எங்க ஊரு SUPER WOMAN - 1 அறிமுக அணிவகுப்பு!

எங்க ஊரு SUPER WOMAN
எங்க ஊரு SUPER WOMAN

சாதனைப் பெண்மணி - 1 : கீதா

அறிமுகப்படுத்தியவர்: ஆர்.மீரா

R.Meera
R.Meera

அறிமுக உரை:

கீதா வயது 27. பணி - சென்னை மாநகராட்சி ‘துப்புரவு பணியாளர்’

சென்னை முகலிவாக்கம் பகுதியில் துப்புரவு பணியாளராக பணியாற்றும் கீதா, பணி மீது அவர் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக தன் 3 மற்றும் 8 வயது பெண் குழந்தைகளுக்கு தேவையான உணவு மற்றும் பிற வீட்டு வேலைகளை காலை 3 மணிக்கே எழுந்து முடித்துவிட்டு மணப்பாக்கத்திலிருந்து முகலிவாக்கத்திற்கு வேலைக்கு வந்து விடுவார். மேலும், அவருடன் சேர்த்து 21 பணியாளர்கள் வண்டி ஓட்டுவதாகவும், அதில் தான் மட்டுமே பெண் மற்ற அனைவரும் ஆண் என்பதில் பெருமை கொள்வதாகவும் கூறுவார். அவர் தன் வேலை மீது எப்படி அக்கறை கொண்டுள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டு தினமும் காலை 7 மணிக்கு எங்கள் பகுதியில் இருப்பது, நேரம் தவறாமை, முகம் கோணாமல் புன்சிரிப்போடு அணுகும் முறை மற்றும் வேலை மீது அக்கறை. உடல்நிலை சரியில்லாமல் போனாலும், மழைக்காலமானாலும் தன் கடமையிலிருந்து தவறமாட்டார்.

இதுபோல் தான் கடமையாற்றுவதற்கு தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரின் ஒத்துழைப்பே முக்கிய காரணம் என்று சொல்லுவார். மேலும், தன்னால் முடிந்தவரை மக்களுக்காக சேவை செய்யும்போது அவர்களிடமிருந்து வரும் ஒரு பாராட்டே தனக்கு மனநிறைவு தருவதாகவும் கூறுவார்.

இது போன்ற சேவை செய்யும் பணியாளர்களை நாம் பாராட்டினால் அவர்களுக்கு மிகுந்த ஆர்வத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கும். அவர்களைப் போற்றுவோம், பாராட்டுவோம், மரியாதை செலுத்துவோம்.

Geetha
Geetha

சுய அறிமுக உரை:

மகளிர் தினத்தன்று மங்கையர் மலர் நடத்திய போட்டியில் முதல் சுற்றில் என்னைத் தேர்வு செய்தமைக்கு முதலில் என்னுடைய நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களைப் போன்றவர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி சிறப்பித்தமைக்கு என்னுடைய நன்றிகள் பல. இதுபோல எங்களை உற்சாகப்படுத்துவதினால் என்னுடைய பணியை மேலும் சிறப்பாகச் செய்ய இயலும். நான் சென்னை மாநகராட்சியில் 2 வருடமாக சிறப்பான பொதுப்பணியை மகிழ்ச்சியுடன் செய்துவருகிறேன்.

இப்பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு என் குடும்பம் மற்றும் கணவரின் ஒத்துழைப்பே காரணம். என்னுடன் சேர்த்து என் பகுதியில் 22 துப்புரவு பணியாளர்களில் நான் ஒருவர் மட்டுமே பெண் என்பதில் பெருமைகொள்கிறேன்.

மேலும், என்னால் முடிந்தவரை மக்களுக்காக சேவை செய்யும்போது அவர்களிடம் இருந்து ஒரு சிறிய பாராட்டைப் பெறும்போது அது மகிழ்ச்சியையும் மன நிறைவையையும் தருகிறது. என் இரு பெண் குழந்தைகளையும் நன்கு படிக்கவைத்து வேலையில் அமர வைக்க வேண்டும் என்பது எனக்கும் என் கணவருக்கும் குறிக்கோள்.

இந்த சாதனைப் பெண்மணிகளின் அணிவகுப்பில் 'SUPER WOMAN' யார் என்பது இறுதிப் பதிவாக ஏப்ரல் 8 அன்று வெளியிடப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com