
புத்தாடை ஜொலி ஜொலிக்க
புது வெடியை நான் வெடிக்க
தித்திக்கும் இனிப்புகளை
என் நாவும் ருசி பார்க்க
பந்தங்கள் புடைசூழ
சொந்தங்கள் சேர்ந்திருக்க
தீப ஒளி திருநாளை
மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க
கொண்டாட ஏங்குகிறது என் மனம்
ஆனால்,
உண்ண உணவுமில்லை
உடுத்த உடையுமில்லை
அணைக்க அன்னையுமில்லை
அரவணைக்க தந்தையில்லை
இருக்க இருப்பிடமில்லை
இல்லை என்ற சொல் மட்டுமே
நிறைய உண்டு எம் போன்று
வறுமையில் வாடும் சிறார்களுக்கு.
-நளினி ராமச்சந்திரன், கோவை.
------------------------------------------------------------------
மல்லிகையின் மணம்போல
மலரட்டும் தீபாவளி
மணப்பெண்ணின் வெட்கம் போல்
விலகட்டும் இருள் அரக்கன்
விடியட்டும் பொன்னான நன்னாளாம்
இத் தீபாவளித் திருநாள்
புனித நீராடி
புத்தாடை அணிந்திடுவோம்
தீயவை அழியவும்
நன்மைகள் பெருகவும்
தீபமேற்றி வணங்கிடுவோம்
சுற்றமும் நட்பும் சூழ்ந்து
சுவைத்திடுவோம் இனிப்புகளை
இந்நாள்போல்
எந்நாளும் பொன்னாளாக,
வழங்கிடுவோம் வாழ்த்துக்களை
வையகத்தார் அனைவருக்கும்!
-ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்.