எங்க ஊரு SUPER WOMAN - வெற்றியாளர்!

Enga ooru super woman contest Winner
Enga ooru super woman contest Winner

நடுவர் உரை:

Padmini Pattabiraman
Padmini Pattabiraman

மங்கையர் மலர் அறிவித்த சூப்பர் உமன் போட்டிக்கு வந்திருந்த கட்டுரைகள்

அத்தனையுமே முத்தானவை.

அவற்றில் குறிப்பிட்டிருந்த மகளிரின் இமாலய சாதனைகளைப் புகழ்வதா, அல்லது,

ஆர்வத்தோடு அவர்களை அறிமுகம் செய்த மங்கையரைப் பாராட்டுவதா...

திக்குமுக்காடிப்போனேன்...

ஒவ்வொருவரும் சளைக்காமல் தாங்கள் சாதிப்பதோடு அல்லாமல், மற்ற பெண்களின் வளர்ச்சிக்கும் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கும் எப்படியெல்லாம் உதவி வருகிறார்கள்..?

அந்த அடிப்படையில்தான் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன.

,துப்புரவு வண்டி ஓட்டி வரும் 21 பேரில் ஒரே பெண்ணாக, புன்சிரிப்புடன் கடமை தவறாத துப்புரவுப் பணியாளர் கீதா,

பெண்களுக்கு பிளாஸ்டிக் கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுத்தந்து, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பிரியாவெங்கடேசன்

ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் நிறுவி கல்விப் பணியாற்றி வரும்

பிரேமா சௌத்ரி,

சுற்றுச் சூழலை பாதிக்காத பொருட்களால், பைகள் உட்பட பல பொருட்கள் தயாரித்து உலகளவில் விற்பனை செய்யும் குளோரி,

எண்ணற்ற சமூகப் பணிகள் செய்து வரும் திருச்சியின் சிங்கப் பெண்மணி சுசீலா மாணிக்கம்,

அபாக்கஸ் பயிற்சி மையம் மூலம் சமூகத் தொண்டாற்றி வரும் சத்யவதி...

இன்னும் எத்தனையோ சாதனைப் பெண்மணிகள்..

ஒருவருக்கொருவர் சாதனைகளில் சளைத்தவர் இல்லை என்றாலும் திருமதி .குளோரி அவர்களைப் பற்றி அறிந்த போது எனக்கு பெரும் வியப்பு ஏற்பட்டது

திருநெல்வேலியில் ஒரு சிறு இடத்தில் தாம்பூலப் பைகள், நினைவுப்பரிசுகள் செய்யத் தொடங்கி, பின் பிளாஸ்டிக் தடைச் சட்டத்தால் ,பல லட்சம் முதலீடு செய்த தொழில் நசிந்து போக,

மறு சுழற்சி முறைகளை முயற்சித்து, அதிலும் தோல்வியைத் தழுவியவர்,

பல நஷ்டங்கள்... இன்னல்கள்.

சற்றும் நம்பிக்கை குறையாமல் ,

பத்தாண்டுகளில் இன்றுபாளையங்கோட்டையில், பெரிய விசாலமான இடத்தில்,

“நியூ எர்த் ப்ராடக்ட்ஸ்” என்ற நிறுவனத்தைத் தொடங்கி 15 பெண்களுக்கு மேல் வேலை வாய்ப்பு உருவாக்கியிருக்கிறார் குளோரி.

பருத்தித் துணிகள், சணல் இவற்றால்,

ஸ்கூல் பேக், லேடீஸ் ஹேண்ட்பேக், மேக்கப்கிட், ஆபீஸ் பைல் கவர்கள்,மொய்க்கவர்கள்

என கிரியேட்டிவாக யோசித்து உருவாக்குவதால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளார்.

பல வெளி நாடுகளுக்கும் இவை ஏறுமதி ஆகின்றன. இதன் மூலம் நாட்டின் அன்னியச் செலாவணி கிடைக்கிறதல்லவா?

தோல்விகளால் துவண்டு விடாமல், நாட்டிற்கும், இயற்கைக்கும், கூட இருக்கும் மகளிருக்கும் உதவும் திருமதி.குளோரி என்ற தன்னம்பிக்கைப் பெண்மணி, அவர்கள் முதலாவதாக இடம் பிடித்திருக்கிறார்.

போட்டியில் கலந்து கொண்ட அத்தனை பேரையும்,

அவர்களை அறிமுகம் செய்த நல்ல உள்ளங்களையும் மங்கையர் மலர் வாழ்த்தி

பூங்கொத்து அளிக்கிறது...

- பத்மினி பட்டாபிராமன்

வெற்றி பெற்ற சாதனைப் பெண்மணி : குளோரி

அறிமுகப்படுத்தியவர்: என்.கோமதி

Enga ooru super woman contest Winner Glory
Enga ooru super woman contest Winner Glory

அறிமுக உரை:

"எங்க ஊரு Super woman" போட்டியின் தலைப்பைப் பார்த்ததும் மனசு கேட்டது நீ கொண்டாடும் Super woman ‘Eco friendly Glory’தானே?" "அட..ஆமால்ல…"

யோசிக்க. மளமளவென கட்டுரை ரெடியாகிவிட்டது.

பத்து வருடங்களுக்கு முன், குடும்ப நண்பர் சொன்னதற்காக என் கணவரின் மணிவிழா தாம்பூலப் பைகளை குளோரியிடம் ஆர்டர் கொடுத்தபோதுதான் அறிமுகமானார்கள். நான் சந்தித்தபோது, குடோன், தயாரிப்பு, பேக்கிங், ஆபீஸ்ரூம் என எல்லாமே ஒரு சின்ன இடத்தில் இருந்துதான் தொழில் நடத்திக்கொண்டிருந்தார்கள்.

நேர்த்தியான வேலையில், தரமான மெட்டீரியலில் பைகள் பிடித்துப்போகவே, நானே மற்றவர்களுக்கு சிபாரிசு செய்ய, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடன் நெருங்க, தன் கீழ்பணிபுரிபவர்களை கையாளும் லாவகம், விற்பனையில் சந்தித்த பிரச்னைகளை சாதூர்யமாய் சமாளித்த விவேகம் என பல விஷயங்கள் என்னை வியக்க வைத்தன. படிப்படியாக முன்னேறி, இன்று பாளையங்கோட்டையில் விசாலமான கட்டிடத்தில், 15 தொழிலாளர்களுக்கு அனுசரனையான முதலாளி அம்மாவாக ஓடிக்கொண்டிருக்கும் குளோரியை நினைத்துப் பெருமிதம் அடைகிறேன்.

Enga ooru super woman - Glory
Enga ooru super woman - Glory

நியூ எர்த் புராடக்ட்ஸில் உற்பத்தியான சணல் தயாரிப்புக்களால் திருப்தியான வாடிக்கையாளர்களின் ஆதரவில், அதிக அளவில் உற்பத்தியாகி மாநிலம் தாண்டி மட்டுமல்ல… ஸ்ரீலங்கா, மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என கடல் தாண்டி பயணித்து, விற்பனை வளர்ந்தது. சில மாதங்களுக்கு முன், விற்பனையை அதிகரிக்க ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பார்ட்னர்ஷிப்பில் இணைந்து, திசையன் விளையில் ஆரம்பித்த இரண்டாவது யூனிட் தொய்வின்றி போய்க்கொண்டிருகிறது.

இந்த நிலையை அடைய குளோரி சந்தித்த சங்கடங்கள் நிறையவே. முப்பது வயது வரை இயல்பாக ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. தானும் உழைத்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்குமென உணர்ந்ததும், சுய தொழில் செய்யும் நோக்கத்துடன் தொழில் செய்ய  நுழைந்தார்.  சிரமப்பட்டு பணத்தை திரட்டி பல லட்சம் பெறுமான மிஷின் வாங்கி தொழிலைத் தொடங்கினார். முதலில், திருமணம் மற்றும் கம்பெனி பங்ஷன், குடும்ப விழாக்களின் தாம்பூலப்பை, மெமன்டோ பேக் என்று  தேவையறிந்து செய்துத் தர  முன்வந்தார்.   

ஓரளவு பிடிபட்டு காலூன்றும் நேரம். பிளாஸ்டிக் தடைச் சட்டத்தால் மூலப்பொருள் தட்டுப்பாடாகிவிட்டது. மறுசுழற்சி நெகிழியில் தயாரான பைகள் எனப் போராடி முயற்சி செய்தும் தோல்வியே சந்தித்தார். மனசை தேற்றி, மாற்றுத் தொழிலை சிந்திக்கும்போது, மின்னிய ஸ்பார்க் தான் New Earth Products என்ற ஐடியா. யோசித்ததில் ஐடியா பிடித்துப்போகவே, சமூக நலன் கருதி, தன் தொழிற்கூடத்தில்  சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத மெட்டீரியல்களில்தான் உற்பத்திகள் நடக்க வேண்டுமென முடிவு... இல்லை... சபதம் எடுத்தார். அந்த சபதத்தை இன்று வரை கடைபிடிக்கிறார். அவருக்கு ராயல் சல்யூட்.

தாம்பூலப் பைகள் பருத்தி துணியிலும், சணலிலும் தயாராகின்றன.ஸ்கூல் பேக்,லேடீஸ் ஹேண்ட்பேக்,மேக்கப் கிட், ஆபீஸ் பைல் கவர்கள், மொய்க்கவர்கள் என கிரியேட்டிவாக யோசித்து உருவாக்குவதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தொழிலாளர் பற்றாக்குறையால் பல முறை புரொடக்சன் திணறும்போது, தானே மெஷின் முன் அமர்ந்து தைத்து, குறிப்பிட்ட நேரத்தில் சப்ளை பண்ணுவதில் குறியாயிருப்பார். பெண்களை பணிக்கு அமர்த்தும்போதே, தைக்க வைத்து அவர்களின் Capacityயை அறிந்து யூகித்து அதற்கேற்ற வேலை கொடுத்து காரியம் சாதிப்பது குளோரியின் ஹைலைட். சரக்கு விற்பனை ஆகாமல் தேங்கும் சமயம், மாலை 5 மணிக்கு பீக் அவரில் டெம்ப்ரவரியாக ஸ்டால் போட, அதுவே செலவில்லாத விளம்பரமாகி விடும் கம்பெனிக்கு.

முதலாளி என்ற பந்தா இல்லாமல் தொழிலாளர்களுடன் இணைந்து பணிபுரியும் சக சகோதரி குளோரி. சணல் தயாரிப்புதான் மெயின் என்றாலும், திருமண அழைப்பிதழ்கள் தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். மூலப் பொருட்கள் தரமாக இருப்பது இவருக்கு கூடுதல் பலம்.

Bags
Bags

கஸ்டமர்கள், நியூ எர்த் புராட்க்ட்ஸின் தயாரிப்புகள் நீடித்து உழைப்பதாக மகிழ்ச்சியுடன் சொல்வதை கேட்கும்போது பெருமையாக இருக்கும். திடீர் ஆர்டர்கள் வரும்போது, இரவிலும் கண் விழித்து உழைத்து சப்ளை செய்து வாடிக்கையாளர்களின் மனதில் இடம்பிடித்த எவர் பவர் பெண்மணி குளோரி.  பல வருட, இடைவிடாத உழைப்பில் காலூன்றி, மகனை ஆளாக்கி, மகளை மருத்துவம் படிக்க வைக்கிறார்.

வருத்தத்தை புறந்தள்ளி விவேகமாக முடிவெடுத்து, பயன் இன்றி இடத்தை அடைத்துக்கொண்டிருந்த பல லட்சம் பெறுமான மெஷினை விற்று அந்த இடத்தை மூலப்பொருட்களின் குடோனாக்கி விட்டார்.

லாக்டவுன் சமயத்தில், ஆர்டர்கள் இல்லாத நேரத்தில், மார்க்கெட்டில் மொத்தமாக காய்கள் வாங்கி, சொல்யூஷன் போட்டு கழுவி Ready to chop என வாட்ஸ்அப் மூலம் விளம்பரம் பண்ணி அருகில் உள்ள கஸ்டமர் இல்லங்களுக்கு மாஸ்க்குடன் நேரில் சென்று சப்ளை செய்து மெர்சலாக்கி விட்டார்.

எந்தவித பின்புலமும் இல்லாமல், மாரல் சப்போர்ட், பைனான்ஸ் சப்போர்ட் இல்லாது தனிமனுஷியாக இறங்கி சந்தித்த பிரச்னைகளைச் சமாளித்து, இன்று நகரில் பெயர் சொல்லக்கூடிய சிறுதொழில் நிறுவனத்தின் உரிமையாளர் குளோரியை நான் வியந்த Super woman என கொண்டாடி மங்கையர் மலருக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.

பின்குறிப்பு: எல்லாத் தகவல்களும் திரட்டி, கொரியர் பண்ண ஆயத்தமாகும்போது, குளோரி சென்ற கார் விபத்தை சந்தித்து, நேற்றுதான் இயல்பு நினைக்கு திரும்பினார்கள் என்பதைக் கேள்விப்பட்டு மனம் ஒடிந்துபோனேன். May Glory have a glorious future. My prayers.

என்.கோமதி, திருநெல்வேலி

SUPER WOMAN - குளோரி

சுய அறிமுக உரை:

என்னைப் பற்றி...

நான், ஆசிரியை ஆகும் ஆர்வத்தில் B.Ed படித்தேன். நிறைவேறாமல் போய்விட்டது. குடும்ப பொறுப்பை ஏற்கும் சூழ்நிலை ஏற்பட்டது. தொழில் தொடங்க நினைக்கும்போது தாம்பூலப் பைகள் தயாரிப்பில் கவனம் செல்லவே, சிரமப்பட்டு பணம் புரட்டி பல லட்சம் பெறுமானமுள்ள மிஷினை வாங்கி 2012ல் ஆரம்பித்தேன். தொழில் பிடிபட்டு ஆர்டர்கள் பெருகும் நேரம் ஒரு சறுக்கல். அரசின் பிளாஸ்டிக் தடைச் சட்டத்தால், உற்பத்தி நிறுத்தப்பட்டு மீண்டும் பழைய இடத்தில் நின்றேன். அப்போது நினைத்தேன்... "சுற்றுச்சூழல் பாதுகாக்கும் பொருட்களை தயாரிக்கலாமே."

Enga ooru super woman - Glory
Enga ooru super woman - Glory

நியூ எர்த் புராடக்ட்ஸ் என்ற நிறுவனத்தின் அடுத்தக்கட்ட பயணம் தொடங்கியது. இன்றுவரை அதில் தெளிவாக இருக்கிறேன். முதலில் நான்கு பணியாளர்களுடன் சிறு அறையில் தொடங்கி இன்று 15ஆக உயர்ந்து பாளையங்கோட்டையில் விசாலமான இடத்தில் இயங்கி வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என கடல் தாண்டியும் எங்கள் சணல் பொருட்கள் வாடிக்கையாளர் விருப்பம்போல் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.

மெட்டீரியலின் தரம், தையலின் நேர்த்தி, பிரிண்ட்டின் கச்சிதம் இவற்றிற்காகவே கஸ்டமர்கள் தேடி வருவதோடு, மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்வதால் தொழிலில் தொய்வில்லை. இடையே, திருமண அழைப்பிதழ்கள் அச்சிட்டு கொடுப்பதோடு, நிச்சயதார்த்ததின் போதும் வாசிக்கப்படும் பட்டோலையும் தயாரித்துக் கொடுக்கிறேன்.

சென்ற வருடம் திசையன்விளையில் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் partnership Eco citizen exports என்ற பெயரில் மற்றுமொரு யூனிட் ஆரம்பித்து அதிலும் தொழிலானது 20 பெண்களுடன் ஸ்மூத்தாகப் போய்க்கொண்டிருக்கிறது.

Enga ooru super woman - Glory
Enga ooru super woman - Glory

மகன் அபியூத் சாப்ட்வேர் இன்ஜினியர், மகள் லெஸ்லி ஸ்னோ ரோஸ் ரஷ்யாவில் மருத்துவம் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். இருவரும் என்னை உயர்த்த தாங்கும் தூண்கள்.

தொழிலில் உற்ற சகோதரனாய் உடன் வரும் ராஜேஸ் நிறுவனத்தின வளர்ச்சியில் அக்கறை அதிகம் கொண்டவன். கோமதி அம்மா போல என்னை வளர்ச்சியில் அக்கறை கொண்ட நலம் விரும்பிகள் பலர். அவர்களின் அனுசரனையில் பாதுகாப்பாகவே உணர்கிறேன்.

Enga ooru super woman - Glory
Enga ooru super woman - Glory

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2012ல் NEEDS scheme or first women entrepreneur 6 select substidy ஆவணத்தை நேரில் வழங்கினார்கள். விடா முயற்சியால் கஸ்டமர்கள் எண்ணிக்கை கூடி, ஆர்டர்கள் அதிகமாகி உலகம் முழுவதும் எங்கள் தயாரிப்பு செல்ல வேண்டும் என்பதே என் ஆசை, தரமான, நேர்த்தியான உற்பத்திக்காக வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள் என்ற என் தன்னம்பிக்கை நிச்சயம் நிறைவேறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com