அதிரசம் பாகு...
அதிரசம் பாகு...

அதிரசம் அட்டகாசம்!

ரு முறை தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்பாக, எங்க அண்ணியுடன் சேர்ந்து மார்க்கெட்டுக்கு சென்று தீபாவளிக்கு அதிரசம் செய்வதற்கான பெரிய மண்சட்டி ஒன்றும் மற்றும் இதர சாமான்களும் வாங்கி வந்தோம்.

பாத்திரம் வாங்கியாச்சு சரி. அதிரசம் செய்ய வேண்டுமே? அதற்கு பாகுபதம் தெரிய வேண்டுமே... என்ன செய்வது எப்படி செய்வது? என்று யோசித்தவேளையில் பக்கத்து வீட்டு அம்மா வந்து ‘எனக்கு ரொம்ப நல்லா செய்ய தெரியும் கீதாம்மா. நான் பாகு காய்ச்சி தரேன். நீங்க கடையில ஒரு கிலோ பச்சரிசிக்கு ஒன்னேகால் கிலோ வெல்லம் வாங்கிட்டு வாங்க. கூடவே ஏலக்காயை நன்கு பொடித்து வையுங்க. அரிசியை ஊறவைத்து, தண்ணீரை வடித்துவிட்டு, கல்லுரலில் போட்டு  இடித்து மாவாக்கி சலித்து வையுங்கள்’ என்று கூறினார். நாங்களும் அப்படியே செய்து வைத்திருந்தோம்.

பிறகு அவர், அவர்கள் வீட்டு வேலை எல்லாம் முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு எங்கள் வீட்டிற்கு வந்து, பெரிய மண்சட்டியை அடுப்பில் வைத்து பாகு காய்ச்ச தொடங்கினார். சுற்றி இருந்த குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் அப்பாடா... எப்படா இந்த அதிரசத்தை சுட்டு சாப்பிடுவது? முதலில் கிண்டி இறக்கட்டும். அந்த மாவை கொஞ்சம் சாப்பிட்டுவிட வேண்டும் என்று ஒரே ஆவலாக இருந்தார்கள். எனது அண்ணிக்கு பூரிப்பு தாங்க முடியவில்லை. இந்த வருடம் தீபாவளிக்கு நம்ம கையாலே அதிரசம் தட்டிவிடப் போகிறோம். இதுவரைக்கும் வெல்ல பலகாரம் செய்ததே இல்லை. எல்லாம் சீனியில்தான் என்று பெருமை பொங்க ஆவலோடு அதிரச பாகு வைப்பதை நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மட்டும்தானா? நாங்கள் அனைவரும் அடுப்பை சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்ததை காண கண் கோடி வேண்டும்.

ஒரு வழியாக பாகுபதம் வந்ததும் மாவை கொட்டி அகப்பையின் பின்பக்கத்தால் பக்கத்து வீட்டு அம்மா கிளறிக்கொண்டு, இவ்வளவுதான் பாத்தீங்களா கீதாம்மா அதிரச மாவு ரெடி ஆயிடுச்சு. இதுக்குப் போய் கவலைப்பட்டீங்களே என்று கூறிக்கொண்டே கிளற,  மண்சட்டி உடைந்துகொண்டு விறகு அடுப்பில் சிதற, சரி மீதமிருக்கும் மாவையாவது காப்பாற்றலாம் என்று சட்டியை பிடித்து இறக்கும் போது சட்டியில் ஓட்டை பெரிதாகி அப்படியே கொட்டிவிட்டது. 

இதைப் பார்த்துக்கொண்டிருந்த எங்கள் அனைவருக்கும் சப் என்று ஆகிவிட்டது. பக்கத்து வீட்டு அம்மாவோ பாவம். பரிதாபமாக விழிக்கிறார். எனது அண்ணியோ ‘எனக்கும் வெல்ல பலகாரத்துக்கும் ராசியே இல்லை போலும். இந்த வருடமாவது அதிரசம் செய்து தீபாவளி கொண்டாடலாம் என்று நினைத்தேன். இப்படி ஆகிவிட்டதே’ என்று கூற, அதிரசமாவை பதம் பார்க்க ஆசைப்பட்ட நாங்கள் எல்லாம் கொடுத்து வைத்தது இவ்வளவுதான் என்று எண்ணி தூங்க போய்விட்டோம்.

அதிரசம்
அதிரசம்

எனது அண்ணன் வந்து பார்த்துவிட்டு உடைந்த மண்சட்டியின் பாகங்களை எல்லாம் அப்புறப் படுத்திவிட்டு, ‘சமயத்துல இப்படி எல்லாம் நடப்பது இயல்புதான். அதற்காக ஒன்றும் செய்யமுடியாது. சாதாரண நாட்களில் இதுபோன்று செய்ய பழகிக்கொள். நன்றாக செய்யத் தெரிந்தபிறகு தீபாவளிக்கு என்று அதிரசம் பாகு வை. இதற்காக இப்பொழுது கவலைப்படாதே. எப்பொழுதும் போல் முறுக்கு, தட்டை, தேங்காய் பர்பி,

சோமாசி செய்து தீபாவளி கொண்டாடலாம்’ என்று கூறி சமாதானப்படுத்தினார்.

இதையும் படியுங்கள்:
தீபாவளி திருநாளன்று செய்யவேண்டிய பரிகாரங்கள்!
அதிரசம் பாகு...

இப்பொழுதும் தீபாவளி என்று வந்துவிட்டால் அதிரசம் மாவு கிண்டியாச்சா? என்று எங்கள் குடும்பத்தினர் ஒருவருக்கு ஒருவர் அண்ணியை கிண்டலடிப்போம். யாராவது நல்லா பழகிய மண் சட்டியில் அதிரச மாவு கிண்டினால், நீண்ட நாள் கெடாமல் இருக்கும் என்று கூறினால், ஆமாமா நாங்களும் கிண்டி இருக்கிறோம், என்று அந்த நாள் ஞாபகத்தை நினைவில்கொள்வோம்! 

குறிப்பு:

புத்தம்புதிய மண்சட்டி வாங்கிய உடனே அதிரசம் பாகு வைக்கக்கூடாது. நன்றாகப் பழகிய மண்சட்டியில் செய்தால் மேற்கூறிய தவறுகள் நடக்காது. ஆதலால், புதிதாக அதிரச மாவு கிளறுபவர்கள் இதை நினைவில் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com