எம்ஆர்பி விலையை விட கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்கப்பட்டால்... ?

Maximum Retail Price
Maximum Retail Price
Published on

கடைகளில் எம்ஆர்பி விலையை விட கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்கப்பட்டால் பொதுமக்களாகிய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது இந்தப் பதிவு.

வணிக நிறுவனங்கள் பெருகி விட்ட இன்றைய நிலையில், நாம் எந்தப் பொருள் வாங்க வேண்டுமென்றாலும் கடைகளுக்கு நேரடியாகச் சென்றோ அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்தோ வாங்குகிறோம். நாம் வாங்கும் பொருள்கள் எதுவாக இருந்தாலும் அதில் எம்ஆர்பி விலை, தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் பயன்படுத்தும் கால வரம்பு தேதி பொறிக்கப்பட்டிருக்கும். பலரும் இதனை கவனிப்பதில்லை. ஒருசிலர் எம்ஆர்பி விலையை மட்டும் பார்க்கின்றனர். நாம் விலையை மட்டும் பார்க்கிறோமே தவிர எம்ஆர்பி என்றால் என்ன அர்த்தம் என்பது பலருக்கும் தெரியாது.

எம்ஆர்பி (MRP) என்பது ஒரு பொருளின் அதிகபட்ச விற்பனை விலையாகும். நாம் வாங்கும் ஒரு பொருளின் விலையானது தயாரிப்பு செலவு, போக்குவரத்து செலவு, ஏற்றுமதி செலவு, உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளரால் ஏற்படும் இதர செலவுகளையும் உள்ளடக்கி உள்ளது. நாட்டின் எந்த மூலையிலும் ஒரு பொருளின் அதிகபட்ச விற்பனை விலை இது தான் என்று நிர்ணயிக்கப்பட்டு விட்டால், அதற்கு மேல் கூடுதல் விலை வைத்து விற்கக் கூடாது. ஆனால், சில கடைகளில் அதிகபட்ச விலையைத் தாண்டியும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. பொதுமக்கள் பலரும் இதனைக் கண்டு கொள்வதில்லை. எம்ஆர்பி பற்றி தெரிந்த நபர்கள் கூட, 'என்ன செய்வது பொருள் தேவை' என்பதை மட்டும் நினைவில் வைத்து வாங்கிச் செல்கின்றனர்.

புகார் செய்யும் வழிமுறைகள்:

கடைகளில் பொருள்கள் எம்ஆர்பி விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை நீங்கள் அறிந்தால், அந்தக் கடை அமைந்திருக்கும் மாநிலத்தின் சட்ட அளவியல் துறையிடம் உடனே புகார் அளிக்கலாம்.

ஒரு நுகர்வோராக நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது தவறு நடப்பது உண்மை என அறிந்தாலோ 88000 01915 என்ற எண்ணிற்கு உங்களது புகாரை குறுஞ்செய்தியாக பதிவு செய்யலாம். இதுமட்டுமின்றி நேஷனல் கன்ஸ்யூமர் ஹெல்ப்லைன் எனப்படும் NCH செயலி மற்றும் UMANG செயலி போன்றவற்றிலும் உங்கள் புகாரை பதிவு செய்ய முடியும். இதில் NCH என்பது வழக்குக்கு முந்தைய முதல் படி ஆகும்.

கடைகளில் எம்ஆர்பி விலையை விட கூடுதலாக வசூலித்தால், நுகர்வோர் ஆன்லைனில் புகாரைப் பதிவு செய்ய https://consumerhelpline.gov.in/user/signup.php எனும் இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகவும் விலை உயர்ந்த நட்ஸ் எது தெரியுமா?
Maximum Retail Price

தேசிய நுகர்வோர் உதவி மையத்தை 1800-11-4000 மற்றும் 1800-11-1915 என்ற இலவச எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் நுகர்வோர் மையங்களிலும் புகார் அளிக்கும் வசதி உள்ளது.

எம்ஆர்பி விலையை விட அதிக விலையா என்று இனி நீங்கள் நொந்து கொள்ள வேண்டாம். மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி புகார் கொடுத்து தவறுகளைத் தடுக்க உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com