை, அரங்கமே கண் கொட்டாமல், வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில், குடிகாரனாக வேடம் அணிந்தவர், எழுந்து நின்று, மேடைக்கு நடுவில் வந்து, ‘ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி' என்ற திருக்குறளை சொல்லி, அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.

“அதாவது, பெற்ற தாயின் முகத்திலும் சோகத்தை வரவழைக்கும் குடிப் பழக்கம், மனைவி, மகள் போன்றவர்களுக்கு எப்படி அவலமாக தோன்றும் என்று சொல்லத் தேவையில்லை”..என்பதுதான் அதன் பொருள்..” சொல்லி முடித்தவர், அது வரை அடக்கி வைத்திருந்த அழுகையை வெளிப்படுத்தி, தேம்பி, தேம்பி அழ ஆரம்பித்ததும், அந்த தத்ரூபமான காட்சிகளைக் கண்டு, அரங்கம் முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்ந்து மௌனமானது.

“ஏம்மா அழறே? ஏதாவது சொல்லணுமா?” அங்கு நின்றிருந்த ஆசிரியை வினவினார்.

“ஆமா… நிச்சயமா… குடிப் பழக்கம் இருப்பவருடைய குடும்பத்தின் எதிர் காலம் என்னவாகும்னு யூகிப்பதற்கு நான் ஒரு நல்ல உதாரணம். இப்ப நாங்க நடிச்சு காட்டினதெல்லாம், என் வீட்டில் தினமும் நடப்பதுதான். நான் தூங்கிட்டேன்னு நினைச்சு, அம்மா மட்டும் அத்தனை துன்பங்களையும் தினமும் அனுபவிச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா, தூங்காம அத்தனையையும் நான் கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன். உங்களுக்கெல்லாம் ஒரு சின்ன வேண்டுகோள்!”

"என்ன...என்ன செய்யணும்?” கூட்டத்திலிருந்து கோரஸகா குரல்கள் எழுந்தன.

“இது வரை யாராலேயும் திருத்த முடியாத என் அப்பா, குடிப்பழக்கத்தை நிறுத்தி, திருந்தணும். என்னுடைய அம்மா, அடி, உதை இல்லாமல் நிம்மதியா தூங்கணும். இரண்டு வேளை சாப்பாடு கிடைத்தால்தான், என்னால், தொடர்ந்து படிக்க முடியும். என் குறிக்கோள் நிறைவேற, எனக்காக, இங்கே வந்திருக்கிற எல்லோரும் ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யும்படி, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!”

ந்த உருக்கமான பேச்சைக் கேட்டு, ரிமோட்டில் இயக்கியது போல், சிறப்பு விருந்தினர் உள்பட அனைவரும் எழுந்து நின்று, கண்களை மூடி, பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர்.

அந்தச் சமயத்தில், கடைசி வரிசையிலிருந்து யாரோ ஒருவர்  அழுதுகொண்டே, மேடைக்கு பின் புறம் நோக்கி ஓடும் சத்தம் கேட்டது.

பிரார்த்தனை முடிந்ததும், அங்கு அமைதி நிலவியது.

அந்த அமைதியை கிழித்துக்கொண்டு, திடீரென்று மேடையில் ஒரு குரல் ஒலித்தது.

“நான் குடிப்பது, என் மகளின் மென்மையான மனதை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் நன்றாகப் புரிந்துகொண்டேன். குடித்து விட்டு, இவ்வளவு கீழ்த் தரமாக நடந்துகொண்டதை தத்ரூபமாக நடித்து காட்டியதில், அவள் என் கேவலமான நடவடிக்கைகளை எவ்வளவு ஆழமாக கவனித்திருக்கிறாள் என்பது  இந்த மர மண்டைக்கு இப்பொழுதுதான் எட்டியது. என் செய்கைகளை நினைத்து, அவமானத்தில் தலை குனிந்து நிற்கிறேன் இனி நான் குடிக்க மாட்டேன். இது என் மகள் மீது சத்தியம்!"

“மேடையில் நடு நாயகமாக நின்றிருந்தது, தன் கணவன் கோவலன் என்று நம்புவதற்கு கண்ணகிக்கு சிறிது நேரம் பிடித்தது. இவர், இங்கே எப்படி வந்தார்...” என்று அவள் யோசித்தாள்.

“குடிப்பதற்கு இன்று கையில் காசு இல்லை. அதனால், வேறு வழியில்லாமல், என் நண்பரின் அழைப்பின் பேரில் இன்று இங்கு வந்தேன்.  இந்த மாறு வேட மேடை, எனக்கு ஒரு போதி மரமாக அமைந்துவிட்டது. என் குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கு நன்றி” என்ற கோவலனின் பேச்சு, அவளுக்குப் பதிலாக அமைந்தது.

“மாறு வேடம் என்று சொல்வதைவிட, தன் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் வசனங்களை அமைத்து, இதை ஒரு தத்ரூபமான குறு நாடகமாக வடிவமைத்த மணிமேகலைக்கும், குழுவினருக்கும் ஆயிரம் ரூபாய் முதல் பரிசு” என்று மேடையில் அறிவிக்கப்பட்டவுடன், கூட்டத்தின் கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆயிற்று.   

நிகழ்ச்சி முடிந்து, மேடையில் திரை விழுந்தது. அத்துடன், மணிமேகலை குடும்பத்தின் சோகத் திரை விலகியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com