மனிதர்களின் வாழ்க்கையில் அதிகப்படியான கருத்து பரிமாற்றம் பேச்சு வடிவில் தான் உள்ளது. அதுவும் குழந்தைகளாக இருக்கும்போது நாம் அவர்களிடம் அதிகமாக கருத்து பரிமாற்றம் செய்வது பேச்சு வடிவில்தான். குழந்தைகளின் மொழி திறனை மேம்படுத்துவதற்கு மிகச் சிறந்த ஒரு வழி எதுவென்றால் அது நிச்சயம் கதைகள் தான்.
சற்று சிந்தித்துப் பாருங்கள்... பெற்றோர்களாகிய நாம் நம் பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் படித்த எத்தனையோ பாடங்கள் நினைவில் இருந்து வெகு தொலைவில் சென்று இருக்கும். ஆனால் சிறு வயதில் நாம் கேட்ட கதைகளோ இன்று வரை கூட நமக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும். எனவே குழந்தைகளுக்கு வாழ்வியல் சார்ந்த விஷயங்களை கதைகளாக சொல்லும்போது அவர்களிடம் வாழ்க்கை திறனையும், மொழித்திறனையும் சிறப்பாக செயலாற்ற வைக்க முடியும்.
பேச்சு என்பது ஒரு மிகச்சிறந்த கலை. குழந்தைகளுக்கு பேசுதலுக்கான தேவை இருக்கும்போது தான் அவர்களால் ஒரு விஷயத்தை நன்கு கவனிப்பதில் ஆர்வம் செலுத்த முடியும். எனவே வளரும் குழந்தைகளுக்கு அதிகப்படியாக கதைகளை சொல்வது மிகவும் நல்லது. குழந்தைகளின் கற்பனை திறனை வளர்ப்பதற்கு கதைகள் ஒரு மிகச்சிறந்த ஆரோக்கிய சாதனமாய் இருக்கும்.
வளரும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் கதைகள் சொல்லும் போது குழந்தைகளின் குணநலன்களை கட்டமைக்கும் விதத்தில் கதைகளை சொல்வது மிகவும் சிறந்தது. ஏனெனில் வளரும் குழந்தைகளுக்கு அறிவுக்கு இணையாக வளர்க்கப்பட வேண்டிய விஷயங்களில் அவர்களின் குண நலன்களும் ஒன்று. குழந்தைகளிடம் நாம் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்கு ஏற்றார் போல் கதைகளை புனைந்து கூறுவது அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
எந்த ஒரு கதையையும் சொல்லும்போது அந்தக் கதையின் நன்மை மற்றும் தீமை ஆகிய இரு கோணங்களையும் குழந்தைகளிடம் கதைகளாக சொல்வது அவர்களுக்கு ஒரு செயலால் விளையும் நன்மை மற்றும் தீமைகளை பற்றி முழுமையாக புரிந்துகொளள உதவும்.
உதாரணமாக நாம் அனைவருக்கும் தெரிந்த காகம் நரி கதையை எடுத்துக் கொள்வோம்.
ஒரு பாட்டியிடம் இருந்து வடையை திருடிக் கொண்டு போன காகம் நரியின் சூழ்ச்சியில் அகப்பட்டு வடையை பறி கொடுப்பதாக நம்மிடையே காகம் நரி கதை சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இதே கதையையே சீன நாட்டில் காகம் ஒன்று பாட்டி வடை சுடுவதற்கு தேவையான சுள்ளிகளை பொறுக்கிக் கொடுத்து வடையை பெற்றுக் கொள்வதாக சொல்கிறது. இதன் மூலம் உழைக்காமல் எந்த ஒரு பலனையும் அனுபவிக்க முடியாது என்பதை நாம் அவர்களுக்கு புரிய வைக்க முடியும்.
காகம் வடையை சாப்பிட முற்படும்போது அங்கு வந்த நரி வஞ்சகத்தால் காக்கையை ஏமாற்றி வடையைப் பறித்துக் கொள்வதாக நமக்கு சொல்லப்பட்ட கதை முடிகிறது. ஆனால் இதையே சீன நாட்டில் வடையை பறிகொடுத்த காகம் கா...கா... என தன் இனத்தையே அழைத்து நரிக்கு ஒரு மிகப்பெரிய பயத்தை உண்டாக்கி விடுகிறது. பயந்து போன நரி அந்த வடையை கீழே போட்டு விட்டு ஓடி விடுவதாய் சொல்கிறது. இதன் மூலம் ஏமாறுவது எந்த அளவுக்கு தவறோ, அதே அளவுக்கு ஏமாந்து போவதும் தவறுதான் என்று போதிக்கப்படுகிறது.
குழந்தைகளிடம் கதை சொல்லும் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களை கதை சொல்ல வைப்பதும் குழந்தைகளிடம் இருக்கும் புரிதலை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். பேச்சு என்பது இரு வழிப்பாதை தான். பெற்றோர்களாகிய நாமே தொடர்ந்து கதை சொல்லிக் கொண்டிருப்பதை தாண்டி இடையிடையே அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து அவர்களையும் கதை சொல்ல வைத்து ஆர்வமாக கேட்கலாம். அவர்களின் வார்த்தைக்கு மதிப்பளித்து நாம் கதை கேட்கும் போது மனதளவில் குழந்தைகளின் தன்னம்பிக்கையும் மொழித்திறனும் மேம்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. குழந்தைகளின் மொழி திறனை வளர்ப்பதில் மிகப்பெரிய பங்காற்றுவதாக கல்வியாளர்கள் பரிந்துரைப்பதும் கதைகளே.
எனவே குழந்தைகளை நல்வழிப்படுத்தும் பெற்றோர்கள் தாங்கள் சொல்ல நினைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் கதைகளாக புனைந்து கூறுவது அவர்களை மாற்றுவதற்கு ஒரு மிகச் சிறந்த வழியாக இருக்கும். எனவே வளரும் குழந்தைகளுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதைகள் சொல்வது மிகவும் நல்லது!