திருமணம் ஆகாதப் பெண் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற...
வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற...www.bbc.com

டெல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவு.

திருமணம் ஆகாத ஒரு பெண், வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற அனுமதி இல்லை என உறுதிபடக் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். நம் குடும்ப அமைப்புகளின் திருமண பந்தத்தினைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என வலியுறுத்தியுள்ளது டெல்லி உச்ச நீதிமன்றம்.

சமீபத்தில் நடைபெற்ற விஷயம் இதுதான்.

டெல்லியைச் சேர்ந்த திருமணம் ஆகாத ஒரு பெண் வயது நாற்பத்தி நான்கு, பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் நிறையவே ஊதியம் பெறுகிறார். இவர் வழக்கறிஞர் ஷ்யாமல் குமார் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “கணவனை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற இருபத்தைந்து முதல் முப்பத்தைந்து வயதுக்குட்பட்ட இந்தியப் பெண் விரும்பினால், வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என வாடகைத்தாய் ஒழுங்கு முறைச் சட்டத்தின் 2 (எஸ்) பிரிவு கூறுகிறது. அதாவது திருமணம் ஆகாத ஒரு பெண் வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி இல்லை என்பதாக இது உணர்த்துகிறது. இது மனிதனின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. எனவே பாரபட்சமாக உள்ள இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். எனக்குத் திருமணம் ஆகவில்லை. எனினும் நான், வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்று அப்பெண் கோரியிருந்தார்.

இந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி. வி. நாகரெத்தினம்மா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இது குறித்து, “இந்தியாவில் திருமண பந்தத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு தாய் தகப்பன் ஆவதுதான் இதுவரை விதிமுறையாகவும் நடைமுறையாகவும் இருந்து வருகிறது. திருமணம் செய்துகொள்ளாதவர்கள் ஒரு குழந்தைக்கு தாய் ஆவது விதிமுறை அல்ல. மனுதாரரோ திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒரு குழந்தைக்குத் தாய் ஆக விரும்புகிறார். இது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். குழந்தையின் நலனைக் கருத்தில்கொண்டே பேசுகிறோம். திருமணம் என்கிற பந்தம் நம் நாட்டில் நிலைத்திருக்க வேண்டுமா? வேண்டாமா? நாம் மேற்கத்திய நாடுகளைப் போன்றவர்கள் அல்ல. மேற்கத்திய நாடுகளில் பல குழந்தைகள் தங்களின் தாய் தந்தை யார் என்றே தெரியாமல் வாழ்ந்தும் வளர்ந்தும் வருகிறார்கள். அந்த நிலை இங்கு வேரூன்றிட நாங்கள் விரும்பவில்லை. நம் நாட்டில் திருமண பந்தம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக இந்த மனுதாரர் போன்றவர்கள் எங்களைப் பழமைவாதிகள் என முத்திரைக் குத்தினாலும் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்கிறோம். திருமணம் ஆகாத இந்தப் பெண், வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற உரிமை இல்லை” என அமர்வு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அனுபவம் வாய்ந்த திருச்சி மூத்த மகப்பேறு மருத்துவர் ஒருவரிடமும், சட்ட அமைப்புகளில் குழந்தை நலன்கள் சார்ந்து இயங்கி வரும் வழக்கறிஞர் ஒருவரிடமும் நாம் சற்று விரிவாகப் பேசினோம்.

ஜனனி டெஸ்ட் டியூப் பேபி சென்டரின் நிர்வாக இயக்குனரும். அகில இந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தின் மேனாள் உப தலைவியும் தற்போது தமிழ்நாடு மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவியுமான திருச்சியின் மூத்த மகப்பேறு மருத்துவர் ரமணிதேவி சொல்வது என்ன?

மகப்பேறு மருத்துவர் ரமணிதேவி
மகப்பேறு மருத்துவர் ரமணிதேவி

“இந்தியாவில் தற்போது வாடகைத்தாய் பற்றிய பல வேறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. நம் இந்திய சமூகத்தில் வாடகைத்தாய் என்பது இப்போது என்று மட்டுமல்ல, புராண காலத்திலேயே உண்டு. வசுதேவர் – தேவகி தம்பதியினருக்காக கர்ப்பத்தினை ரோகிணி சுமந்துள்ளார். அதன் மூலம்தான் பலராமன் பிறந்துள்ளார். இப்போதைய வாடகைத்தாய் சட்ட திட்டங்களுக்கு நாம் வந்துவிடுவோம்.

முதலிலேயே சொல்லி விடுகிறேன். வாடகைத்தாய் செயல் நடைமுறை எங்களின் மருத்துவமனைகளில் கிடையாது. வாடகைத்தாய் (SURROGACY)   நடைமுறையில் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று GESTATIONAL  SURROGACY.  அதாவது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது, அதற்கென பணம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல், மருத்துவ உதவி மற்றும் இன்சூரன்ஸ் கவரேஜ் மட்டும் பெற்றுக்கொண்டு ஒரு பெண் வாடகைத்தாய் ஆகத் தன்னை ஒப்புக்கொள்வது. இரண்டாவது நடைமுறை என்பது,  ALTRUISTIC  SURROGACY ஆகும். இதன்படி ஒரு வாடகைத்தாய் ஆனவர் பணம் பெற்றுக் கொண்டு தனது கருப்பையில் கருவினைச் சுமந்து குழந்தை பெற்றுத் தருவது. மேற்கண்ட இரண்டிலுமே வாடகைத்தாய் ஆக இருக்க வருபவர், அதற்கு முன்னர் அவர் ஒரு குழந்தை பெற்றிருக்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும்.

அதில் இரண்டாவது நடைமுறைதான் இந்தியாவின் பெரிய நகரங்களில் வேகமாகப் பரவியது. மேலும் வெளிநாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் இதற்கான செலவுகள் குறைவு என்பதால், வெளிநாட்டினர் பலரும் அதிக அளவில் இங்கு வந்திருந்து அதன் பலனை அனுபவிக்கத் தொடங்கினர். இதை, நம் சுகாதாரத் துறை கண்காணித்துக்கொண்டே இருந்தது.

இதற்கெனப் புதிதாக SURROGACY  LAW  CREATE  உருவாக்கி அமைத்தது மத்திய அரசு. அதன்படி, அந்த இரண்டாவது நடைமுறையினை முற்றிலுமாகத் தடை செய்து SURROGACY  ACT  2022  கொண்டு வரப்பட்டது. அதில் திருமணமான தம்பதிகளில் மனைவிக்கு கர்ப்பப்பை பிரச்னை, கர்ப்பப்பையே இல்லாதிருத்தல், டெஸ்ட் டியூப் பேபியும் தங்காதிருத்தல், தொடர்ந்து கருக்கலைதல் போன்ற உடலியல் சார்ந்த பிரச்னைகளால் அவர்கள் தங்களுக்கான வாடகைத்தாயினை அமர்த்திக் கொள்ளலாம் என்பது அறிவிக்கப்பட்டது. அத்துடன் மேலும் ஒரு புதிய திருத்தம் சேர்க்கப்பட்டது.

‘விதவையாகிப் போன ஒரு பெண் அல்லது விவாகரத்து பெற்ற ஒரு பெண், தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்றால் தனக்கென ஒரு வாடகைத்தாயினை அமர்த்திக்கொள்ளலாம். அதுவும் அப்போது அந்தப் பெண்ணுக்கு இருபத்தைந்து வயது முதல் முப்பத்தைந்து வயதுக்குள் இருக்க வேண்டும். அதுபோல வாடகைத்தாயாக இருக்க விரும்பும் பெண்ணுக்கும் இருபத்தைந்து வயது முதல் முப்பத்தைந்து வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த நிலையில் டெல்லியில் வசித்து வரும் திருமணம் செய்து கொள்ளாத, அந்த நாற்பத்தி நான்கு வயதுப் பெண், தனக்கு வாடகைத் தாய் மூலமாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார்.

‘விதவையாகிப் போன ஒரு பெண்ணும், விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணும் என்னைப் போல தனி நபர் பெண்தானே? அவர்களுக்கு வாடகைத்தாய் அமர்த்திக்கொள்ளும் உரிமையினை அனுமதிக்கும்போது, திருமணம் செய்துகொள்ளாது தனி ஒரு பெண்ணாக வாழ்ந்து வரும் எனக்கும், வாடகைத்தாய் அமர்த்திக்கொள்ளும் உரிமையினை வழங்கிட வேண்டும்’ என்பதே அந்த டெல்லி பெண்ணின் வாதம்.

விதவையானாலும் விவாகரத்து பெற்றாலும் அவர்கள் ஒரு திருமண பந்தத்தில் தம்மை ஒப்புக்கொடுத்தவர்கள். இந்தப் பெண் அப்படியல்ல. திருமணம் செய்துகொள்ளாத பெண் என்பதனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பெண்ணுக்கு வாடகைத்தாய் அமர்த்திக் கொள்ளும் உரிமை இல்லை என்று மறுத்துள்ளது உச்ச நீதிமன்றம். இந்தியாவினையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்தத் தீர்ப்பு.”

தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மேனாள் உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆன ஜெயந்திராணி தரும் விளக்கமும் தீர்வும் என்ன?

வழக்கறிர் ஜெயந்திராணி
வழக்கறிர் ஜெயந்திராணி

“திருமணம் செய்துகொள்ளாத அந்தப் பெண்ணின் உரிமை கோரலில், நம் திருமண பந்தமும் நம் சமூகத்தின் குடும்ப இறையாண்மையும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

நம் குடும்ப அமைப்பில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் ஒரு திருமண பந்தத்தில் இணைந்து வாழ்வதும், இல்லறத்தின் விளைவாகக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதும் எப்பவும் உவப்பானதே. அவர்களில் குழந்தைப்பேறு கிட்டாதவர்கள் தங்களின் வாழ்வில் பல்வேறு மருத்துவ முயற்சிகளுக்குப் பின்னர், மிகுந்த ஆலோசனைகளுக்குப் பின்னரே கணவன் மனைவி இருவரும் மனம் ஒப்பிதான் கடைசி முயற்சியாக வாடகைத்தாய் அமர்த்திக்கொள்ள முடிவெடுக்கிறார்கள்.

திரை நட்சத்திரங்களான நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர், சட்டப்படியான நடைமுறைகளைப் பின்பற்றித்தான், வாடகைத்தாய் வாயிலாகக் குழந்தைகள் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றனர். இருவரும் திருமண பந்தத்தில் தங்களை இணைத்துக்கொண்டவர்கள்.

இதையும் படியுங்கள்:
வாக்குவாதம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் எவை தெரியுமா?
வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற...

அடுத்து தத்து எடுத்துக்கொண்டு குழந்தைகளை வளர்ப்பது என்பதும் சட்டப்படி நம்மிடையே நடைமுறையில் இருந்து வருகிறது. சற்றே கடுமையாக இருந்து வந்துள்ள அந்தச் சட்டத்தினை சற்று மென்மை படுத்தியுள்ளனர். மேலும் சமீபத்தில் அதில் ஒரு சட்ட திருத்தம் வந்துள்ளது. அதாவது JJ Act  எனப்படும் இளம் சிறார் நீதிச் சட்டம் என்பதாகும். அந்தச் சட்டம் என்ன சொல்கிறது என்றால், திருமணம் ஆனவர்கள்தான் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்பதில்லை. திருமணம் செய்து கொள்ளாத ஒரு தனி நபர் ஆணோ, திருமணம் செய்து கொள்ளாத ஒரு தனி நபர் பெண்ணோ அவர்களும் விரும்பினால் சட்ட விதிகளின் துணை கொண்டு குழந்தையினைத் தத்தெடுத்து அவர்களும் வளர்க்கலாம் என அனுமதி அளித்துள்ளது அந்தச் சட்டம்.                

உலக அழகி பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென், திருமணம் செய்துகொள்ளாதவர். அவர் அந்தச் சட்டத்தின் துணை கொண்டுதான், ஒரு பெண் குழந்தையினைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். திருமணம் செய்து கொள்ளாத அந்தக் குறிப்பிட்ட நாற்பத்தி நான்கு வயது டெல்லி பெண் ஆனவர், அந்தச் சட்டத்தின் துணை கொண்டு ஒரு குழந்தையினைத் தத்தெடுத்து வளர்த்துக் கொள்ளலாம்.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com