கிறிஸ்துமஸ் மரமும்; கிறிஸ்துமஸ் கேரல் பாடலும்!

Christmas tree;  Christmas songs too!
Christmas tree; Christmas songs too!

வெயில், மழை, பனி என ஆண்டு முழுவதும் காலங்கள் மாறினாலும், நாம் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்காமல் வெளியே வந்து, உற்றார் – உறவினர்களுடன் கலந்து மகிழ பல உற்சவங்கள், பண்டிகைகள் ஆகியவைகள் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தனித்துவம் வாய்ந்தது.

மாதங்களில் மகத்துவம் வாய்ந்த மார்கழியில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை கிறித்துவர்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

தவிர, இயேசுநாதரின் பிறப்பினை அலங்காரக் குடில் அமைத்து, கிறிஸ்துமஸ் மரம் வைத்து, வண்ணமயமான செயற்கை நட்சத்திரங்களை வாயிலில் தொங்கவிட்டு, விருந்தோம்பல் செய்து, கிறிஸ்துமஸ் தாத்தா (Santa claus) மூலம் பரிசுகளை அளித்து மகிழ்கின்றனர்.

கிறிஸ்துமஸ் மரம் விபரம்:

கி.பி.10ஆம் நூற்றாண்டில், ஜெர்மனியில் வாழ்ந்த புனித போனிபேஸ் என்கிற பாதிரியார் கிறிஸ்துவ மக்களிடையே நிலவி வந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்தோடு, ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்தார். அவ்வாறு செல்கையில், ஓர் ஊரில், அங்கிருந்த ஓக் மரமொன்றினை மக்கள் வழிபடுவது கண்டு கோபமடைந்து, அதை வெட்டியதோடு, அதன் வேர்ப்பகுதியையும் அடியோடு பெயர்த்துப் போட்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார். மக்கள் வருந்தினர். திடீரென ஒரு சில தினங்களிலேயே ஓக் மரம் மீண்டும் அதே இடத்தில் முளைத்து வளர்ந்து முன்போலவே உயர்ந்து நிற்க, அனைவரும் ஆச்சரியமடைந்து இயேசுநாதரே மீண்டும் வந்துள்ளாரென எண்ணி வணங்கினர்.

பாதிரியார் புனித போனிபேஸ், மற்றைய ஊர்களில் தனது பிரசார வேலைகளை முடித்து, திரும்பும் வழியில், அப்புதிய ஓக் மரத்தின் வளர்ச்சியை அதே இடத்தில் கண்டு அதிசயித்தார். உடனே, மண்டியிட்டு ஜெபிக்க ஆரம்பித்தவர். இம்மரம் கிறிஸ்துவ வழிபாட்டில் உயிர்ப்பின் அடையாளமாக இருந்தபோதும், கிறிஸ்துமஸ் மரமென கூறப்படவில்லை.

கிறிஸ்துமஸ் தாத்தா
கிறிஸ்துமஸ் தாத்தா

பின்னர் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மார்ட்டின லூதர் எனும் ஜெர்மனிய பாதிரியார், டிசம்பர் மாத சமயம் பனிபடர்ந்த சாலையின் வழியே நடந்து செல்கையில் ஓக் மரங்களிடையே வெண்பனி படர்ந்திருந்த ஃபிர் (தேவதாரு) மரமொன்று அழகு தேவதையாக வெளிச்சத்தில் ஒளிர்வதைக் கண்டு பிறருடன் பகிர்ந்துகொண்டார். இதை தெய்வத் தரிசனமெனக் கருதினார். கிறிஸ்துமஸ்ஸிற்கு முன்தினம் தேவாலய காம்பெளண்டினுள் இருந்த ஃபிர் மரத்தை மெழுகுவர்த்தி ஏற்றி கூண்டுவிளக்குகளால் அலங்கரித்தார். எவர்க்ரீன் மரமெனக் கூறப்படும் ஃபிர் மற்றும் ஓக் மரங்கள் கிறிஸ்துமஸ் மரங்களாக உபயோகப்படுத்தப்பட்டன.

இயற்கையான மரங்கள் கிடைக்காதபோதும், செயற்கையான மரங்களை அநேகர் பயன்படுத்த ஆரம்பித்தனர். காரணம் அதற்கென தனிச்சிறப்பு இருந்தது.

கிறிஸ்துமஸ் மர சிறப்பு:

மரக்கிளைகளில் சிலுவையின் அடையாளம் காணப்படும்.

மரத்தின் முக்கோண வடிவம், இயேசுநாதரின் முப்பரிமாணங்களாகிய தந்தை, மகன், தூய ஆவி போன்றவைகளைக் காட்டும் விதத்தில் இருக்கும்.

தீய சக்திகள் அணுகாதிருக்க, வீட்டு முகப்பு அல்லது ஹால் போன்ற இடங்களில் இம்மரத்தை அழகாக அலங்கரித்து வைப்பது வழக்கம்.

பண்டிகை கால உற்சாகம் மேலும் அதிகரிக்கும்.

இதில் காணப்படும் நிறங்களாகிய ‘பச்சை’ நீண்ட ஆயுளையும், ‘சிகப்பு’ இயேசு பிரானின் குருதியையும், ‘தங்கம்’ செல்வத்தையும் குறிப்பிடுவனவை.

அமெரிக்காவில் இம்மரத்தினுள் சிறிய நகை ஒன்றை மறைத்துவைத்து அதைக் கண்டுபிடிக்கும் குழந்தைக்குப் பரிசளிக்கும் வழக்கமுள்ளது.

யேசுநாதரின் போர்வையை சிலந்தி நெய்து கொடுத்ததாக ஐதீகமென்பதால், போலந்தில், கிறிஸ்துமஸ் மரத்தில் சிலந்திகூடு இருக்கும். அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமென்ற நம்பிக்கை உள்ளது.

கேரல் பாடல்கள்:

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு சிறப்பு சேர்ப்பது கேரல் எனப்படும் கிறிஸ்துமஸ் பாடல்களாகும். இது குழுக்களாக சேர்ந்து பாடும் பஜனைப் பாடல்களின் ரகத்தைக்கொண்டது. 13ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாகிய கேரல் பாடல்கள் படிப்படியாக மத சம்பந்தப்பட்டவை களாக மாறின.

கேரல் பாடல்கள்
கேரல் பாடல்கள்stock.adobe.com

கிறிஸ்துமஸ் பண்டிகையின் மாண்பை பறைசாற்றும் வகையில், பிரபல பாடலாசிரியரும், கிறித்துவ மதத் தலைவருமான ஜான் ஆடிலே என்பவர் 25 கேரல் பாடல்களைப் பட்டியலிட்டார். வீடுகள்தோறும் இதை பாடிச் செல்லும் மரபு உருவானது. (நமது மார்கழி மாத அதிகாலை வீதி பஜனை மாதிரி).

இடையில், கேரல் பாடல்கள் மதக்கோட்பாடுகளை மீறுவதாக கூறப்பட, இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டன. பின்னர் சில வருடங்கள் சென்றபின், தடை நீக்கப்பட்டு, பொது இடங்களில் பாட அனுமதி வழங்கப்பட்டது. பிறகு வேறு பல பிரபல இசையமைப்பாளர்கள், அநேக கேரல் இசை வடிவங்களை உருவாக்கினர்.

தத்துவார்த்தத்தையையும், மகிழ்வையும் இரட்டிப்பாக்குவதில் கேரல் பாடல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல பாடல்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்றவைகளாக இருக்கின்றன.

‘கிறிஸ்துமஸ் மரம் வைத்து,

கிறிஸ்துமஸ் கேரல் பாடி,

யேசுகிறிஸ்துவை வணங்கி,

கிறிஸ்துமஸை வரவேற்போம்!

சாண்டாவிடமிருந்து பரிசுகள் பெறுவோம்!

கிறிஸ்துமஸ் கேக் சாப்பிடுவோம்!

ஹேப்பி கிறிஸ்துமஸ்!

மெர்ரி கிறிஸ்துமஸ்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com