எங்க ஊரு SUPER WOMAN
எங்க ஊரு SUPER WOMAN

எங்க ஊரு SUPER WOMAN - 3 அறிமுக அணிவகுப்பு!

சாதனைப் பெண்மணி - 3 : பிரியா வெங்கடேசன்

அறிமுகப்படுத்தியவர்: புனிதா பாண்டியன்

Punitha pandiyan, Priya Venkatesan
Punitha pandiyan, Priya Venkatesan

அறிமுக உரை:

சீரழிவுக்கான எல்லாக் கதவுகளையும் திறந்தே வைத்திருக்கும் செல்போனையும் இன்டர்நெட்டையும், ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி அனைத்துப் பெண்களுக்கும் முன்மாதிரியாகச் சேவையாற்றிக் கொண்டிருக்கும் கிராமத்துப் பெண்... ப்ரியா வெங்கடேசன்.

நலிந்து வரும் பழம்பெரும் கலையான பிளாஸ்டிக் வயர் கூடை பின்னுதலில் தொடங்கி, உலகளவில் பல புதுமையான கலைப் பொருட்களை முதன்முறையாக உருவாக்கியதோடு, அவற்றை அனைவருக்கும் சொல்லிக்கொடுத்து, உலகெங்கும் உள்ள இல்லத்தரசிகள் அவரவர் வீட்டிலிருந்தபடியே வருமானம் பெற வழிகாட்டிக் கொண்டிருக்கும் இவர், வெறும் பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Channel Screenshot
Channel Screenshot

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டத்தின் கடைக்கோடி கிராமமான, மேல்சீசமங்கலம் எனும் ஊரில் வசிக்கும் திருமதி. ப்ரியா வெங்கடேசன், கொரோனா காலத்தில் தனக்குத் தெரிந்த கிராமப்புறப் பெண்களுக்கு இலவசமாக, பிளாஸ்டிக் வயரில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு முறைகளைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தபோது, வெளியூர்களிலிருந்தும் அழைப்புகள் வரவே, பெண்களின் சுயசார்பை ஊக்குவிக்கும் பொருட்டு, ‘Priya's Lifestyle’ எனும் யூடியூப் சானலை (லிங்க்: https://youtube.com/@PriyasLifestyleV?si=dM9WHsR1VhQGou4W) இவராகவே தொடங்கி, உலகில் இதுவரையில் யாருமே உருவாக்கிடாத ஏராளமான புதுப்புதுப் பொருட்களை முதன்முறையாக உருவாக்கி, அதன் செய்முறையை விளக்கி வந்தார்.

உலகநாடுகள் பலவற்றிலிருந்தும் ஏராளமான பயனாளிகள் அளித்துவரும் ஆதரவினால், மூன்றே ஆண்டுகளில், சுமார் 64000 சப்ஸ்கிரைபர்களுடன் சேவையாற்றி வருகிறது, ‘Priya's Lifestyle’ எனும் இவரது யூடியூப் சேனல்.

Social Activities
Social Activities

இவருடைய இச்சேவையைப் பயன்படுத்தி ஏராளமான பெண்கள் பிளாஸ்டிக் வயர் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து தங்களின் குடும்ப வாழ்வாதாரத்தைப் பெருக்கி வருகின்றனர். தனக்குக் கிடைக்கும் வருமானத்தை, அரசு நூலகம் மற்றும் அரசுப்பள்ளிகளுக்குத் தேவைப்படும் வசதிகள் செய்து தருதல், கலை மற்றும் இலக்கியப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்குதல்... எனப் பெரும்பாலும் பொதுச்சேவைகளுக்கே செலவிட்டு வருகிறார்.

Kolam Competition, Getting Prize
Kolam Competition, Getting Prize

வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக, ஒரு போட்டியின்போது வெற்றியாளர்களின் வீட்டைத் தேடி, மதுரை, பொள்ளாச்சி, சோழவந்தான் என.., அந்தந்த ஊர்களுக்கே நேரில் சென்று பரிசளித்து அவர்களைப் பெருமைப்படுத்திய சம்பவமும் நிகழ்ந்ததுண்டு.

பிரியாவின் பிறந்தவீட்டிலும் புகுந்த வீட்டிலும், கைத்தறிப் பட்டுச்சேலை நெசவுதான் பாரம்பரியத் தொழிலாக இருந்தது. அவரது மாமனாருக்கு இரண்டு மனைவிகள். மாமனார் இறந்தபின்பு, இரண்டு மாமியார்களையும் அரவணைத்து ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருவது, எந்த தொலைக்காட்சித் தொடர்களாலும் கற்பனை செய்ய முடியாத உண்மை நிகழ்வு !      இந்திய ரயில்வே ஊழியரான இவரது கணவர் வெங்கடேசன், விழுப்புரத்தில் பணிபுரிந்து வருகிறார்.

ப்ரியாவின் இரண்டு குழந்தைகளும் அரசுப்பள்ளியில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற, எந்த வசதி வாய்ப்புகளுமில்லாத கிராமப்புறப் பெண்ணின் திறமையையும் சேவையையும் பாராட்டி ஊக்குவிப்போம்.. நன்றி!

Priya Venkatesan Family
Priya Venkatesan Family

சாதனைப் பெண்மணி - 3 : பிரியா வெங்கடேசன்


சுய அறிமுக உரை:

நான் பிரியா வெங்கடேசன். என் பெற்றோருக்கு, நாங்கள் மூவரும் பெண்கள் என்பதால், ஆண்குழந்தை இல்லாத சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பர். அது அபத்தமெனப் புரியவைக்க மற்றுமொரு வாய்ப்பளித்த கல்கி குழுமத்திற்கு நன்றி.

பத்து கிலோமீட்டர் சுற்றளவைக் கடந்து எங்கள் ஊருக்கு வழி கேட்டாலே பதில் சொல்ல முடியாததொரு பின்தங்கிய கிராமத்திலிருந்து தொடங்கிய என் கலைப்பொருள் உருவாக்கம், இன்று மொழிகள் – மாநிலங்கள் கடந்து பல வெளிநாடுகளிலும் பார்வையாளர்களைக் கொண்டிருப்பதில் பூரிப்படைகிறேன்.

சப்-டைட்டில் கூடப் போடாமல் தமிழில் மட்டுமே பேசினாலும் இத்தனை பேர் என் சானலைத் தொடர்வது நம் தமிழ் மொழிக்கான பெருமை என்றே கருதுகிறேன்.

weaving plastic wire baskets, Environmentally friendly products
weaving plastic wire baskets, Environmentally friendly products

எனக்கு வயர்கூடை பின்ன, முதன்முதலில் கற்றுத்தந்தது அம்மாதான் என்பதால், என் வளர்ச்சியில் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

பிளாஸ்டிக் வயர்களுக்கு மாற்றாக, இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டுமென்பது என் கணவரின் நீண்டநாள் கோரிக்கை. விரைவில் வாழைநார், பனை மற்றும் தென்னை ஓலைகளைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் இக்கலையை மேம்படுத்தப் போகிறேன்.

இந்த சாதனைப் பெண்மணிகளின் அணிவகுப்பில் 'SUPER WOMAN' யார் என்பது இறுதிப் பதிவாக ஏப்ரல் 8 அன்று வெளியிடப்படும்.

logo
Kalki Online
kalkionline.com