வெண்டைக்காய் சாப்பிடுங்கள்!

வெண்டைக்காய் சாப்பிடுங்கள்!
Published on

ற்புதமான காய்கறி வெண்டைக்காய். அதன் முழு சிறப்பை நாம் உணராமல், “வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும்” என்போம். ஆனால் ஆயுர்வேத, யுனானி மருத்துவமுறையில் வெண்டைக்காய் குறிப்பிடப்பட்டுள்ளது. பலவிதமான மசாலாக்கள் திணிக்கப்பட்டு, எண்ணெயில் பொரிக்கப்பட்டு வெண்டைக்காய் உண்ணப்படுவதால் பொதுவாக இதன் இயற்கைச் சத்துக்கள் நமக்குக் கிடைப்பதில்லை. உடலிலுள்ள செல்களையெல்லாம் ஒற்றுமைப் படுத்தக்கூடிய தன்மையுடையது வெண்டைக்காய்.

கால்சியம், இரும்பு, அயோடின் போன்ற தாதுப்பொருட்கள், கரோட்டீன், அஸ்கார்பிக் அமிலம் போன்ற வைட்டமின்கள் பெக்டின் போன்ற ஒட்டிக்கொள்ளும் தன்மையுடைய பொருளும் மாவுச் சத்து, கொழகொழப்பான சத்து போன்றவை வெண்டைக்காயில் அபரிமிதமாக இருக்கின்றன. இவ்வாறு பலவிதமான சத்துக்களைக் கொண்டுள்ளதால், மிக அதிக அளவில் நார்ச்சத்துள்ளதாக இருக்கிறது.

ஜீரண உறுப்புக்களைச் சரியான கண்டிஷனில் வைத்திருக்க உதவுகிறது. நார்ச்சத்து உடலில் சேரும் வேண்டாத பொருள்களை உடனுக்குடன் வெளியேற்ற ஜீரண உறுப்புகளுக்கு மிக உறுதுணையாக இருப்பது நார்ச்சத்துள்ள மலமிளக்கி.

நார்ச்சத்துக்களில் பலவிதங்கள் உண்டு. ஆனால் அடிப்படையான நார்ச்சத்துக்கள் இரண்டு. ஒன்று, ஸ்பாஞ்ஜ் போன்றது. இவ்விதமான நார்ச்சத்து ஸ்பாஞ்ஞைப் போலவே செயல்பட்டு நீர், கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால் போன்றவற்றை ஈர்த்துக்கொண்டு உடலைப் பாதுகாக்கிறது. இன்னொரு அடிப்படையான நார்ச்சத்து. நாம் குப்பையைக் கூட்டி சுத்தம் செய்ய உபயோகிக்கும் விளக்குமாறு போன்றது. விளக்குமாறு எவ்வாறு குப்பையைக் கூட்டித் தள்ள உதவுகிறதோ, அதுபோல, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களை, இவ்வகை நார்ச்சத்து விரைவாக வெளியேற்றுகிறது. பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைச் சமனப்படுத்தக்கூடியது நார்ச்சத்து.

வெண்டைக்காயில் மேலே கூறப்பட்டுள்ள, ஸ்பாஞ்ஜ் போன்ற நார்ச்சத்தும், விளக்குமாறு போன்ற நார்ச்சத்தும் உள்ளது. எனவே, வெண்டைக்காய், கொழுப்புச் சத்துக்கள், கொலஸ்ட்ரால் போன்றவற்றை ஈர்த்துக்கொண்டு விடுவதால் நாம் சாப்பிட்ட பிறகு, ஒரு திருப்தியான உணர்வு ஏற்படுகிறது.

இவ்வாறு பிரமிக்கத்தக்க தன்மைகளைக் கொண்ட வெண்டைக்காய் உஷ்ணப்படுத்தும்போது, சிதை வடைகிறது. அதனுடைய இயற்கையான சத்துக்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. வெண்டைக்காயின் கொழ கொழப்பை நீக்குவதற்காக, நிறைய எண்ணெய் விட்டு வெண்டைக்காயை வதக்குகிறோம். மசாலா நிறைத்து, எண்ணெயில் பொரித்து எடுக்கிறோம். இவ்வாறு சமைக்கப்படும் வெண்டைக்காய், இயற்கை நமக்கு அளித்துள்ள மலமிளக்கியான நார்ச்சத்தை இழந்துவிடுகிறது.

கூடியவரை வெண்டைக்காயை, அப்படியே பச்சையாகச் சாப்பிடுவது மிகச் சிறந்தது. பச்சையாக சாப்பிட முடியாதவர்கள் வாணலியில் ஒரு துளி எண்ணெய் விட்டு, நிமிடத்துக்குக் குறைவாக வதக்கினால் போதுமானது. நல்ல பச்சை நிறமாக உள்ள வெண்டைக்காய் குளோரோஃபில் நிறைந்தது. பச்சை நிறமாக  உள்ள பிஞ்சு வெண்டைக்காயை, பொடியாக நறுக்கி, தயிர் கூட்டி அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்து உண்ணலாம்.

பொதுவாக நாம் வெண்டைக்காயின் காம்பு பகுதியை வெட்டி எறிந்து விடுகிறோம். தோசை மாவு தயாரிப்பில் உளுத்தம் பருப்புக்குப் பதிலாக இக்காம்புகளைப் போட்டு அரைத்துப் பயன்படுத்தலாம்.

வெண்டைக்காய் முற்றியதாக இருந்தால் எறிந்துவிட வேண்டாம். உரித்து உள்ளேயிருக்கும் விதைகளை உலர வைத்து, எந்தவித சட்னியோடும் சேர்த்து அரைக்கலாம். உலரவைத்த விதைகளைப் பொடித்துக் கஷாயம் செய்து குடித்தால் சளி, ஜுரம் போன்றவை குணமாகும். சிறுநீர் கழிப்பது பிரச்னையாக இருப்பவர்களுக்கு  இக் கஷாயம் ஒரு வரப்பிரசாதம் – குடித்தால் தாராளமாக சிறுநீர் கழியும். வெண்டைச் செடியின் வேரை நன்றாகக் கொதிக்க வைத்து நீரைக் குடித்தால் ரணம் ஆறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com