
நம் ஊரு உறியடித் திருவிழா போன்று மெக்சிகோ நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. ஒரு மண்பானை நிறைய இனிப்புகள் நிரப்புவார்கள். அந்தப் பானையைக் கட்டித் தொங்க விடுவார்கள். குழந்தைகள் தடியால் அடித்துப் பானையை உடைக்க முயற்சி செய்வார்கள். பானை உடைந்ததும் இனிப்புகள் கொட்டும்.
பிரான்ஸ் நாட்டுக் குழந்தைகள் தங்கள் காலணிகளை வீட்டு வாசலில் கதவின் அருகே கிறிஸ்துமஸ் இரவு வைத்து விட்டுப் படுத்துக்கொள்வார்கள். தேவகுமாரனைக் காண அந்த வழியாகப் போகும் மூன்று அரசர்கள் வீட்டு வாசலில் நின்று இந்தக் காலணிகளில் பரிசுப் பொருள்களை நிரப்பி விட்டுப் போவார்கள் என்று நம்புகிறார்கள்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்து நாட்டுப திருமணம் ஆகாத பெண்கள் அந்தக் காலப் பழக்கம் ஒன்றை இன்றும் பின்பற்றி வருகின்றனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று இரவு பக்கத்தில் உள்ள கிணற்றைத் தேடிப் பெண்கள் போவார்கள். கிணற்றை நெருங்கியதும் மெழுகுவர்த்தி ஒன்றைக் கொளுத்திக்கொண்டு கிணற்றை எட்டிப் பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்போது தனக்கு வரப்போகும் கணவனின் முகம் கிணற்றுத் தண்ணீரில் தெரியும் என்று நம்புகிறார்கள். கணவன் முகம் தெரிகிறதோ, இல்லையோ ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பழக்கத்தை தவறாது கடைப்பிடிக்கின்றனர்.
இயேசுவின் காலத்திலேயே அவரது முதல் படம் வரையப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித லூக்காஸ் ஓர் ஓவியர். அவர் இப்படத்தை வரைந்தார். இயேசுவின் முப்பதாவது வயதில் வரையப்பட்ட அந்தப் படம் இன்றும் இத்தாலியில் புனித பாதலோமோ ஆலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இயேசு நாதரின் பெருமைகளை கேள்விப்பட்ட எடிசா நாட்டு அரசர் இயேசுவை தனது நாட்டுக்கு வரும்படி அழைத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள இயலாத இயேசு கிறிஸ்து தனது படம் ஒன்றை லூக்காஸ் மூலம் வரையச் செய்து அரசருக்கு அனுப்பி வைத்தார் என்பது வரலாறு.
இயேசு பிறந்த இடமான பெத்லஹேமில் உள்ள சர்ச் வண்ண வண்ணக் கொடிகளாலும் கண்ணைக் கவரும் அலங்காரங்களாலும் சொர்க்கத்தைப் பூமிக்குக் கொண்டு வந்திருக்கும். மிகப் பிரம்மாண்டமான குதிரை வீரர்களின் அணிவகுப்பு கிறிஸ்துமஸ் நாளன்று பெத்லஹேமையே கலக்கிவிடும். காவல் துறையினர் அரேபியக் குதிரைகளில் ஊர்வலத்திற்குத் தலைமை தாங்குவதுபோல் அணிவகுத்துச் செல்ல, அவர்களின் பின்னே கரிய குதிரைகளில் சிலுவையைச் சுமந்து வரும் வருவர். ஊர்வலத்தின் கடைசிப் பகுதியில் தேவாலயத் திருத்தொண்டர்களும், அரசு அதிகாரிகளும் அணிவகுத்து வருவர். ஊர்வலம் முடியும் இடத்தில் குழந்தை இயேசுவின் சிலை காணப்படும். அந்த இடத்தில் இருந்து பூமிக்குள் செல்லும் சுழற்படிகளுக்குள் இறங்கிச் சென்றால் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள குகையைப் பார்க்கலாம்.
ரஷ்யாவில் டிசம்பர் மாதம் முழுக்கவும் ஜனவரி ஆறாம் தேதி வரையும் கிறிஸ்தவர்கள் விரதமிருப்பார்கள். சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். பன்னிரண்டு அப்போஸ் தலர்களை நினைவு கூரும் விதமாக ஜனவரி ஆறாம் தேதிக்குப் பிறகு பன்னிரண்டு வகையான இரவு உணவு வகைகளைச் சாப்பிடுவார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா பிற நாடுகளில் சிறுவர் சிறுமியருக்காகப் பரிசுப் பொருட்களை அளிப்பார். ரஷ்யாவிலோ கிறிஸ்துமஸ் பாட்டி சிறுவர் சிறுமிகளுக்குப் பரிசுகளை அளிப்பார். கிறிஸ்துமஸ் பாட்டியின் பெயர் பாபுஸ்கா.
தாய்லாந்து நாட்டில் 2001ல் உலகின் மிகப்பெரிய இனிப்பு கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கினர். முழுக்க முழுக்க சாக்லெட்டால் ஆன இந்த கிறிஸ்துமஸ் மரத்தின் எடை 85 கிலோ, உயரம் 2.3 மீட்டர்.
பாரீஸ் நகரின் மிக முக்கிய ஆலயமான ‘நோத்தார்டாம் மாதா கோயில்’ கட்டி முடிக்க 170 ஆண்டுகள் ஆனது. கி.பி. 1163ல் ‘கல்லி’ என்பவரால் கட்ட ஆரம்பித்து கி.பி. 1330ல் கட்டி முடிக்கப்பட்டது. கோயிலின் வெளிப்புறத்தில் இருக்கும் கற்களில் மழை நீரோ, பனித்துளியோ பட்டால் அதில் ஒட்டாமல் தெரிவித்துவிடும் வகையில் கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பு.
கிறிஸ்துமஸின்போது பசுமையான மரத்தில் சிறு சிறு பொம்மைகள் வைத்து அலங்கரிப்பது வழக்கம். இந்த வழக்கம் ஜெர்மனியில் தோன்றியது. அரசன் ஆல்பர்ட் மூலமாக இங்கிலாந்துக்குப் பரவியது. முதன்முதலில் தேவதாரு மரத்தின் கிளையில்தான் அலங்கரித்தனர்.
இங்கிலாந்தியர்களின் கிறிஸ்துமஸ் மரத்தில் சிலந்தி மற்றும் சிலந்தி வலை இருக்கும். ஏனென்றால் குழந்தை இயேசுவுக்கு முதல் சமுக்காளத்தை சிலந்திதான் பின்னித் தந்ததாம்.
போலந்து நாட்டில் கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ணில் இந்நட்சத்திரம் தோன்றிய பிறகே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின்றன. அதுவரை சிறுவர்கள்கூட கிறிஸ்துமஸ் பட்சணங்களைப் புசிப்பதில்லை.
கிறிஸ்துமஸ் அன்று இங்கிலாந்தில் ‘கிறிஸ்து சுடர்’ என்ற பெயரில் ஒரு பெரிய மெழுகுவர்த்தி குடும்ப உறுப்பினர்கள் அனைவராலும் ஏற்றப்படுகிறது. பின் அந்த மெழுகுவர்த்தி வீட்டின் மூத்த மகனிடம் தரப்பட்டு, சுடர் ஒளி ஜனவரி 6ம் தேதி வரை பாதுகாக்கப்படுகிறது. இப்படிச் செய்தால் வீட்டுக்கு அதிர்ஷ்டம் வரும் என்பது நம்பிக்கை.
ஜப்பானியக் குழந்தைகள் ஸாண்டாக்ளாஸ் தாத்தாவை ஹோட்டியோஷோ என்பார்கள். ஹோட்டியோஷோ கடவுளுக்குப் பின்னாலும் கண்கள் இருக்கும். இதனால் எல்லாக் காலத்தில் எல்லாத் திசைகளிலும், எல்லாக் குழந்தைகளையும் அவரால் காண முடியம் என்பது நம்பிக்கை.