ஆம்பூரில் பிறந்த கோவிந்தம்மாள் மலேசியாவில் வசித்த போது நேதாஜியின் உரையால் கவரப்பட்டு தான் அணிந்திருந்த ஆறு பவுன் தங்க நகை மற்றும் தாய் வீட்டு சீதனமான ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தை நன்கொடையாக கொடுத்தவர். நேதாஜியிடம் போர் பயிற்சி பெற்று ஆயிரம் பெண்கள் கொண்ட ஜான்சி ராணி படைப்பிரிவில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றவர். அப்போது நடந்த போரில் கோவிந்தம்மாள் தலைமையில் பெண்கள் படை போரிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது.
கடலூரை சேர்ந்தவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். கைக் குழந்தையுடன் சிறைக்குச் சென்றவர். ஆங்கிலேயத் தளபதி நீல் என்பவரின் சிலையை கோடரியால் வெட்டி உடைக்க முயன்ற வீரப்பெண். சுதந்திரத்திற்கு பிறகு 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நற்பணிகள் செய்தவர்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த இவர் தேசபக்தரான கணவர் வழியில் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். தனது கணவருடன் கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டு ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை பெற்றார். ஆங்கிலேயருக்கு அஞ்சாமல், ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை கண்டித்து 1931 ஆம் ஆண்டு எழுச்சிமிகு உரையாற்றியவர். இவரது பாடல்களாலும் உரையினாலும் சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வு பெற்றவர்கள் அதிகம்.
மதுரையில் வசித்து வந்த இவர் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கு பெற்று ஆண்கள் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்த அடி உதை சிறை சித்திரவதை போன்றவற்றை அனுபவித்தவர். அயராமல் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டு, ஆங்கிலேயரை எதிர்த்தவர். காந்திஜியின் வார்த்தையை வேதவாக்காக கொண்டு வாழ்ந்தவர்.
உப்பு சத்யாகிரக போரில் சிறைசென்ற தமிழகத்தின் முதல் பெண் என்ற சிறப்பை பெறுபவர். பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக ஆங்கிலேயரை எதிர்த்து கடுமையாக போராடியவர். சைமன் குழு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டி போராடியவர். இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷருக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என முழங்கி ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்றவர். 1947 ஆம் ஆண்டு தமிழக சுகாதார அமைச்சராக 'தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர்' என்ற பெருமையை பெற்றவர்.
பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி, படிக்கும்போதே பகத்சிங்கின் வழக்குக்காக நிதி திரட்டிய பெருமைக்குரியவர். எம்.பி.பி.எஸ் படித்து சிங்கப்பூரில் ஏழைகளுக்காக மருத்துவமனை தொடங்கியவர். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவில் சேர்ந்து ஜான்சி ராணி படையில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். பெண்களின் அடையாளமான சேலை உடையையும் நீண்ட கூந்தலையும் தவிர்த்த முதல் வீரப்பெண். இந்திய அரசின் பத்மபூஷன் விருதும் பெற்றவர்.
மயிலாடுதுறையை பூர்வீகமாகக் கொண்டு தென்னாப்பிரிக்காவில் பிறந்த வள்ளியம்மை ஆங்கில கல்வி கற்றவர். காந்தியடிகள் தலைமையில் நடந்த சத்யாக்கிரக போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். "சொந்தமாக கொடி கூட இல்லாத இந்தியர்கள்" என ஏளனம் செய்த ஆங்கிலேய போலீசாரிடம், தன்னுடைய புடவையின் முந்தானையை காண்பித்து "இதுதான் எங்கள் நாட்டின் தேசியக்கொடி" என்று சூளுரைத்தவர். "பதினாறாம் வயதில் இறந்த இவரை போன்ற தியாகிகளால் தான் இந்திய சுதந்திர போராட்டம் ஊக்கம் பெறுகிறது" என்று காந்திஜியால் பாராட்ட பெற்றவர். தில்லையாடியில் இவரது நினைவகம் உள்ளது.