தன் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் 'தானமாக' கொடுத்த 100 வயது மருத்துவர்! யார் இவர்?

Doctor Lakshmi bai
Doctor Lakshmi bai Img credit: Odisha plus and pratidintv
Published on
Mangayar malar strip
Mangayar malar strip

தானமும் தர்மமுந்தான் இவ்வுலகைத் தழைக்கச் செய்பவை!

அடுத்தவருக்குத் தெரியாமல் வாழ்க்கையையே சமுதாய நலத்திற்காகத் தியாகம் செய்பவர்களும் உண்டு. ஐந்து, பத்தைக் கொடுத்து விட்டுத் தங்கள் பெயரைத் தாங்களாகவே தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களும் உண்டு. அவர்களாவது தங்கள் கையிலிருந்து கொடுப்பார்கள். இன்னுஞ்சிலரோ கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதன் மூலம் தங்கள் பெருமையை நிலைநாட்டிக் கொள்வார்கள்.

ஐந்து விரல்களும் ஒன்றாய் இருப்பதில்லை என்பது போலத்தான் இவ்வுலக வாழ்வும். பிறந்த இடம், வளரும் சூழல், நட்பு வட்டம் இவற்றையெல்லாம் பொறுத்தே ஒவ்வொருவரின் வாழ்வின் தடம் அமைகிறது.

நமது சமுதாயத்தில் பலவிதமான பணிகள் கொட்டிக் கிடந்தாலும், மருத்துப் பணிக்கு மட்டுமே மகத்தான இடமுண்டு. நோயால் கஷ்டப் படும் மனிதர்களுக்கு, கடவுளாகக் காட்சியளிப்பவர்கள் அவர்களே. பல நேரங்களில் எமனை எதிர்த்துப் போராடி, மனித உயிர்களைத் தக்க வைக்கும் தந்திரம் அறிந்தவர்களும் அவர்களே!

இவரும் ஒரு மருத்துவரே. பெண்களுக்கு மருத்துவத்துடன் மகப்பேற்றினையும் கவனிக்கும் மகப்பேறு மருத்துவர் (Gynecologist) இவர். டாக்டர் லட்சுமி பாய் என்பது இவர் பெயர். நமது இந்திய நாட்டில் எவ்வளவோ மகப்பேறு மருத்துவர்கள் உள்ளபோது இவரைப் பற்றி மட்டும் கூற என்ன காரணம் என்றுதானே யோசிக்கிறீர்கள். இருக்குது! நிறையவே இருக்கு!

மகப்பேறு மருத்துவத்தின் ஓர் உண்மையான முன்னோடியான இவர் எஸ்.சி.பி (SCB) மருத்துவக் கல்லூரியின் முதல் பேட்சில் (1945) எம்.பி.பி.எஸ் முடித்தவர். ஏறக்குறைய அரை நூற்றாண்டாக அரிவையரின் ஆரோக்கிய வாழ்வுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்து, பல தியாகங்களை மேற்கொண்டு, எம்.கே.சி.ஜி (MKCG) மருத்துவக் கல்லூரியில் பேராசிரியையாக 1986 ல் பணி ஓய்வு பெற்றவர்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஒரு நூறு ரூபாய் சமாச்சாரம்...
Doctor Lakshmi bai

தன் வாழ்நாளில் எவ்வளவோ பிணியாளர்களைக் காப்பாற்றி கரை சேர்த்த இவர், தக்க சமயத்தில் கான்சர் (Cancer) என்றழைக்கப்படும் புற்றுநோய்க்குத் தக்க மருத்துவத்தை அணுக முடியாததால் பல பெண்கள் தங்கள் வாழ்வை இழந்து, குடும்பத்தாரையும், குழந்தைகளையும் அனாதைகளாகத் தவிக்க விடும் அவல நிலைக்குத் தள்ளப்படுவதை அனுபவ ரீதியாக உணர்ந்தார். அந்த அபலைப் பெண்களை அப்படியே விட்டு விட மனம் வரவில்லை இவருக்கு.

வரும் காலங்களில் வாழும் பெண்களாவது அந்தக் கொடிய நோயிலிருந்து விடுதலை பெற்று முழுதாக வாழ வழி செய்ய எண்ணினார். என்ன செய்தார் தெரியுமா?

கடந்த 2025 டிசம்பர் ஐந்தாம் தேதி தனது நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடும் முன்பாக, தன் ஆயுட்காலம் முழுவதும் சம்பாதித்துச் சேர்த்த ரூ 3.40 கோடியை புபனேஸ்வரிலுள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்தத் தொகையைக் கொண்டு அங்கு பெண்களுக்கான புற்றுநோய் இயல் (Gynecological Oncology) பிரிவை ஏற்படுத்தி வருங்கால மருத்துவர்களுக்கு முறையான பயிற்சியை அளித்து, புற்று நோயால் பெண்கள் பாதிக்கப்படாததை உறுதி செய்ய வேண்டியுள்ளார்!

நூறு வயதைக் கடந்த இவர் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை இறைஞ்சுவோம். உண்மைதானே! இவரைப் போன்ற மருத்துவர்கள்தானே இவ்வுலகிற்குத் தேவை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com