அழைப்பு

சிறுகதை
அழைப்பு

ஓவியம்; தமிழ்

யணம் செய்யவிருந்த ஏ.ஸி. பெட்டிக்கு எதிரே தான் பிளாட்பாரத்து பெஞ்ச்சில் அமர்ந்திருந்தேன். சோழன் கிளம்ப இன்னமும் முக்கால் மணிநேரம் இருந்தது.
எழும்பூர் ரயில் நிலையம் அதிகாலை புறப்படும் வண்டிகளை அனுப்பிவிட்டு சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது.

நான் சென்னைக்கு வந்த வேலைகள் நல்லபடியாய் முடிந்தன. ரயிலடிக்கு ராம் வருவதாகச் சொல்லியிருந்தார். ‘வர வேண்டாம்’ என்று நான் மறுத்தாலும் ‘சும்மாருங்கண்ணா.. அதைவிட எனக்கென்ன வேலை’
என்ற சுவாதீனம். நேயம் பாராட்ட வயசும் பந்தமும் இருக்கணுமா என்ன?

‘சார்! இது சோழன் எக்ஸ்பிரஸ் தானே?’ என்ற பெண்குரல் கேட்டுத் தலை திருப்பினேன்.

“ஆமாம்மா. இதே தான்.. ரயில் புறப்பட நேரம் இருக்கே! நீங்க வருவீங்கன்னு தான் உள்ளே சுத்தம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இன்னும் ரயில்பெட்டிக் கதவு திறக்கல்லே!”

அவள் சிரித்தபடி நான் அமர்ந்த பெஞ்ச்சுடன் ஒட்டியிருந்த அடுத்த பெஞ்ச்சில் அமர்ந்தாள். “எப்பவும் நான் வரும் முன்னே சுத்த யட்சினி வந்து இடத்தை அலம்பிக் கோலம்
போட்டுட்டு தான் போவா!” என்றாள் அமர்த்தலாக.

ஏறிட்டேன். நறுவீசாக உடுத்தியிருந்த வெளிர் மஞ்சள் புடவை. கிரீடம் ஏற்றத்தக்க சிரசு தான். நெற்றியில் சிவந்த குங்குமத்தை சிறுகீற்றாகத் தீட்டியிருந்தாள். அதற்கு ஒட்டினாற்போல கீழே அரக்கு நிறத்தில் வட்டமாக பொட்டு. அதற்கும் கீழாக ஒரு புள்ளி கருஞ்சாந்து. அளவான சிரிக்கும் கண்களும் ஊசிப் பார்வையும் தெளிவான முகமும் கொண்டவளாக அமர்ந்திருந்தாள்.

“நான் தஞ்சாவூர் வரைக்கும் போறேன் ஜி. அங்கே ஒரு சத்சங்கம். நாலு நாள் பஜனையும் பிரவசனமும் அமோகமாக நடக்கும். எங்க வீட்டுக்காரரே பெரிய மனசு பண்ணி போயிட்டுத் தான் வாயேன்னு சொல்ல, சட்டுன்னு கிளம்பிட்டேன். நீங்க எதுவரைக்கும் ஜி போறீங்க?”

“நானும் தஞ்சாவூருக்குத்தான். ஒரு அறுபதாம் கல்யாணம்… அப்படியே நாலஞ்சு நாள் கோயில் குளம்னு சுத்திட்டுத் தான் திரும்புவேன்”

“ஓ…கொஞ்சம்போல காபி தரவா?” என்று கேட்டவள், என் பதிலை எதிர்பார்க்காமல் வயர் கூடையிலிருந்த ஒரு பிளாஸ்கை எடுத்து ஒரு பேப்பர் கப்பில் காபியை சாய்த்துத் தந்தாள். காபியின் கிறக்கும் மணம் சுற்றிப் பரவியது.

‘ தேங்க் யூ’ என்று காபியை வாங்கிப் பருக ஆரம்பித்தேன். “ரொம்ப நல்லாருக்கும்மா. பிளாஸ்க்கு, கூடைன்னு ஒரு பேண்ட்ரியோடயே புறப்பட்டுட்டாப்பல இருக்கே!”

கலகலவென சிரித்தபடி அவள் தலையையசைத்த போதுதான் அவள் காதுகளில் ஜிமிக்கியும் அசைவது கண்டேன். இவளுக்கு என்ன வயசு இருக்கும்? பத்து வயசு? இருபது? நாற்பது? அதற்கும்மேலா?

இது என்ன ஆராய்ச்சி? என்று அந்த எண்ணத்தை உதறிவிட்டு மீண்டேன். “திருமயிச்சூருக்கும் போவிங்களா ஜி?”

ஏதோ பேச்சு தொடர்ந்தது.

“உங்களுடையது எந்த கம்பார்ட்மெண்ட்?” என வினவினேன்.

‘இதே பி2 தான்’ என்று கம்பார்ட்மெண்டின் போர்டு பட்டியைக் காட்டியபடி அவள் பதில் சொல்லிக் கொண்டிருக்கையிலே ராம் அங்கு வந்தார்.

“ஆஹா! வாங்க ராம்” என்று எழுந்து அவரை அணைத்துக் கொண்டேன். 

“சரிங்க ஜி! பார்ப்போம்” என்றபடி அவள் ரயில் பெட்டிக்குள் ஏறிக் கொண்டாள்.

“யாருங்க பாஸ் அது? உங்களோட வந்திருக்காங்கன்னு இல்லே நினைச்சேன்?
நடுவாப்புல வந்து தொந்தரவு பண்ண வேணாம்னு தான் ரெண்டு நிமிஷமா உங்களைப் பார்த்துகிட்டு ஓரமா நின்னேன். தவிர, உங்களைப் பாக்கணும்னு தானே வந்தேன்? நம்ம பேசித்தான் தீருமா என்ன?!”

“அவங்க என்னோட வரல்லே ராம்! கொஞ்சம் முன்னே தான் பரிச்சயமானாங்க. அவங்களும் தஞ்சாவூர் போறாங்களாம்”

ஆச்சரியமாகப் பார்த்த ராமிடம் எதோ சொல்ல வாயெடுத்தேன்.
ராம் என்னைமறித்து, “எல்லோருக்குமே குழந்தைகளைப் பிடிக்கும் தானே!
முன்னேபின்னே குழந்தைகளை நமக்குத் தெரிஞ்சிருக்க வேணாமில்லையா? இந்த தாடிவச்சக் குழந்தையை யாருக்குத்தான் பிடிக்காது?!”

“ஆமாம் ஆமாம் . நல்லக் குழந்தை நான்!”

சற்று நேரம் பேசியபின் ராம் புறப்பட்டார். ரயிலும் தான்.

என் இருக்கைக்கு மீண்டேன். பக்கலிலும் முன்பாகவும் அமர்ந்திருந்த சகபயணிகள் சிநேகமாக புன்முறுவல் பூத்தார்கள். வழக்கமாக, இரயிலில் நம் பெட்டியில் பயணிப்பவர்கள் பயணத்தின் துவக்கத்தில்
இறுக்கமாக இருப்பதுதானே வழக்கம்? போகப்போகத் தானே சம்பந்தம் பேசுகிற அளவு நெருக்கம் உருவாகும்!

இந்த நாள் ஏதோ வாசல் தெளித்து, இழைக்கோலமிட்டு செம்மண் பூசிய  வாசலில் நுழைவதுபோல சுகமாகத்தான் புலர்ந்திருக்கிறது. சற்றுமுன் அவள் தந்த காபியின்
இன்கசப்பு இன்னமும் வாயில் சுழன்றபடி இருக்கிறது.

எங்கிருந்தோ பறந்து வந்து, முன் கையில் சுவாதீனமாக உறுத்தாமல் அமர்ந்துகொண்டு , மீண்டும் சிறகடித்துப் பறந்துவிட்ட கிளிபோலே அவள் வந்தாள்... நடந்தாள்...

என் இருக்கையின் எதிரே அமர்ந்திருந்த தம்பதிகள் பாலா பரமேஸ்வர உபாசனை செய்பவர்கள் என்றும்,  காஞ்சிபுரம் அருகே நெமிலி பாலாவை தரிசித்துவிட்டுத் திரும்புவதாகவும் சொன்னார்கள்.  அவர்களின் சில அனுபவங்களையும் எனக்குப் பக்கத்தில்  அமர்ந்திருந்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அவ்வப்போது  என்னைப் பார்த்தபடியும் பேசினார்கள்.

பாலா வழிபாட்டில் ஒரு தவறான புரிதலை எதிர்சீட்டுப் பெண்மணி சொன்னபோது தான் நானும் இடையிட்டு விளக்கினேன். 

“ஆஹா! எங்க பாக்கியம் சார்! இன்னமும் சொல்லுங்களேன். நாமும் நீளக்கப் போகணுமே! சத்விஷயமா தெரிஞ்சுக்கறோம்”

வாசல் கோலம் போட்டுத் துலக்கமாக இருக்கிறது என்று இப்போது தானே நினைத்தேன். அதுதான் நாவில் பாலா ஏறி அமர்ந்து கொண்டாள் கேள்வியும் விளக்கமுமாக தொடர்ந்தது சம்பாஷனை.

‘’வாலைக் குமரியடி கண்ணம்மா!’ என்று பாரதியார் சொன்னதிலே, பாலாவைத் தானே வாலை என்றாரில்லையா?’’என்று எதிர்சீட்டுப் பெண்
கேட்டது தான் கடைசி கேள்வி.

“வாலை என்றால் இன்னமும் பருவம் எய்தாத இளம்பெண்ணுன்னு அர்த்தம்.
பாரதியார் கண்ணனைக் கண்ணம்மான்னு வாலைக்குமரியாக பாவித்துதான்
அவளிடம் நேசம் பாராட்டுவதை அறிவிக்கிறார்.
பாரதியே ஒரு சக்தி உபாசகர் தான். நாராயணியான பரமேஸ்வரியின் தத்துவமே பாலை… கண்ணனாக வந்த நாராயணனே கண்ணம்மா. அவளையே வாலை என்கிறார்.
ஒரு கட்டத்துக்குமேல் பக்தி, சிநேகம், வாஞ்சை, காதல் எல்லாமே அதனதன் எதிர்பார்ப்புகளை நீக்கிக் கொண்டு, பவித்ரமான நேசமாகிப் பிரவகிக்கும்.
சிற்றாறுகள் கலந்து பெரிய காவிரியாக ஓடுவது போல மேடம்”

சம்பாஷணை முடிந்து ஒரு அமைதி சூழ்ந்தது. சன்னலுக்கு வெளியே நோக்கினேன். கடலூர் ஓ. டி ஸ்டேஷன் கடந்து ரயில் வேகமெடுத்திருந்தது. ஒரு கிழிந்த பாலித்தீன் துண்டு காற்றில் ரயிலுக்கு இணையாகப் பறந்தபடி இருந்தது. எகிறலும் இறக்கமுமாய் ஒரு பிடிவாதமான பறத்தல். சட்டெனக் காணாமலானது.

பெட்டியின் உள்ளே பார்வையை செலுத்தியபோது தான் அவளை மீண்டும் பார்த்தேன்.
அடுத்த வரிசையின் இடப்பக்கம் தனிசீட்டில் அமர்ந்திருந்தாள். என் இருக்கையிலிருந்து அவள் பின் கழுத்தும், இலேசாக அசைந்து கொண்டிருந்த இடதுகாதின் ஜிமிக்கியும் தெரிந்தது. இவ்வளவு நேரம் இவளைப் பார்க்காமலேயே இருந்து விட்டோமே என்று
சிறு பதற்றம் கூடியது.

மயில் தன் கழுத்தைத் திருப்பும் சுருக்கில் அவளே என் பக்கம் திரும்பினாள். நிமிர்ந்தே அமர்ந்திருந்தவள் உடலைச் சற்று குறுக்கியபடி, ‘இப்பவாவது என்னைப் பார்த்தீர்களே!’ என்பது போன்ற சலிப்பையும் ஆசுவாசத்தையும் கண்ணால் காட்டினாள். மீண்டும் அவளுடைய புன்னகை வெளிச்சம் போட்டது.

“சார். சாப்பாட்டு நேரமாச்சு. நீங்களும் ஒரு வாய் சாப்பிடுறீங்களா?” என்று எதிர்சீட்டு அம்மணி சொன்னபடி இருக்கைக்குக் கீழே இருந்த பையை வெளியே இழுத்தார்கள்.

“ வேண்டாம் மேடம். இப்போது பசியே இல்லை. நீங்க சாப்பிடுங்க”

சொல்லி நான் வாயை மூடவில்லை.

அவள் எழுந்து நான்கே எட்டில் என் எதிரே நின்றாள். அவள் கையில் ஒரு பிளாஸ்டிக் டப்பா இருந்தது. கண்ணாடிபோல் அந்த டப்பாவின் உள்ளே புளியஞ்சாதம் தெரிந்தது. அதில் வேர்க்கடலையும் முந்திரியும் விரவிக் கண் சிமிட்டின. எண்ணை டப்பாவின் மேல்விளிம்பில் பொன் மஞ்சளில் கோலம் போட்டிருந்தது.

என்னை நோக்கி அந்த டப்பாவை நீட்டினாள்.
“வேண்டாம்மா! திம்முன்னு இருக்கு” என்றபடி என் வயிற்றைச் சுட்டி மறுத்தேன்.

“பேசக்கூடாது நீங்க! இது ஸ்விக்கில வரவழைச்சது இல்லே. காலமே எழுந்து குளிச்சு மடியா நானே சமைச்சது. இந்த டப்பா தான் ஸ்விக்கில வந்த  ‘யூஸ் அண்ட் த்ரோ’ டப்பா. நல்லாக் கழுவித் தொடச்சி ரொப்பிக்
கொண்டு வந்திருக்கேன். நம்பிச் சாப்பிடுங்க”

அந்த டப்பாவின் கீழ்ப்பக்கம் கட்டை விரலாலும் மேலே
நான்கு விரல்களாலும் பிடித்துக் கொண்டிருந்தாள். அது
ஏதோ அன்னப்பட்சி ஒரு கனியைக் கவ்விக் கொண்டிருந்தது போல் இருந்தது.
மெலிதாக பச்சை நரம்புகள் அந்த விரல்களின் மேல் கிளையிட்டிருந்தன.
சுத்தமான சீரான நகங்கள். மறுவார்த்தைப் பேசாமல் டப்பாவை இரு கைகளாலும் வாங்கிக் கொண்டேன்.
‘ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி’ என்று உள்ளுக்குள் பிரார்த்தனை எழுந்தது.

மேல்மூடியைத் திறந்து வைத்துவிட்டு சாப்பிடாமல் அவளிருந்த பக்கம் பார்த்தேன்.
என்னைத் திரும்பிப் பார்த்தபடி, தன் வலக்கை விரல்களைக் குவித்தும் மேல்நோக்கி அசைத்தும் ‘உம்.. ஆகட்டும்’ என்று அபிநய முத்திரை காட்டினாள்.

சாப்பிட்டேன். மிக நன்றாகவே இருந்தது. அம்மா ஞாபகம் வந்தது. ஆனாலும் பாதிதான் சாப்பிட முடிந்தது.

மூடியைத் திரும்ப பொருத்தியபடி டப்பாவுடன் கைகழுவ எழுந்தேன்.  அவளைத் தாண்டும்போது, ‘ரொம்ப நல்லா இருந்தது’ என்றேன்.

“அது தான் பாதி டப்பாவுலயே மிச்சம் பண்ணி களையப் போறீங்களா!”

“ஓ.. சாரி! என்னமோ பசியே இல்லை. அதான்”

‘பரவாயில்லே ஜி’ என்றபடி அந்த டப்பாவை என் கையிலிருந்து சட்டென இழுத்துக் கொண்டாள்.
“வேஸ்ட் பண்ண வேண்டாம். இதுதான் எனக்கு இன்னைய ராத்திரிக்கு”

“இல்லம்மா… நான் சாப்பிட்ட மிச்சத்தைப் போய்…”

மேற்கொண்டு என் பேச்சைக் காதில் வாங்காமல், சிரத்தையுடன் அந்த டப்பாவைத் துடைத்து தன் வயர்கூடைக்குள் வைத்துக் கொண்டாள்.

ஏதும் மேற்கொண்டு சொல்லத் தெரியாமல் கையலம்பும் இடம் நோக்கி நகர்ந்தேன்.

மீள்கையில், அண்ணாந்து பார்த்த அவளிடம் திரும்பவும் நன்றி சொன்னேன்.

“நீங்க பாலா பற்றிப் பேசினதையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். ரோமாஞ்சனமா ஆயிடுத்து. உங்களுக்கு மனசால நமஸ்காரம் பண்ணிக் கிட்டேயிருக்கேன்.”

“அனுக்ரஹம் கிடைச்சதா?”என்று சிரித்தேன்.

நடக்கும் வழியில் நின்று பேசிக்கொண்டிருந்த என்னைக் கடந்துபோன ஒருவர் மோத, சற்றே தடுமாறினேன். அவள் அமர்ந்திருந்த சீட்டை ஒரு கையால் பிடித்துக் கொண்டாலும், என் மறுகை அவள் தலைமேல் உரசியது.

“சாரிம்மா”

தலையை உயர்த்தாமல் கண்களை மட்டும் மேலேற்றி,
“உங்க அனுக்ரஹத்தோட, ஸ்பரிச தீட்சையும் இப்போ கிடைச்சது” என்றாள்.

சிரித்தேன். அவளோ வயர் கூடையைக் காட்டி, “நிவேதனப் பிரஸாதமும் பாதி டப்பா கிடைச்சது!” என்று தொடர்ந்தாள். மௌனமாக என் இருக்கைக்குத் திரும்பினேன்.

மீண்டும்வந்து அமர்ந்தபின், அவளிருந்த பக்கம் பார்த்தேன். முன்பக்கமாக வளைந்தமர்ந்தபடி ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியிருந்தாள்.

சுற்றுமுற்றும் எல்லோருமே நித்திரையின் பிடியில் இருந்தார்கள். அவள் ஏதோ வாசிக்கிறாள். நான் ஏதோ யோசித்தபடி சன்னல்வழியே பார்த்துக் கொண்டு…

ரயில் தஞ்சாவூர் வந்து விட்டது. பிளாட்பாரத்தில் எனக்கு முன்பாக இறங்கி நின்றிருந்தாள். நானும் இறங்கினேன். தண்ணீர் பாட்டிலை நீட்டினாள். மௌனமாக ஒரு வாய் குடித்தேன். பாட்டிலை மூடி திருப்பித் தந்தேன். அதைக் கைகளில் வாங்கியபடி, “தஞ்சாவூர் சுருக்க வந்துடுத்து இல்லையா?” என்றாள்.

ஆமென்று தலையாட்டினேன். அந்த சத்சங்கம் நடக்கும் இடம் பற்றி சொன்னாள். அவகாசமிருந்தால் வரலாம் என்றாள்.

‘வரேன் ஜி’ என்றபடி சிரிப்புடன் ஏறிட்டாள். அவள் சிரிப்பு கொஞ்சம் வண்ணம் மங்கியிருந்ததோ?

மெல்லத் தலையசைத்தேன். ஏர்பேக்கைத் தோளிலும் வயர்கூடையைக் கையிலும் சுமந்துகொண்டு விறுவிறுவென நடந்தாள்.


நானும் பின்னோடே மெல்ல நகர்ந்தேன்.
சட்டென என் முழுமனமும் விழித்துக்கொண்டது. அது மனமா? உணர்வா? வேறேதேனுமா? எனக்கு பின்னாலும் முன்னாலும் நிகழ்பவை நடப்பவை யாவும் ஸ்வச்சமாகத் தென்பட்டன.

அந்தப் புதிய பார்வை மட்டும் அவள் முன்னே மிதந்து,  அவளைப் பார்த்தபடி பின்னோக்கி நகர்ந்தபடி இருந்தது. அவளுடைய மேல்நெற்றியில் பளபளத்த ஒரு சிறு வியர்வை முத்து, எந்நேரமும் அவள் குங்குமத் தீற்றலை கரைக்கத் தயாராகத் திரண்டது. அவசரமில்லாத தளர்ந்த நடையுடன் மேலும் நடந்தேன்.

வெளியே வந்து வரிசையாக நின்றிருந்த ஆட்டோக்களில் ஒன்றை நோக்கி நடந்தேன்.
அந்த ஆட்டோவுக்கு முன் நின்றிருந்த ஆட்டோ உறுமலுடன் வளைந்து திரும்பியது.
உள்ளேயிருந்து நீண்ட அந்தக் கையை நன்கு அறிவேன். அவள் கை தான். 

ஆட்டோவின் வெளிப்புறம் தலைசாய்த்துப் பார்த்தபடி அவள் கையசைத்தாள். நான் பதிலுக்கு கையசைக்குமுன் அவளை விழுங்கிய ஆட்டோ வேகம் கொண்டு விரைந்தது.

நான் தங்கும் ஜாகை வந்தபின்னும் கண்களினின்று அகலாத அவள் சுடர்முகம்… 

அடுத்த நாள் வேறேதும் வேலையில்லை.  கோயில் ஏதும் போகலாம்… எந்தக் கோயில் பார்க்கலாம்?…

அந்த சத்சங்கம் நடக்குமிடம் விசாரித்துக் கொண்டு போய்ப் பார்த்தாலென்ன?
இந்த நினைவே ஒரு நம்பிக்கையாக, தொலைந்த பொருள் இருக்குமிடத்தைத் தெரிந்து கொண்ட ஆசுவாசம் போலே ஒரு நிம்மதி தந்தது.

என்னைப் பார்த்தால் சந்தோஷப்படுவாள் தானே? அவள் பெயரைக்கூட நான்கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை அப்போதே நினைவுக்கு வந்தது.
சிரிப்பாயும் இருந்தது. அவளை சந்திக்கும்போது கேட்டுத் தெரிந்து கொண்டால் போயிற்று.  என்ன… எல்லோரையும் உறுத்துப் பார்த்து அவளைத் தேடவேண்டும்..

விடிந்து சூரியன் ஏறத் தொடங்குகையில்  புறப்பட்டேன். சாலைக்கு வந்து சற்றுமுன்னால் திரும்பி நடந்தேன்.

‘வரமாட்டேன்’ என முரண்டு பிடிக்கும் ஒரு கறுத்த ஆட்டினை ‘அடச்சீ வா நாயே!’ என்று திட்டியபடி ஒரு பெண் இழுத்துக்கொண்டு என்னைக் கடந்து போனாள்.

ஆட்டோ ஏதும் தென்படவில்லை. ஏதேனும் வரலாம். 
அந்த ஜிமிக்கியும், அலையும் கேசமும், சிரிப்பும் என் உள்ளே சுழன்றன.
‘நீங்க வருவீங்கன்னு தெரியும்’ என்றன.
இதையெல்லாம் மனத்தின் மாயச்சுவரில் சாய்ந்து பார்த்தபடி சற்று நின்றேன்.

தலையைச் சிலுப்பிக் கொண்டு வந்தவழியே திரும்பினேன்.

சற்றுமுன் 'வரமாட்டேன்' என்று முரண்டுபிடித்து திமிறிக்கொண்டிருந்த  அந்தக் கருப்பு ஆடு, அந்தப் பெண்ணுடன் சேர்ந்து எனக்கு முன்னே பதவீசாக நடந்து கொண்டிருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com