செரிமானத்தைத் தூண்டும் கொத்தமல்லி விதை காபி!

செரிமானத்தைத் தூண்டும் கொத்தமல்லி விதை காபி!

வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் அடிக்கடி ஃபில்ட்டர் காபி அல்லது இன்ஸ்டண்ட் காபித்தூள் கலந்து காபி அருந்துவதும் உடல்சூட்டை அதிகரிக்கவே செய்யும். அதற்குச் சிறந்த மாற்றாக நாம் கொத்தமல்லி விதைக்காபியை முயற்சிக்கலாம். இது புதிது ஒன்றும் இல்லை. காலம்காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய அதே பழைய ரெசிப்பி தான். மிகவும் எளிதானது என்பதோடு அஞ்சறைப் பெட்டியில் எப்போதும் ஸ்டாக் வைத்திருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே இதைத் தயாரித்து விடலாம் என்பதால் பெரிதாக மெனக்கெடத் தேவை இல்லை.

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி விதை: 8 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்: 3 அல்லது 4 (தோல் நீக்கி நசுக்கி வைத்துக் கொள்ளவும்)

மிளகு: 1 டீஸ்பூன்

சுக்கு: ஒரு சிறு துண்டு

நாட்டுச் ச்சர்க்கரை: 6 டீஸ்பூன்

நாட்டுச்சர்க்கரைக்குப் பதிலாக பனங்கல்கண்டும் பயன்படுத்தலாம். மிக்ஸியில் அரைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது மல்லி விதைகளோடு கலந்து கொதிக்க வைத்து அருந்தலாம்.

செய்முறை:

மல்லி விதைகள், மிளகு, சுக்கு, ஏலக்காய் எல்லாவற்றையும் வெயிலில் நன்றாகக் காய வைத்து வெறும் வாணலியில் லேசாக வாசம் வரும் வரையில் வறுத்து எடுத்துக் கொண்டு ஆற விடவும். பிறகு உலர்ந்த பனங்கல்கண்டு சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதில் நாட்டுச் சர்க்கரை சேர்க்கப் போகிறீர்கள் என்றால் அதை அரைக்கத் தேவை இல்லை. மல்லி விதைகளைக் காய்ச்சும் போது தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் போதும்.

இரண்டு பேருக்கு மல்லிக்காபி தயாரிப்பது என்றால் மேற்கண்ட விதத்தில் அரைத்து எடுத்த கலவையில் இருந்து 2 டீஸ்பூன் தூளை எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு அதில் இரண்டு டம்ளர்கள் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். பனங்கல்கண்டு சேர்த்து அரைத்திருக்கிறீர்கள் என்றால் நாட்டுச் சர்க்கரை தேவை இல்லை.

இப்போது மல்லிக்காபியின் மணம் கமகமவென பக்கத்து வீடுகள் வரையிலும் கூட பரவி விடும்.

கொத்தமல்லி காபியின் நன்மைகள்:

செரிமானக் குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி, ஆஸ்துமா, சர்க்கரைநோய், வெள்ளைப்படுதல், சோம்பல் போன்ற பல பிரச்சனைகளுக்கு இது ஒரு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.

தற்போது கெட்ட கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கும் விஷயத்திலும் கொத்தமல்லி சிறப்பாகச் செயல்படுகிறது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

நமது வழக்கமான காபி பொடிகளுக்குப் பதிலாக இதை முயற்சியுங்கள் ஆரோக்யத்துக்கு ஆரோக்யம் உடல் நலனுக்கும் எவ்விதத் தீங்கும் செய்யாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com