தற்போது செல்போன் பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவிற்கு அதன் பயன்பாடு உள்ளது. செல்லுலார் எனும் தொழில்நுட்ப அடிப்படையில் தான் செல்போன்கள் இயங்குகின்றன. இது ஸ்பிரிட் ஸ்பெக்ட்ரம் டெக்னாலஜி எனும் எலெக்ட்ரானிக்ஸ் டெக்னிக் அடிப்படையில் வேலை செய்கிறது. இந்த அடிப்படை தத்துவம் முதன் முதலாக பயன் படுத்தப்பட்டது ராணுவ வேலைக்காகத்தான் .
ஓரிடத்திலிருந்து நீண்ட தூரத்தில் இருக்கும் ராணுவ தளவாடங்களை கையாள, செய்திகளை நேரடியாக சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்கவும், அனுப்பும் செய்திகளை யாராலும் இடையில் தடுக்க முடியாத படி அனுப்பவும் தான் இந்த தொழில்நுட்பம் பயன் படுத்தப்பட்டது. சரி இந்த தொழில்நுட்பத்தை முதன் முதலாக பயன்படுத்தி வெற்றி கண்டது யார் தெரியுமா? 1930 ல் பிரபல இருந்த ஹாலிவுட் நடிகை ஹெடி லாமர்.
ஆஸ்திரியா நாட்டின் வியன்னாவில்1914 இல் பிறந்தவர் ஹெடி லாமர். அவர் ஒரு வசதியான குடும்பத்தில் வளர்ந்தார். அவரது தந்தை ஒரு வங்கி இயக்குனர் மற்றும் அவரது தாயார் ஒரு பியானோ கலைஞர். 12 வயதிலேயே உள்ளூர் அழகி போட்டியில் வென்றவர். உலகின் அழகான முகங்களில் ஒருவராகக் கருதப்படும் ஹாலிவுட் பிரபலம் ஹெடி லாமர், ஒரு கண்டுபிடிப்பாளர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. லாமர் 2014 இல் தேசிய கண்டுபிடிப்பாளர்கள் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார்.
ஹெடி லாமர் ஒரு ஆஸ்திரிய-அமெரிக்க நடிகை மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். அவருடைய பணி புளூடூத் தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லாமர் எக்ஸ்டஸி, தி ஸ்ட்ரேஞ்ச் வுமன், சாம்சன் மற்றும் டெலிலா, மை ஃபேவரிட் ஸ்பை மற்றும் தி ஃபிமேல் அனிமல் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்த சாம்சன் மற்றும் டெலிலா திரைப்படம் ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம்.
பணக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்களுடன் பழகுவதை விட புதிதாக ஒன்றை உருவாக்குவதற்கு தனது நேரத்தை செலவிட விரும்பினார் லாமர்.அவருக்கு முறையான பயிற்சி இல்லை, ஆனால் கார்பனேற்றப்பட்ட பானத்தை உருவாக்க தண்ணீரில் கரைக்கக்கூடிய மாத்திரையை கண்டுபிடித்தார். அவர் போக்குவரத்து விளக்கையும் கண்டுபிடித்தார்.
லாமர் அவருடைய நண்பர் ஹாலிவுட் இசை அமைப்பாளர் ஜார்ஜ் ஆன்தீல்யை ஹாலிவுட் பார்ட்டி ஒன்றில் சந்தித்தபோது, தங்களிடையே ரகசியமாக பேசிக் கொள்வதற்காக ஒரு யோசனை உள்ளது என்றும் அது ராணுவ பயன்பாட்டிற்கும் உதவும் என்றும் தனது யோசனையை செயலாக்க உதவுமாறும் கேட்டுக் கொண்டார். காரணம் ஆன்திலும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் ஆர்வமுள்ளவர்.
ஆன்தீலுடன் சேர்ந்து, லாமர் இரண்டாம் உலகப் போரின் போது ஒரு அதிர்வெண்-துள்ளல் சமிக்ஞையை உருவாக்கினார், அதைக் கண்காணிக்கவோ அல்லது நெரிசலாக்கவோ முடியவில்லை. இது அடிப்படையில் நேச நாட்டு இலக்குகளை தகர்ப்பதற்க்கான ரேடியோ வழிகாட்டல் அமைப்பாகும்.
தங்களின் கண்டுபிடிப்பு யோசனையை எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அமைப்பிடம் சமர்பித்தனர். அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவர்களின் கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெற அனுமதி வழங்கியது MIT. 1941 ஆகஸ்ட் 11 ல் அவர்களுக்கு காப்புரிமை வழங்கப்பட்டது. அந்த காப்புரிமையை அவர்கள் வியாபார நோக்கில் விற்று இருந்தால் கோடி கோடியாக சம்பாதித்து இருக்க முடியும். ஆனால் அவர்கள் அதை அரசாங்கத்திடம் சமர்பித்தனர்.
அமெரிக்க நேவி படை லாமர் யோசனையை முதலில் நிராகரித்து விட்டது. இருப்பினும் மனம் தளராமல் லாமர், நேஷனல் கண்டுபிடிப்பாளர்கள் கவுன்சிலிடம் முறையிட்டு அதை அமலாக்க வலியுறுத்தினார். அதற்காக பணம் திரட்டி தருவதாக கூறினார். 1960 ல் லாமர் கண்டுபிடித்த SST (subject specific terminology) தொழில்நுட்பம் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க பென்டகன் 1962 ல் கியூபா போரில் இதை பயன்படுத்தியது.
இன்றைக்கு அனைவரின் கைகளிலும் தவழும் செல்போனை கண்டுபிடித்தவர்கள் யார் தெரியுமா? மோட்டரோலா நிறுவனத்தின் ஜான் எப் மிட்சல், மார்ட்டின் கூப்பர் ஆகிய இருவரும் சேர்ந்து முதல் கம்பியில்லா ரேடியோ ஒலி அலைகள் மூலம் செயல்படும் செல்போனை 1973ம் ஆண்டு தயாரித்தனர். அதன்மூலம் கம்பியில்லா செல்போன் தொழில் நுட்பத்துக்கு வழிவகுத்தனர்.இதற்கு அவர்கள் பயன்படுத்தியது லாமரின் தொழில்நுட்பத்தை தான். அப்போது அவர்கள் பயன்படுத்திய செல்போன் 2 கிலோ எடையுடன் இருந்தது.
1973 ம் ஆண்டு ஏப்ரல் 3 ம் தேதி நியூயார்க் நகரின் ஹில்டன் ஹோட்டல் வெளியே இருந்து மோட்டலா கம்பெனியின் ஜெனரல் மேனேஜர் மார்ட்டின் கூப்பர், அமெரிக்காவின் டெலிபோன் கம்பெனி தலைமை ஆராய்ச்சியாளர் ஆகியோர் இடையே செல்லுலார் தொழில்நுட்ப அடிப்படையில் உருவான முதல் செல்போன் மூலம் உரையாடல் நடந்தது. அப்போது அந்த செல்போன் ஒரு செங்கல் கல் அளவு இருந்தது. ஆரம்ப கட்ட செல்போன்களில் இன் கம்மிங் மட்டுமே இருந்தது.
1979 ம் ஆண்டு ஜப்பான் முதல் தலைமுறை மொபைல் நெட்வொர்க்களை அறிமுகப்படுத்தியது. 1980 ல் இது வியாபார நோக்கில் மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1983 முதல் எடை குறைவான செல்போன்கள் விற்பனைக்கு வரத்தொடங்கின
ஒரு கண்டுபிடிப்பாளராக நடிகை லாமரின் திறமை பற்றி பலர் அறிந்திருக்கவில்லை. தன் சொந்த வாழ்க்கையில் பல திருமணங்கள் செய்து அதில் தோல்வி கண்டவர். மூன்று குழந்தைகளுக்கு தாய். என்ற செய்திதான் தெரியும்.