காலையில் கண் விழிக்கும்போதே கைகளைத் தேய்ப்பது –பிறகு உள்ளங்கைகளை உற்றுப் பார்ப்பது. அவற்றைக் கண்களில் ஒற்றிக் கொள்வது என்பது சிலர் வழக்கமாகச் செய்துவரும் செயலாக இருக்கும். அறிந்தோ, அறியாமலோ அவ்வாறு செய்தாலும் அதன் பின்னணியில் ஓர் ஆழ்ந்த தத்துவம் அடங்கியுள்ளது. உள்ளங்கையில் உள்ள மேடுகள் ஏழு கிரகங்களுக்குரியவை ஆகும். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஓர் அதி தேவதை உண்டு.சில கிரகங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அதிதேவதைகள் உள்ளனர். அந்தந்த கிரகத்திற்குரிய அதிதேவதைகள் அவரவர்க்குரிய கிரகமேடுகளில் வாசம் செய்கிறார்கள்.
பசுவின் உடலில் தேவரும், மூவரும் லக்ஷ்மியும், ஒவ்வோர் அங்கமாகப் பிரித்து வாசம் செய்கிறார்கள் என்பது ஐதீகம். அது போலவே நமது உள்ளங்கையில் கிரக அதி தேவதைகள் வாசஞ்செய்கிறார்கள். அத்துடன் நம்மையும் வழி நடத்திச் செல்கிறார்கள்.
1. குருமேட்டில் நான்முகன் எனப்படும் பிரும்மாவும், தக்ஷிணாமூர்த்தியும்.
2. சனிமேட்டில் காலனும், சாஸ்தா எனப்படும் ஐயப்பனும்.
3. சூரியமேட்டில் சிவனும்.
4. புதன் மேட்டில் மகாவிஷ்ணுவும்.
5. செவ்வாய் மேட்டில் முருகன் எனப்படும் சுப்ரமணியரும்,
6. சந்திரமேட்டில் பரமேஸ்வரி எனப்படும் பராசக்தியும்.
7. சுக்கிர மேட்டில் மகாலக்ஷ்மியும் குடி கொண்டு நமக்கு அருள்பாலிக்கிறார்கள்.
இவ்வாறு கிரக தேவதைகள் குடி கொண்டுள்ள கோயில்களாகிய கிரகமேடுகளை உடைய உள்ளங்கை களைத் தெளிந்த மனத்துடன் விடிந்தும் விடியாத காலைப் பொழுதினில் பார்த்து கண்களில் ஒற்றிக் கொள்ளுவதன் மூலம் அனைத்து தெய்வங்களையும் ஒருசேர ஆராதிக்கிறோம். உண்மையான இறை பக்தர்களுக்கு இதை உணர்ந்த மாத்திரத்தில் உள்ளம் நெகிழும். மெய் சிலிர்க்கும். நெறிமுறையுடன் கூடிய இந்த தெய்வ வழிபாட்டைத் தத்துவார்த்தத்துடன் செய்தால் அதற்கு மேலும் பலன் அதிகம் ஏற்படும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது போல் உள்ளங்கை தரிசனம் பாப விமோசனம். எனப்படும்.
அதுமட்டுமல்ல இறைவன் முதல் ஞானிகள் வரை அனைவரும் கைகளை உயர்த்தி, உள்ளங்கையை விரித்து ஆசி கூறுவதும் இந்தத் தத்துவத்திற்குட்பட்டது போலும்! நவநாயகர்கள் நன்மை புரியட்டும் என்றே அவர்கள் வாழ்த்துவதாகக் கொள்ளலாம். அல்லவா? மேற்குறித்த தேவதைகளில் கணபதியையும் கலைமகளையும் விட்டு விட்டோமே என சிலர் நினைக்கலாம். ஆற்றங்கரை அண்ணல் எனப்படும் துதிக்கையோனுக்கும், வீணையைக் கையிலேந்திய கலைவாணிக்கும் நமது உள்ளங்கையில் இடமில்லாமலா போகும்! உயர்ந்த இடத்திலே இருந்து கொண்டு அவர்கள் எவ்வாறு அருள் பரிபாலிக்கிறார்கள் என்பதைப் பிறகு பார்க்கலாம்.
பொதுவாக உள்ளங்கை மேடுகள் ரோஜா நிறத்தில் இருக்க வேண்டும். அம்மேடுகளில் தாறுமாறான ரேகைகள் இருத்தல் கூடாது. கரும்புள்ளிகள், சிவப்புப் புள்ளிகள், திலகங்கள், மச்சங்கள் எனப் பலவிதமான குறிகள் இருந்தால் தனித்தனி பலன்கள் உண்டு. நமது சிந்தனை, அறிவு, ஆற்றல் அனைத்தும் எப்படிப்பட்டவை, அவைகளால் நமது கடந்த, நிகழ்கால, வருங்கால பலன்கள் எவ்வாறு இருக்கும், என்பதை இம்மேடுகள் மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டிவிடும். மேடுகளும், அதன்மேல் செல்லுகின்ற ரேகைகளும் மனித வாழ்வில் மகத்தான மாற்றத்தைச் செய்கின்ற ஆற்றல் படைத்தவை. மேடுகளின் அமைப்பு. ரேகைகளின் போக்கு, அவற்றிற்கேற்ப கிரகங்கள் நமக்களிக்கும் பலா பலன்கள் ஆகியவற்றையும் உங்கள் வாழ்க்கையின் எதிர்கால மர்மங்களையும் அவற்றின் மூலம் உணரலாம்.