

மழை, குளிர் காலங்களில் துணியைத் துவைத்து, காயப் போடுவதற்குள் ஒருவழியாகி விடுவோம். விட்டுவிட்டுப் பெய்யும் மழை, சூரியன் இல்லாத சூழ்நிலை என்று நாம் போட்ட துணி காய்வதற்கு ஒரு வாரம்கூட ஆகலாம். இதை எப்படிச் சமாளிக்கலாம்? (how to dry clothes indoors)
அனைவரும் கடைபிடிக்கும் விஷயங்கள்:
இந்தக் காலகட்டங்களில் நன்கு காற்றோட்டமான இடத்தில் துணிகளை உலர வைப்பது மிகவும் நம்பகமான முறைகளில் ஒன்றாகும். சூரிய ஒளி குறைவாக இருக்கும்போதுகூட சுற்றுச்சூழலில் கடந்து போகும் காற்று, துணியில் உள்ள ஈரப்பதத்தைக் கொஞ்சம்கொஞ்சமாக ஆவியாக்க(Evaporate) உதவுகிறது.
திறந்த ஜன்னல்களுக்கு அருகிலோ அல்லது திறந்தவெளி பால்கனிகளின் (Roof covered balconies) கீழ் ஆடைகளை காயப் போடுவதுகூட சில நேரங்களில் துணிகளைக் காய அனுமதிக்கிறது.
மழை பெய்துகொண்டிருக்கும் நேரங்களில் வெளிப்புறங்களில் துணியைக் காயப் போட முடியவில்லை என்றால், வீட்டின் கதவுகளைத் திறந்து வைப்பது அல்லது சீலிங் ஃபேன்களைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்கள் காற்று சுழற்சியை அதிகப்படுத்தி, ஆடைகள் உலர்வதைச் சற்று துரிதப்படுத்தும்.
சற்று வித்தியாசமான யோசனைகள்: மற்றொரு அணுகுமுறை ஈரத்தை உறிஞ்சும் பொருட்களைப் பயன்படுத்துவது. சீக்கிரம் காய வேண்டிய துணிகளை ஒரு அகலமான பருத்தி துண்டில் (Cotton towel) மேல் வைத்து, சிறிது நேரம் இறுக்கமாக மடக்கிக்கொள்ளுங்கள். இது ஈரத்துணியில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற உதவும். இறுதியில் அந்தத் துணிகளின் உலர்த்தும் நேரத்தையும் கணிசமாகக் குறைக்கிறது.
இதேபோல் காற்றோட்டமான ஜன்னல் பகுதி அல்லது அங்குள்ள அறைகளில் உள்ள தரையைச் சுத்தமாக துடைத்தபின் ஈரத்துணிகளைத் தட்டையாக விரித்து வைத்தால் (spreading clothes flat) அதில் உள்ள ஈரப்பதம் சமமாகக் காய்வதை உறுதி செய்கிறது.
வீட்டில் சிறிய அளவில் வரும் வெப்பச் சூழ்நிலைகூட நமக்குக் கைகொடுக்கலாம். சமையலறைப் பகுதியில் உருவாகும் வெப்பம் அல்லது கண்ணாடி ஜன்னல்கள் வழியாக சூரிய ஒளி ஊடுருவி வருவதுகூட சில நேரங்களில் ஈரத்துணிகளை உலர வைக்க உதவுகிறது.
ஆனால், அதற்கென்று அதிக வெப்பத்துடன் (Near fire) துணிகளை உலரவைக்கலாம் என்று கருதவேண்டாம். இந்த முறையிலும் துணிகளிலுள்ள ஈரத்தை ஆவியாவதை (Evaporate) சற்று துரிதப்படுத்துகிறது அவ்வளவுதான்.
ஒவ்வொரு சில மணி நேரத்திற்கும் துணிகளை திருப்பிப் போடுவது (changing the position) அதன் அனைத்து பக்கங்களும் காற்று படர்வதை உறுதி செய்கிறது; இது ஈரத்தினால் வரும் துர்நாற்றத்தையும் தடுக்கிறது.
இறுதியாக உட்புற ஈரப்பதத்தைக் (indoor humidity) குறைப்பது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. வீட்டின் உள்ளே துணியைக் காயப்போடுகிறீர்கள் என்றால் அதைச் சுற்றி உள்ள பொருட்களைக் காற்றை அடைப்பதுபோல் நெரிசலாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; இது அங்குள்ள காற்று சுழற்சியை (Air circulation) அதிகரிக்கும்.
இந்த எளிய சிந்தனைமிக்க நடைமுறைகள் இயந்திரங்கள் இல்லாமல்கூட சவாலான மழை, குளிர் பருவங்களில் துணிகளை உலர்த்த உதவுகிறது. இதற்கு நம்முடைய பொறுமை, சுற்றியுள்ள காற்றோட்டம் மூலம்தான் 100% சாத்தியமாகும்.